பள்ளி மாணவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 23 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் கல்விச் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணிகளிலும் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான புகாரில் உண்மைத்தன்மை நிரூபணம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர்களின் கல்வித்தகுதி ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த பிப்ரவரிரியில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மாணவர்களிடம் தவறான செயலில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டன. அதன்படி 238 ஆசிரியர், பணியாளர்கள் மீது பாலியல் புகார்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் 36 சம்பவங்கள் பள்ளிக்கு வெளியே நடைபெற்றவையாகும். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 11 ஆசிரியர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 11 பேர் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு மீண்டும் அவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்களில் 7 பேர் மரணம் அடைந்துவிட்டனர். எஞ்சியவர்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 46 ஆசிரியர்கள் மீதான விசாரணை இறுதிகட்டத்தை எட்டியிருந்த நிலையில், 23 பேர் மீதான பாலியல் புகார்கள் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அந்த 23 பேரையும் பள்ளிக்கல்வித் துறை பணிநீக்கம் செய்துள்ளது. தொடர்ந்து அவர்களின் கல்வி சான்றிதழ்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக பெற்று அரசாணை 121-ன்படி ரத்து செய்வதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. மீதமுள்ளவர்கள் மீதான புகார்கள் மீது விரைந்து விசாரணை நடைபெற்று வருகிறது.