பட மூலாதாரம், AFP via Getty Images
நேபாள இளைஞர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கோபம் தெருக்களில் மட்டும் இல்லாமல் இணையதளத்திலும் தெளிவாகக் காணப்படுகிறது.
சமூக ஊடகங்களில் ‘நெபோகிட்’ என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது.
இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, நேபாள தலைவர்களின் குழந்தைகள் எவ்வளவு செல்வ செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நேபாள இளைஞர்கள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் காட்டுகிறார்கள்.
அரசியல்வாதிகளின் குழந்தைகளின் சொகுசு கார்கள், பிராண்டட் ஆடைகள், விலையுயர்ந்த கடிகாரங்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
‘சாமானிய மக்கள் உயிர்வாழப் போராடுகிறார்கள், ஆனால் தலைவர்களின் குழந்தைகள் எல்லா வசதிகளையும், ஆடம்பரங்களையும் அனுபவிக்கிறார்கள்’ என்ற செய்தியை நேபாள இளைஞர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
திங்கள்கிழமை நேபாளத்தில் ஆயிரக்கணக்கான ஜென் Z இளைஞர்கள் தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர், இந்த இளைஞர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். “எங்கள் வரிகள், உங்கள் செல்வம்” என்று கோஷம் எழுப்பினர்.
தலைவர்களின் குழந்தைகளுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது என்று நேபாள இளைஞர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதேபோல் நேபாளத்தில் ஊழல் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், அரசாங்கப் பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், அதிகாரத்தில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் பொதுமக்கள் நம்புகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
பிரதமர் ஒலியை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள்
அரசாங்கம் ஊழலை நிறுத்தியிருக்க வேண்டும், ஆனால் எதிர்ப்புக் குரலை அடக்க சமூக ஊடகங்களைத் தடை செய்தது என்று மக்கள் கூறுகிறார்கள்.
தற்போது ராஜினாமா செய்துள்ள நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஏன் பேஸ்புக், யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் ஆகியவற்றை முடக்க ஏன் முடிவு செய்தார்? மக்கள் கோபத்தில் வெடிப்பார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கவில்லையா? என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மறுபுறம், போராட்டங்களை அரசு கையாண்ட விதத்தில் 19 பேர் உயிர் இழந்துள்ளனர்.
விஜயகாந்த் கர்ணா டென்மார்க்கிற்கான நேபாள தூதராக இருந்தவர். காத்மாண்டுவில் ‘சமூக உள்ளடக்கம் மற்றும் கூட்டாட்சி மையம்’ (CEISF) என்ற சிந்தனைக் குழுவை அவர் நடத்தி வருகிறார்.
“கே.பி. சர்மா ஒலி ஜனநாயக விரோத தலைவராக மாறிவிட்டார். நீதிமன்றத்தின் பெயரில் எதிர்ப்புக் குரலை அடக்க அவர் சமூக ஊடகங்களைத் தடை செய்தார். சமூக ஊடக கணக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், அவற்றைக் கண்காணிக்க ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் அதைத் தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றம் சொல்லவே இல்லை” என்று பிபிசி ஹிந்தியிடம் கூறினார் விஜயகாந்த் கர்ணா.
தொடர்ந்து பேசிய விஜயகாந்த் கர்ணா, “ஊடகங்களை கட்டுப்படுத்த கே.பி. சர்மா ஒலி முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் அவர் பிரதான ஊடகங்களுக்கு எதிராக இதுபோன்ற மசோதாக்களை கொண்டு வந்துள்ளார்”என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
தீப்பொறியாக மாறிய சமூக ஊடகங்கள் மீதான தடை
இந்த இயக்கம் சமூக ஊடகத் தடையைத் தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டது என்று நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உண்மையான பிரச்னை, ஊழல்தான்.
நேபாளத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான மை ரிபப்ளிகா, அதன் தலையங்கத்தில், “ஜென் Z இளைஞர்களின் போராட்டம் சமூக ஊடகத் தடையைப் பற்றியது மட்டும் அல்ல. ஊழல் மற்றும் மோசமான நிர்வாகத்துக்கு எதிரான மக்களின் கோபம் ஏற்கனவே இருந்தது. சமூக ஊடகத் தடைக்குப் பிறகு அந்த கோபம் தெருக்களில் தெளிவாகக் காணப்படுகிறது. இந்தத் தடை ஒரு தீப்பொறியாக செயல்பட்டது” என்று எழுதியிருந்ததது.
மேலும், “இளைஞர்கள் ஒரே நாளில் அரசாங்கத்தின் அடித்தளத்தையே அசைத்துவிட்டனர். ஊழல் செய்யும் தலைவர்களின் குடும்பங்களின் ஆடம்பர வாழ்க்கை முறையால் நேபாள மக்கள் கோபத்தில் உள்ளனர். ஒரே நாளில் பல இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர், இதை புறக்கணிக்க முடியாது” என்றும் அந்த நாளிதழ் குறிப்பிட்டது.
நேபாள திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினரான கணேஷ் குருங், காத்மாண்டுவில் நேபாள மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நேபாள இளைஞர்கள் அச்சுறுத்தும் வகையில் வேலையின்மையை எதிர்கொள்வதாக குருங் கூறுகிறார்.
“நேபாள வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் தகவல்படி, தினமும் சராசரியாக 2200 பேர் வளைகுடா நாடுகள், மலேசியா மற்றும் தென் கொரியாவிற்குச் செல்கிறார்கள். நட்பு நாடான இந்தியாவுக்குச் செல்லும் எண்ணிக்கையும், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணிக்கையும் இதில் சேர்க்கப்படவில்லை” என்று அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய கணேஷ் குருங், “அவர்கள் சம்பாதிக்கும் பணம் நேபாள பொருளாதாரத்திற்கு உயிர்நாடி. அவர்கள் வருவாய் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீதம் பங்களிக்கிறது. விவசாயம் 25 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது, சுற்றுலா ஆறு முதல் ஏழு சதவீதம் வரை மட்டுமே பங்களிக்கிறது. மொத்தம் 40 லட்சம் நேபாளர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். இதில் இந்தியாவில் வேலை செய்பவர்கள் சேர்க்கப்படவில்லை,” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது ஏன் இந்த ஏமாற்றம்?
நேபாளத்தின் பிரபல சிந்தனையாளரான சி.கே. லால், “ஒலி ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பை பொறுத்துக்கொள்ள மாட்டார். இது புதிதல்ல. 2015-ல் மாதேஸ் இயக்கத்தின் போது நடந்த கொடூரமான கொலைகளை நீங்கள் நினைவில் வைத்திருக்கலாம். ஆனால் மாதேஸ் பற்றிய பிரச்னைகள் காத்மாண்டுவின் ஊடகங்களில் வருவதில்லை. ஒலி ஒரு ஆட்சியாளராக மோசமான தன்மையுடன் செயல்பட்டார். யாரும் அவருக்கு தீங்கு விளைவிக்க முடியாது என்று அவர் நம்புகிறார்” என்கிறார்
2008-ல் முடியாட்சி முடிந்ததிலிருந்து நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. முடியாட்சி முடிவுக்கு வந்த மகிழ்ச்சி இப்போது குறைந்துவிட்டதா? மக்கள் இப்போது ஒரு புதிய மாற்றத்தை விரும்புகிறார்களா?என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு, “முதலில், பொது நினைவுகள் நீண்ட காலம் நிலைக்காது. இரண்டாவதாக, இது ஒரு புதிய தலைமுறை. முடியாட்சியின் கொடுமையை அவர்கள் பார்த்ததில்லை. அதைப் பற்றிய அனுபவம் அவர்களுக்கு இல்லை. அந்தக் கொடுமையை பார்த்தவர்கள்தான் ஒப்பிட்டு பார்க்க முடியும். திங்கள்கிழமை நடந்த போராட்டத்தை எடுத்துக்கொண்டால்,அதில் கலந்துகொண்ட இளைஞர்கள் 25 வயதுக்குள் இருந்தனர். “என்று சிகே லால் பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மறுபுறம், அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் நிறைய தியாகங்களைச் செய்து ஆட்சிக்கு வந்ததாக நினைக்கிறார்கள். அதனால், அவர்கள் ஏதாவது செய்தாலும், மக்கள் மன்னித்து விடுவார்கள் என்று நம்புகிறார்கள். இரு தரப்பிலும் பிரச்னைகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்”என்றார்.
பட மூலாதாரம், Getty Images
நேபாளத்தில் புதிய தலைமை உருவாகுமா?
நேபாளத்தில் இந்த இயக்கம் புதிய தலைமையை உருவாக்கி பழைய கட்சிகளை பலவீனப்படுத்துமா?
காத்மாண்டு மேயர் பாலேன் ஷா ராஜினாமா செய்து தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நேபாளத்தில் மாற்று அரசியல் குறித்து பேசும்போது, பாலேன் ஷாவின் பெயர் அடிக்கடி அடிபடுகிறது.
மக்கள் பாலேன் ஷாவை ஏன் இவ்வளவு நம்புகிறார்கள்?
“மக்கள் பாலேன் ஷாவை ஒரு கவர்ச்சிகரமான ஆளுமையாகப் பார்க்கிறார்கள். அவர் ஒரு பாடகராக இருந்திருக்கிறார். அவருடைய படைப்புகளில் எந்த செல்வாக்கும் இல்லை. ஆனால் அவர் அரசாங்கத்திற்கு எதிராக பேசுகிறார். சிங் தர்பாரை தீ வைப்பேன் என்று பாலேன் ஷா சொன்னது போல, எந்தப் பொறுப்பான தலைவராலும் இப்படிப் பேச முடியாது. ஆனால் அவருக்கு இப்படிப் பேசுவதில் எந்த தயக்கமும் இல்லை. பதற்றத்தில் இருக்கும் மக்கள் இப்படிப் பேசும் ஆளுமையை விரும்புகிறார்கள்” என்று சி.கே. லால் கூறுகிறார்.
பாலேன் ஷா முதலில் ஒரு பாடகர் (rapper-ராப்பர்) என்பதால் அவருக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை என்கிறார் விஜயகாந்த் கர்ணா.
தலைமை இல்லாத இயக்கம் வெள்ள நீர் போன்றது என்றும் அது தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொள்ளும் என்றும் சி.கே. லால் கூறுகிறார்.
மேலும், “ஜென் Z இயக்கத்தின் கோபத்தை சில தந்திரமானவர்கள் பயன்படுத்திக் கொண்டு தலைவர்களாக மாறுகிறார்கள்” என்கிறார் சி.கே. லால்.
பட மூலாதாரம், Getty Images
ஜென் z இளைஞர்கள் இயக்கத்தைப் பற்றி பேசும்போது, ஊடுருவல்காரர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று ஓலி கூறியுள்ளார்.
ஊடுருவல்கள் என்றால் என்ன? காத்மாண்டுவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் நரேஷ் கியாவாலி இதுகுறித்து கூறுகையில், ஊடுருவல்கள் என்பது முடியாட்சியை விரும்புபவர்களையும், இந்து தேசத்தை கோருபவர்களையும் குறிக்கிறது என்கிறார்.
“இதைச் சொல்வதன் மூலம், ஒலி தனது தவறை மறைக்க முயற்சிக்கிறார். ஏதேனும் பெரிய இயக்கம் இருந்தால், பல வகையான மக்கள் அதில் சேரலாம். அதனால் மக்களின் கோரிக்கைகள் தவறானவை என்று சொல்ல முடியாது. மேலும், நீங்கள் குழந்தைகளின் உயிரைப் பறிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல” என்று கியாவாலி கூறுகிறார்.
ஊடுருவல்காரர்கள் குறித்த ஒலியின் கருத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று நேபாள முன்னாள் பிரதமர் பாபுராம் பட்டாராயிடம் கேட்கப்பட்டது.
“இது எந்த அர்த்தமும் இல்லை. அரசாங்கம் மக்களிடம் கொடூரமாக நடந்து கொண்டுள்ளது. ஒரு பெரிய இயக்கத்தில், சில தவறான நபர்கள் சேர வாய்ப்புள்ளது, ஆனால் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்று அர்த்தமல்ல. இந்த இயக்கத்தின் மூலம், நமது இளம் தலைமுறை புதிய தலைமையை உருவாக்கி, அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளை வெளியேற்றும் என்று நான் நினைக்கிறேன்,” என்று பட்டாராய் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு