பட மூலாதாரம், Getty Images
“என்ன ஒரு அதிர்ச்சியூட்டும் பிழை! நமது அறிவியல் பாரம்பரியத்தில் நமது ஆர்வமின்மையை ஒப்புக்கொண்ட ஒரு வருத்தமான நிகழ்வு! பாஸ்கலைப் புரிந்துகொள்ள தவறியது எத்தனை பெரிய தவறு…!”
இந்த வலிமையான வார்த்தைகளுடன், பிரான்சின் முன்னணி கலாசார மற்றும் அறிவியல் நிறுவனமான இன்ஸ்டிட்யூட் டி பிரான்ஸ் (Institut de France) உறுப்பினர்கள், 17-ஆம் நூற்றாண்டின் சிறந்த அறிஞரான பிளேஸ் பாஸ்கல் கண்டுபிடித்த கணக்கிடும் இயந்திரமான பாஸ்கலின் (Pascaline) விற்பனைக்கு வரவிருப்பது குறித்து தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
நவம்பர் 1 அன்று லே மோந்த நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், “நவீன கணினியின் தோற்றமான பாஸ்கலின், பிரான்சை கணினி பயணத்தின் பிறப்பிடமாக மாற்றியது. இது உலகத்தைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைத்த ஒரு புரட்சியாகும்.” என இன்ஸ்டிட்யூட் டி பிரான்ஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்
மேலும், “இது நவீன காலத்தின் அறிவுக் கருத்தியல் மாற்றத்தில் நாட்டை முன்னணியில் நிறுத்தியதுடன், பிரெஞ்சு அறிவார்ந்த மற்றும் தொழில்நுட்பப் பாரம்பரியத்தின் முக்கிய அணிகலன்களில் ஒன்றாக உள்ளது” என்று குறிப்பிட்டனர்.
கிறிஸ்டிஸ் ஏல நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஏற்றுமதி உரிமத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்கள் பிரெஞ்சு அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
இந்த பாஸ்கலினை ஒரு தேசிய பொக்கிஷம் என்று வகைப்படுத்தப்பட்டிருந்ததை அரசு நீக்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த வகைப்பாடு இருந்திருந்தால் அது நாட்டிலேயே இருப்பதை உறுதி செய்திருக்கலாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, கிறிஸ்டிஸ் ஒரு தனிச்சிறப்பான சேகரிப்பை ஏலம் விடப்போவதாக அறிவித்தது: அது பிரெஞ்சுக்காரரான லியோன் பார்சேவின் சேகரிப்பு. இவருடைய தனிப்பட்ட நூலகத்தில் கிட்டத்தட்ட நூறு பொக்கிஷங்கள் இருந்தன.
அவற்றில் ஆரம்பகால அச்சுப் பிரதிகள், மறுமலர்ச்சிக் கால அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள், மிகவும் அரிதான கையெழுத்துப் பிரதிகள் மற்றும் ஐரோப்பிய சிந்தனையின் பரிணாமத்தைக் காட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் இருந்தன.
பட மூலாதாரம், Getty Images
இந்த சேகரிப்பின் முக்கியமான அம்சமாக இருந்தது, பிரெஞ்சு அறிஞர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் பாதுகாக்கும் அந்தச் சாதனம்தான்.
இந்த இயந்திரம் 2 மில்லியன் முதல் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் வரை விலை போகலாம் என்று மதிப்பிடப்பட்டது, மேலும் கிறிஸ்டிஸ் இதை “இதுவரை ஏலத்திற்கு வந்த அறிவியல் கருவிகளில் மிக முக்கியமான கருவி ” என்று விவரித்தது.
“இது ஒரு எளிய இயந்திரத்தை விட மேலானது. இது மனித வரலாற்றின் ஒரு முழு அத்தியாயத்திற்கு அடையாளமாக உள்ளது,” என்று விருதுபெற்ற பிரெஞ்சு கணிதவியலாளர் செட்ரிக் வில்லானி, ஏல நிறுவனத்தின் விளம்பர காணொளியில் கூறினார்.
வில்லானி இந்த அழகான கருவி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினார். பல நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதன் காரணமாக, பலர் இந்தக் கருவியை நேரில் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர். இந்தச் சேகரிப்பு நியூயார்க், பின்னர் ஹாங்காங் மற்றும் இறுதியாக ஏலம் நடைபெறவிருந்த பாரிஸுக்கு கடந்த நவம்பர் மாதம் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் கருங்காலி தண்டுகளால் அலங்கரிக்கப்பட்ட, ஒரு புத்திசாலித்தனமான கியர் அமைப்பின் ஒரு பகுதியான 8 சக்கரங்கள் கொண்ட மரப் பெட்டிக்கு பின்னால் உள்ள கதை என்ன?
பாஸ்கல்: பன்முகமும், அசாத்திய திறனும் கொண்டவர்
சாதனங்களின் கதைகள் பொதுவாக அவற்றைக் கண்டுபிடித்தவர்களின் கதைகளுடன் தொடங்குகின்றன, இந்தக் கதையும் அத்தகைய மேதமையால் நிரம்பி வழியும் ஒருவரைப் பற்றியதுதான்.
1623 இல் பிறந்து 39 ஆண்டுகளுக்குப் பிறகு இறந்த பிளேஸ் பாஸ்கலின் வாழ்க்கையைச் சுருக்கமாகக் கூறுவது கடினமான பணியாகும்.
பாஸ்கல் வரலாற்றின் சிறந்த பன்முக அறிஞர்களில் ஒருவர் ஆவார், அவர் கணிதம், இயற்பியல், தத்துவம் மற்றும் மத சிந்தனைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
இன்று, விஞ்ஞானிகள் அழுத்தத்தை பாஸ்கல்ஸ் என்ற அலகில் அளவிடுகின்றனர், இது வாயுக்கள் பற்றிய அவரது பணியைக் கௌரவிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது.
எண்களுக்கு இடையேயான ஆச்சரியமான உறவுகளைக் காட்டும் மற்றும் எண்ணும் சிக்கல்களைத் தீர்க்கும் ஒரு கருவியாகப் பயன்படும் முக்கோண எண் வடிவமான பாஸ்கல்ஸ் முக்கோணத்திற்காகவும் (Pascal’s triangle) அவர் நினைவுகூரப்படுகிறார்.
அழுத்தம் மற்றும் வெற்றிடம் குறித்து ஆய்வுசெய்தபோது, காற்று அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது என்பதையும், உண்மையில் வெற்றிடம் உள்ளது என்பதையும் நிரூபிக்கும் சோதனைகளை அவர் நடத்தினார்.
பிரெஞ்சு கணிதவியலாளர் பியர் டி ஃபெர்மாட்டுடன் நடந்த புகழ்பெற்ற கடிதப் பரிமாற்றத்தின் போது, அவர்கள் நவீன நிகழ்தகவு கோட்பாட்டிற்கான அடித்தளத்தை அமைத்தனர்.
அது போதாதென்று, அவர் ஒரு ஆழமான சிந்தனையாளர் மற்றும் ஒரு அற்புதமான எழுத்தாளராகவும் இருந்தார்: அவரது மிகவும் பிரபலமான புத்தகமான பென்சேஸ் (அதாவது, சிந்தனைகள்) பிரெஞ்சு இலக்கியத்தின் சிறந்த மற்றும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்ட படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
இவையனைத்தும் மிகவும் அறிவார்ந்ததாகத் தோன்றினாலும், பாஸ்கல் மிகவும் எதார்த்தமான காரியங்களுக்காகவும் நேரத்தை ஒதுக்கினார்.
தனது புகழ்பெற்ற பாஸ்கலின் விதியை நிரூபிக்க, அவர் குழாய்கள் மற்றும் அமுக்கிகளைப் (ஒரு சிலிண்டருக்குள் திரவத்தைத் தள்ளும் பகுதி) பயன்படுத்திச் சாதனங்களை உருவாக்கினார் – இவை நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிரஞ்சின் முன்னோடிகள் ஆகும்.
அவர் பாரிஸில் நகர்ப்புற வண்டிகளின் ஒரு அமைப்பையும் உருவாக்கினார் – இது நிலையான வழிகள், வழக்கமான கட்டணங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைகளைக் கொண்டிருந்தது. இது 1662-இல் செயல்படத் தொடங்கியது, சிலரால் இது நவீன பொதுப் போக்குவரத்தின் கருவாகக் கருதப்படுகிறது.
தந்தைக்காக உருவாக்கிய கருவி
பாஸ்கல் தனது தந்தையுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். அவரது தந்தை ஒரு நிதி நிர்வாக துறையில் அரசு அதிகாரியாக இருந்தார்.
அவரிடமிருந்து அவர் ஒரு அசாதாரண மற்றும் வழக்கத்திற்கு மாறான கல்வியைப் பெற்றார். பாஸ்கலின் தந்தையான எட்டியென் பாஸ்கல் ஒரு திறமையான கணிதவியலாளர் ஆவார், அவர் தனது காலத்தை தாண்டிய மேம்பட்ட கற்பித்தல் யோசனைகளைக் கொண்டிருந்தார். மேலும் அவர் தனது சொந்த முறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே தன் மகனுக்கு கல்வி கற்பித்தார்.
இதன் முடிவுகள் ஆச்சரியமாக இருந்தன: 11 வயதில், பாஸ்கல் அதிர்வுறும் பொருட்களின் ஒலிகள் குறித்த ஒரு சிறிய ஆய்வுக்கட்டுரையை எழுதினார்; 16 வயதில், அவர் ஒரு வடிவவியல் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.
அவரது தந்தை நார்மண்டியில் வரி வசூலிப்பாளராகப் பதவியேற்றபோது, 19 வயதான பாஸ்கல், கணக்கு வைக்கும் சுமையை குறைக்க உதவும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அடுத்த சில ஆண்டுகளில், கியர்கள் மற்றும் புத்திசாலித்தனமான இயந்திர கட்டமைப்பை உள்ளடக்கிய நேர்த்தியான மரத்தாலான அந்த கருவியின் வடிவமைப்பை அவர் செம்மைப்படுத்தினார்.
மிகவும் கடினமான விஷயம் என்னவென்றால், எண்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அமைப்பை வடிவமைப்பதாகும். இயந்திரம் ஒன்றுகளுக்கு ஒரு சக்கரத்தையும், பத்துகளுக்கு மற்றொன்றையும், நூறுகளுக்கு இன்னொன்றையும் கொண்டிருந்தது.
1645-ஆம் ஆண்டில் அது அவரது சமகாலத்தவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது, அத்துடன் “எண்கணித இயந்திரத்தைப் பார்க்கவும் பயன்படுத்தவும் ஆர்வமுள்ளவர்களுக்கான ஒரு அவசிய அறிவிப்பு” என்ற ஒரு துண்டுப் பிரசுரமும் உடன் இருந்தது, இது ஒரு கையேடாகவும் விளம்பரக் கருவியாகவும் செயல்பட்டது.
அதில், அவர் தனது கண்டுபிடிப்பின் நற்பண்புகளைப் போற்றுகிறார். மேலும், “நீங்கள் கையால் வேலை செய்யும்போது, தேவையான எண்களைத் தொடர்ந்து நினைவில் கொள்ளவோ அல்லது கடனாகப் பெறவோ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்பதையும், போதிய பயிற்சி இல்லாவிட்டால் அவற்றை மனப்பாடம் செய்து கடனாகப் பெறும்போது எத்தனை தவறுகள் ஏற்படுகின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள், இது விரைவில் மனதைச் சோர்வடையச் செய்கிறது. இந்த இயந்திரம் பயனரை இந்த சிரமத்திலிருந்து விடுவிக்கிறது; இதற்கு நல்ல மதிப்பீடு மட்டுமே தேவை, மேலும் இது நினைவாற்றல் குறைபாட்டிலிருந்து பயனரை விடுவிக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்
முக்கியமாக, பிழை ஏற்படும் அபாயம் பூஜ்ஜியம் என்று அவர் திட்டவட்டமாக கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
தனது கண்டுபிடிப்பை போலிகளில் இருந்து பாதுகாக்க, 1649 இல், அவர் பிரான்ஸ் மன்னர் லூயிஸ் XIV ஆல் கையொப்பமிடப்பட்ட ஒரு சிறப்பு ஓர் உரிமையை பெற்றார். இது “இனிமேல் மற்றும் என்றென்றைக்கும்.” அதன் நகல்களை உருவாக்குபவர்களுக்கு பெரிய அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் நகல்களை உருவாக்க தடை விதித்தது.
இது பாஸ்கலின் இயந்திரம் காப்புரிமைக்கு இணையான ஒன்றைப் பெற்ற முதல் இயந்திரமாக அமைந்தது.
தனது கண்டுபிடிப்பில் பெருமை கொண்ட பாஸ்கல், அவர் உட்பட பலரால் போற்றப்பட்ட அவரது காலத்தின் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் கற்றறிந்த பெண்களில் ஒருவரான சுவீடனின் ராணி கிறிஸ்டினாவுக்கு ஒரு பாஸ்கலின் இயந்திரத்தை அனுப்பினார்.
“அறிவியலின் ஒளியால் அளிக்கப்படும் சக்தி உங்களிடம் உள்ளது, மற்றும் அதிகாரம் என்ற பிரகாசத்தால் அறிவியல் மகிமைப்படுத்தப்படுகிறது (…),” என்று அந்தப் பரிசுடன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்த சில ஆண்டுகளில், பாஸ்கல் வெவ்வேறு பதிப்புகளை உருவாக்கினார், அவை அனைத்தும் ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டிருக்கவில்லை: கணக்கீட்டிற்கான தசம இயந்திரங்கள், அளவீட்டு இயந்திரங்கள் மற்றும் கணக்கு வைப்பதற்கு ஏற்ற இயந்திரங்கள் இருந்தன.
ஆனால் கைவினைத்திறன் மிக்க மற்றும் விலையுயர்ந்த உற்பத்தி செயல்முறை அதன் பெருமளவிலான விநியோகத்தைத் தடுத்தது.
இருப்பினும், லே மோந்த் கட்டுரை சுட்டிக்காட்டியபடி, “அவரது சமகாலத்தவர்கள் அதிசயித்து போனார்கள். கணிதவியலாளர் (ஜில்ஸ் டி) ரோபெர்வால் தொடங்கி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறிஞர்கள், இந்தச் சாதனத்தில் ஆர்வம் காட்டினர்.”
இது டிடரோட் மற்றும் டி’அலெம்பர்ட்டின் தகவல் களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் இயந்திரமாகவும் உள்ளது.
மேலும் இது லைப்னிட்ஸின் (Leibniz) சக்கரங்கள் அல்லது சிலிண்டர்கள் முதல் 19-ஆம் நூற்றாண்டின் எண்கணித அளவீடுகள் வரை பின்வந்த தலைமுறை கால்குலேட்டர்களுக்கு முன்மாதிரியாக மாறியது.
1970-இல் நிக்லாஸ் விர்த் வெளியிட்ட முதல் நவீன மற்றும் கட்டமைக்கப்பட்ட நிரலாக்க மொழிகளில் ஒன்றுக்கு பாஸ்கலின் பெயர் சூட்டப்பட்டது என்பதில் ஆச்சரியமில்லை, இது அந்தக் காலத்தின் பெரும் சாதனையின் நினைவாக இருந்தது.
சரி மீண்டும் தற்போதைய செய்திக்கு வருவோம்
பட மூலாதாரம், Getty Images
ஏலம் என்ன ஆனது?
பாஸ்கலினுக்கான ஏலம் நடைபெறாது என்று சில மணிநேரங்களுக்கு முன்பு கிறிஸ்டிஸ் உறுதிப்படுத்தியது.
எண்கணித இயந்திரத்தின் வெளிப்படையான விற்பனையை எதிர்ப்பவர்கள் பத்திரிகைகளில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டது மட்டுமல்லாமல், அதைத் தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அறியப்பட்ட ஒன்பது அசல் பாஸ்கலின்களில் ஆறு பிரெஞ்சு அருங்காட்சியகங்களில் இருந்தாலும், தனியார் கைகளில் இருந்த இது ஒன்றுதான் – “நில அளவைக்காக வடிவமைக்கப்பட்டது; இது பொருத்தமான அளவீட்டு அலகுகளுடன் (ஃபேத்தம்ஸ், அடி, அங்குலம், கோடுகள்) செயல்படுகிறது.” என அவர்கள் கருத்துகளை தெரிவித்தனர்
“இந்தக் கருவி, இதுவரை சில நிபுணர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தாலும், அது சர்வதேச அறிவியல் சமூகத்தால் ஆய்வு செய்யப்படவும், அது உருவாக்கப்பட்ட நாடு இந்தக் கருவியின் முழுமையான மாதிரியை வைத்திருக்கவும் ஒரு பொதுச் சேகரிப்பின் ஒரு பகுதியாக மாறுவது மிகவும் முக்கியம்.”
பாரிஸில் உள்ள நீதிமன்றம், மே மாதத்தில் பிரெஞ்சு கலாசார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஏற்றுமதி அங்கீகாரத்திற்குத் தற்காலிகத் தடையை விதித்தது.
பாரிஸ் நீதிமன்றத்தின் அறிக்கையின்படி சான்றிதழின் சட்டபூர்வமான தன்மை குறித்து “கடுமையான சந்தேகங்கள்” இருப்பதாக நீதிபதி முடிவு செய்தார்.
இந்த இயந்திரம் “பாரம்பரியக் குறியீட்டின் வரையறையின் கீழ் ‘தேசிய பொக்கிஷம்’ என்று வகைப்படுத்தப்படும்” என்று அவர் தீர்ப்பளித்தார், எனவே பாஸ்கலின் பிரெஞ்சு மண்ணை விட்டு வெளியேற முடியாது.
இருப்பினும், இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை இந்த முடிவு தற்காலிகமானது என்றும் அவர் மேலும் கூறினார்.
எனவே, குறைந்தபட்சம் இப்போதைக்கு, விவாதத்திற்குள்ளான பாஸ்கலின் பிரான்சில் தங்கியிருக்கிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு