0
பிரான்ஸில் குழந்தைகளுக்கான பால்மா உட்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சில பால்மா வகைகள் ஏற்கெனவே சந்தையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் ஒருவர் Nestlé நிறுவனம் தயாரித்த பால்மாவை உட்கொண்டதாக தெரியவருகிறது. மற்றொரு குழந்தை தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
தொடர்புடைய செய்தி – குழந்தைகளுக்கான பால் பொருள்களை சந்தையிலிருந்து மீட்டுக்கொள்கிறது Nestle
இரு குழந்தைகளின் மரணத்திற்கும் பால்மாவே நேரடி காரணம் என்பதற்கான உறுதியான ஆதாரம் தற்போது வரை இல்லை என்றும், இருப்பினும் மேலதிக ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே Lactalis உள்ளிட்ட நிறுவனங்கள் குழந்தைகளுக்கான பால்மாவின் சில தொகுதிகளை முன்னெச்சரிக்கையாக சந்தையிலிருந்து மீட்டுக்கொண்டுள்ளன. இந்த நடவடிக்கை பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பால்மாவில் நச்சுப்பொருட்கள் கலந்திருக்கும் சாத்தியம் இருப்பதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், Danone நிறுவனமும் சிங்கப்பூர் சந்தைக்காக தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பால்மாவை தற்காலிகமாக விநியோகிப்பதை நிறுத்திவைத்துள்ளது.