பட மூலாதாரம், RAJESH
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் நெய் கலப்படம் செய்யப்பட்ட வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
“அவர்கள் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆறரை லட்சம் கிலோ ரசாயனங்களை வாங்கி, அதிலிருந்து தயாரிக்கப்பட்ட நெய்யை வழங்கினார்கள்” என்று கசியவிடப்பட்ட SIT ரிமாண்ட் அறிக்கையை சுட்டிக்காட்டி தெலுங்கு தேசம் (TDP) தலைவர் பட்டாபி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நெய், மோனோகிளசரைடு மற்றும் அசிட்டிக் அமில எஸ்தர் போன்ற ரசாயனங்களால் தயாரிக்கப்பட்டதாகவும், ஒரு லிட்டர் பால் கூட வாங்காமல் லட்சக்கணக்கான கிலோ நெய் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைக் சுட்டிக்காட்டிய ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், “சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
“ரிமாண்ட் அறிக்கையில் எந்தவிதமான மோசடியும் நடந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை. அரசியலுக்காக சந்திரபாபு நாயுடு கடவுளையும் பயன்படுத்துகிறார்” என்று YSRCP தலைவர் சஜ்ஜலா ராமகிருஷ்ண ரெட்டி விமர்சித்துள்ளார்.
பட மூலாதாரம், facebook/Telugu Desam Party
தெலுங்கு தேசம் கட்சி என்ன சொல்கிறது?
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாத லட்டுவுக்கு கலப்பட நெய் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட, வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ், சிபிஐயின் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், வழக்கில் ஏ16 ஆக உள்ள தொழிலதிபர் அஜய் குமார் சுகந்த் சிபிஐ குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது குறித்து நெல்லூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட SIT ரிமாண்ட் அறிக்கையில் பல சுவாரஸ்யமான உண்மைகள் இருப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பட்டாபி தெரிவித்தார்.
எனினும் அந்த ரிமாண்ட் அறிக்கையை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
இந்த ரிமாண்ட் அறிக்கை குறித்து ஊடகங்களிடம் பேசிய பட்டாபி, “போலே பாபா டெய்ரி நிறுவனம், அஜய் குமார் சுகந்த் என்ற நபரிடமிருந்து 7.94 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6.5 லட்சம் கிலோ எடையுள்ள ரசாயனங்களை வாங்கியது. இவை 2022 மற்றும் 2024-25-க்கு இடையில் வாங்கப்பட்டன. இந்த நிறுவனம், ஒரு லிட்டர் பால் கூட வாங்காமல், ரசாயனங்கள் மற்றும் பாமாயிலைப் பயன்படுத்தி நெய் தயாரித்துள்ளது. கொரியாவிலிருந்தும் ரசாயனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. மோனோகிளசரைடு மற்றும் அசிட்டிக் அமில எஸ்தரைப் பயன்படுத்தி நெய் தயாரிக்கப்பட்டது. போலே பாபா டெய்ரியின் உரிமையாளர்களுக்குச் சொந்தமான ஹர்ஷ் நிறுவனத்தின் பெயரில், சுகந்த் ஆயில் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அஜய் சுகந்த்திடமிருந்து இந்த கொள்முதல்கள் செய்யப்பட்டன,” என்று தெரிவித்தார்.
ஆந்திர அரசியலிலும், அதிகாரத்துவ மற்றும் ஊடக பிரமுகர்களிடையேயும் ரிமாண்ட் அறிக்கையில் உள்ள விவரங்கள் பரவி வருகின்றன. சில ஊடகங்கள் வெளியிட்ட விவரங்களை பிபிசி ஆராய்ந்தது.
பட மூலாதாரம், FACEBOOK/TTD
கசிய விடப்பட்ட இந்த ஆவணத்தில், அப்போதைய டி.டி.டி தலைவர் ஒய்.வி சுப்பாரெட்டி மற்றும் அவரது செயலாளர் ஆகியோரின் பங்கு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. செயலாளர் கடூர் சின்னப்பண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆவணத்தில் உள்ள விவரங்களின்படி, 2022-ஆம் ஆண்டில், அடையாளம் தெரியாத ஒருவர் போலே பாபா டெய்ரி குறித்து ஒய்.வி. சுப்பாரெட்டியிடம் புகார் அளித்தார். அந்தக் கடிதம், 2022 மே 16 அன்று அப்போதைய டி.டி.டி கொள்முதல் துறை பொது மேலாளர் ஆர்.எஸ்.எஸ்.வி.ஆர் சுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, நெய்யை தரப் பரிசோதனைக்காக CFTRI ஆய்வகத்திற்கு அனுப்புமாறு, சுப்பா ரெட்டி, சுப்பிரமணியத்திடம் பரிந்துரைத்தார். ஜூன் மாதத்தில், பிரீமியர் அக்ரோ ஃபுட்ஸ், வைஷ்ணவி டெய்ரி ஸ்பெஷாலிட்டீஸ் மற்றும் போலே பாபா ஆர்கானிக் டெய்ரி மில்க் ஆகியவற்றிலிருந்து வரும் டேங்கர் லாரிகளில் இருந்து நெய் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதைத் தவிர, போலே பாபா நிறுவனம் வழங்கிய டின்களில் இருந்து நெய் மாதிரிகளையும் டி.டி.டி அதிகாரிகள் மைசூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பினர்.
பட மூலாதாரம், X/yvsubbareddymp
ஆகஸ்ட் மாதம் முடிவுகள் வந்ததும், அனைத்து மாதிரிகளும் கலப்படம் செய்யப்பட்டவை என்பதை ஆய்வகம் உறுதிப்படுத்தியது. பீட்டா-சிட்டோஸ்டெரால் முறையைப் பயன்படுத்தி பரிசோதித்தபோது, நெய்யில் தாவர எண்ணெய்களும் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும், சப்ளையர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரீமியர் அக்ரோ ஃபுட்ஸ் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரீஸ் ஆகியவை 2024 வரை நெய் வழங்க அனுமதிக்கப்பட்டன. போலே பாபா அக்டோபர் 2022 வரை அனுமதிக்கப்பட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“2022 மே மாதத்தில், போமில் ஜெயின், கைலாஷ் சந்த் மங்லா மற்றும் பிபி ஸ்ரீனிவாசன் ஆகியோருடன் ஹைதராபாத்தில் ஒய்.வி. சுப்பாரெட்டியைச் சந்தித்தார். தங்கள் ஆலையை குறைந்தது ஓராண்டிற்கு ஆய்வு செய்ய வேண்டாம் என்று அவர்கள் சுப்பாரெட்டியை கேட்டுக்கொண்டனர். மேலும், சுப்பாரெட்டியின் பிஏவாக இருந்த கடூர் சின்னப்பண்ணா, ஒரு கிலோ நெய்க்கு 25 ரூபாய் என்ற அளவில் லஞ்சம் கேட்டதாக போமில் ஜெயின் புகார் அளித்தார். விசாரணையின் போது, கடூர் சின்னப்பண்ணாவுக்கு பிரீமியர் அக்ரோ நிறுவனம் சுமார் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணப் பரிவர்த்தனைகள் புது டெல்லியில் நடைபெற்றன” என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், உயர் நீதிமன்றத்தில் ஒய்.வி. சுப்பா ரெட்டி தாக்கல் செய்த மற்றொரு மனுவும் விவாதப் பொருளாக மாறியது. தனது வங்கிக் கணக்குகளை சிபிஐ சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரிக்கக் கூடாது என்று கோரி சுப்பா ரெட்டி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை எதிர்த்து சிபிஐ தனது வாதங்களை முன்வைத்தது.
“ஒய்.வி. சுப்பா ரெட்டி எந்தத் தவறும் செய்யவில்லை என்றால், அவர் ஏன் சிறப்பு விசாரணைக் குழுவிடம் கணக்கு விவரங்களைக் கொடுக்காமல் நீதிமன்றத்திற்குச் சென்றார்? அவர் கையாடல் செய்யவில்லை என்றால், ஏன் உண்மையை வெளிப்படுத்தவில்லை?” என்று பட்டாபி கேள்வி எழுப்புகிறார்.
பட மூலாதாரம், FB/Pawan Kalyan
மீண்டும் எழுப்பப்படும் ‘சனாதன வாரியம்’ கோரிக்கை
திருமலை திருப்பதி லட்டு விவகார விசாரணை நாடு முழுவதும் பரவலான கவனத்தைப் பெற்றது.
இந்தச் சூழலில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆங்கில செய்தித்தாள்களில் வந்த கட்டுரைகளை மேற்கோள் காட்டி, சனாதன தர்ம வாரியத்தை அலுவல் தளமாக நிறுவ வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் ஒருமுறை எழுப்பினார்.
“முந்தைய டி.டி.டி வாரியத்தின் தவறான நிர்வாகமும் நெறிமுறையற்ற செயல்களும் மிகப்பெரிய மற்றும் மன்னிக்க முடியாத வேதனையை ஏற்படுத்தி, திருமலையின் புனிதத்தை களங்கப்படுத்தியுள்ளன. சனாதன தர்ம பரிரக்ஷன் வாரியத்தை நிறுவுவது எதிர்காலத்திற்கான ஒரு படியாகும்.” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், FB/Sajjala Ramakrishna Reddy
சதித்திட்டம் மற்றும் தவறான தகவல்
தங்களுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்புவதற்காக சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒய்எஸ்ஆர்சிபி குற்றம் சாட்டுகிறது.
“அவர்கள் தங்கள் சொந்த ஆட்களையும் சிறப்பு விசாரணைக் குழுவில் சேர்த்துள்ளனர். சிறப்பு விசாரணைக் குழு என்றால் SIT (உட்கார்தல்) என்று அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் விருப்பப்படி ரிமாண்ட் அறிக்கையையும் எழுதி, எங்களுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். திருமலையில் நெய் பரிசோதனைக்கான ஆய்வகத்தை அமைத்தது எங்கள் அரசுதான். மைசூருக்கு சோதனைக்காக நெய்யை நாங்கள் அனுப்பினோம். போலே பாபா டெய்ரி சரியாக இல்லாததால் அவர்களுக்கு நாங்கள் ஆர்டரை நிறுத்தினோம். எங்கள் தரப்பில் தவறு இருந்தால், நாங்கள் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? 2024 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உங்கள் அரசாங்கத்தின் ஆட்சியிலும் அந்த நெய் வந்ததே?” என்று ஒய்எஸ்ஆர்சிபி தலைவர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா ரெட்டி கேள்வி எழுப்பினார்.
“சந்திரபாபு கடவுளையும் அரசியலுக்குப் பயன்படுத்துகிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சொல்வதைவிட, தவறு என்று கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுங்கள். தெலுங்கு தேசம் ஆட்சியின் போது இருந்ததை விட சிறந்த ஆய்வகங்களை நாங்கள் அமைத்துள்ளோம், அதனால்தான் கலப்பட நெய் கொண்ட டேங்கர்களை திருப்பி அனுப்பினோம். 2019-2024 க்கு இடையில் வாங்கிய அனைத்து நெய்யும் கலப்படம் செய்யப்பட்டதாக சிபிஐ உறுதிப்படுத்தியதாகக் கூறும் ஓர் ஆவணமாவது உள்ளதா?” என்று சஜ்ஜாலா கேள்வி எழுப்பினார்.
ஊடகங்களிடம் கசிந்த ரிமாண்ட் அறிக்கை முரண்பாடாக இருப்பதாக விமர்சித்த அவர், அதில் ஒரு இடத்தில் பாமாயிலும், மற்றொரு இடத்தில் ரசாயனங்களும் என குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறினார். எங்கும் கலப்படம் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியை ஏற்கனவே விசாரித்த சிறப்பு விசாரணை குழு, சமீபத்தில் ஒய்.வி. சுப்பாரெட்டியை விசாரணைக்கு அழைத்துள்ளது. அவர் விரைவில் விசாரணைக்கு ஆஜராவார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு