மதுரை: “எவ்வளவு நாள் இந்த அழுக்கை சுமப்பது என்பதால், வேறு வழியின்றி என் மீதான புகாருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இந்த வழக்கில் இரு தரப்பும் பேசி சமரசம் செய்து தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டதற்கு, “அதற்கு வாய்ப்பு இல்லை. அது தேவையும் இல்லை” என்றார் சீமான்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்ச்சி இன்று (மார்ச் 3) நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இதற்காக அவர் மதுரை காளவாசல் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: “என் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் தடைதான் கோரியிருந்தோம். இது ஓர் ஆதாரமில்லாத அவதூறு வழக்குதான். அதனால், உயர் நீதிமன்றத்திலும் அதே கோரிக்கைதான் வைத்திருந்தோம். இதைக் கேட்கும், பார்க்கும் அனைவருக்குமே தெரியும். அதனால்தான், உயர் நீதிமன்றத்தில் நானே இந்த வழக்கைத் தொடர்ந்தேன்.
இது ஒரு தொல்லை. ஒரு 14-15 ஆண்டுகள் இழுக்கிறது. அதனால்தான் நானே இந்த வழக்கைத் தொடர்ந்தேன். எப்படி இந்த வழக்கை விசாரித்தாலும், இது முழுக்க பொய், அவதூறு என்றுதான் முடியும். என் மீது திட்டமிட்டு சுமத்தப்பட்ட பழி, இழிவுதான் இது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தடையை வரவேற்கிறேன். அதேநேரம், மேலதிகமாக இந்த வழக்கில் எப்படி சட்டப்படி நகர வேண்டுமோ, அதன்படி செய்வோம்” என்றார்.
அப்போது 12 வாரங்களுக்குள் இந்த வழக்கில் இரு தரப்பும் பேசி சமரசம் செய்து தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டதற்கு, “அதற்கு வாய்ப்பு இல்லை. அது தேவையும் இல்லை. அதைப்போய் பேசிக் கொண்டிருக்க முடியாது” என்றார் சீமான். | முழு விவரம் > விஜயலட்சுமி விவகாரம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது கம்யூனிஸ்ட் கட்சி என்பது கார்ப்பரேட்டாக மாறிவிட்டது. என் மீதான வழக்கு பற்றி பேசுகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, பள்ளி மாணவி மரணம் உள்ளிட்ட வழக்குகள் குறித்து கம்யூனிஸ்டுகள் ஏன் பேசவில்லை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் மீது மதிப்பு உள்ளது. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தி என் மீது இழிவை சுமத்த வேண்டும் என்ற நோக்கமே உங்களது நோக்கமா? ஜீவானந்தம், சங்கரய்யா போன்ற தலைவர்களோடு கம்யூனிஸ்ட் கட்சி செத்துப் போனது.
எம்ஜிஆர் ,ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது பெற்ற வாக்கு சதவீதத்தை அக்கட்சியால் பெற முடியவில்லை. தற்போது 6 இடங்களில் தான் அக்கட்சி உள்ளது. கம்யூனிஸ்ட் தலைவர்களை எனக்கு பிடிக்கும். தற்போது அவர்களுடைய செயல்பாடுகள் பிடிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு என்ன என்ற கேள்வி எழுகிறது.
என் மீது வழக்கு தொடர்ந்த பெண் (நடிகை விஜயலட்சுமி) எனது தாயாரை மட்டுமின்றி, குறிப்பாக 15 ஆண்டாக என் குடும்பப் பெண்களை திட்டமிட்டு திட்டும்போது தாங்கிக் கொண்டே வருகிறேன். எவ்வளவு நாள் இந்த அழுக்கை சுமந்து கொண்டிருப்பது? அதற்கு ஒரு முடிவு கட்டவே நினைக்கின்றேன். என்னை திட்டும் போதெல்லாம் எனது தாயாரையும் அவர் இழுத்து பேசுகிறார். நானும் விலகி விலகிச் சென்று அமைதி காத்தாலும் வேறு வழியின்றியே நானும், என் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய வழக்கு தொடுத்தேன்.
திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டில் ஒரு லட்சம் போராட்டங்கள் நடந்திருக்கின்றன” என்றார். திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், “மதியாதவர் தலைவாசல் மிதிக்கமாட்டேன்” என்றார்.