படக்குறிப்பு, பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் கவுன்ட்டவுண் முடிந்து புறப்படும் காட்சிகட்டுரை தகவல்
பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் மூலம் EOS-N1 செயற்கைக் கோள் உள்ளிட்ட 16 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தை, ஜனவரி 12-ஆம் தேதி இஸ்ரோவின் வர்த்தக ரீதியான செயற்கைக் கோள்களை ஏவும் அமைப்பான NSIL (NewSpace India Limited) மேற்கொண்டது.
ஆனால் இத்திட்டத்தின் போது ராக்கெட்டின் செயல்பாட்டில் ஒரு முரண் ஏற்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. பயணப்பாதையில் ‘ஒரு விலகல்’ ஏற்பட்டதாக கூறியுள்ள இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் இது குறித்து விரைவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
கடந்த மே மாதம் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -சி61 திட்டம் முழுமையடையாத நிலையில், பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியாக நிபுணர்களால் பார்க்கப்படுகிறது.
வர்த்தக ரீதியான செயற்கைக்கோள் ஏவும் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், இது இஸ்ரோவுக்கு என்ன மாதிரியான பின்னடைவுகளை ஏற்படுத்தலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
பட மூலாதாரம், ISRO
படக்குறிப்பு, EOS-N1 செயற்கைக்கோளின் புகைப்படம்
பிஎஸ்எல்வி ராக்கெட் உலக சாதனை
இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலம் 63 திட்டங்களை நிறைவு செய்துள்ளது. இஸ்ரோவின் பெருமை மிகு திட்டங்களான சந்திரயான் 1, செவ்வாய் சுற்றுவட்டப்பாதை திட்டம், சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 போன்ற திட்டங்களுக்கான செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாகவே ஏவப்பட்டன. அத்தோடு 2017ம் ஆண்டில் ஒரே திட்டத்தில் 104 செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளது.
இவ்வளவு மதிப்பு வாய்ந்ததாக இஸ்ரோ முன்னிறுத்தும் இந்த பிஎஸ்எல்வி ராக்கெட்தான் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது.
2025ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி61 திட்டம் முழுமையடையவில்லை. இது இஸ்ரோவின் மிகவும் அரிதான ‘ராக்கெட் ஏவுதல்’ தோல்வியாக குறிப்பிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுமார் 8 மாத இடைவெளியில் ஜனவரி 12-ஆம் தேதி பிஎஸ்எல்வி ராக்கெட் மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்திருக்கிறது.
ஆனால் பிரச்னை இத்தோடு முடிந்துவிடவில்லை, சி61 திட்டத்தில் ராக்கெட்டின் தோல்விக்கான காரணம் என்ன என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர்,”எந்த ஒரு ராக்கெட் ஏவும் திட்டமாக இருந்தாலும், அது வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் திட்டத்திற்குப் பின் அதன் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும்.” என குறிப்பிடுகிறார். ஆனால் முந்தைய திட்டங்களின் தோல்வி மதிப்பீடு அறிக்கை (Failure Assessment Report) வெளிப்படையாக இருந்ததையும் வெங்கடேஸ்வரன் குறிப்பிடுகிறார்.
பிஎஸ்எல்வி-சி61 திட்டத்திற்கான தோல்வி மதிப்பீட்டு அறிக்கையும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் இது பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவில்லை என்பதால், தோல்விக்கான காரணம் தெரியவில்லை என கூறுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.
உலக சந்தையை குறிவைக்கும் இஸ்ரோ
இந்தியாவின் விண்வெளி ஒழுங்குமுறை நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ள இன்-ஸ்பேஸ்(IN-SPACe), அதன் எதிர்வரும் தசாப்தம் மற்றும் கண்ணோட்டங்களுக்கான உத்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. “2033-ம் ஆண்டுக்குள் உலக விண்வெளி சந்தையில் 8 சதவிகிதத்தை இந்தியா கைப்பற்றும், இதன் மூலம் அதன் விண்வெளி பொருளாதாரம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும்”
2023ம் ஆண்டு நிலவரப்படி உலக சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு 2 சதவிகிதமாகவும், பொருளாதார மதிப்பு 8.4 பில்லியன் டாலராகவும் இருக்கிறது என இன்-ஸ்பேஸ் குறிப்பிட்டிருந்தது.
இந்த லட்சியப் பார்வை வலுவான அரசு ஆதரவு, தொடர்ச்சியான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தனியார் விண்வெளித்துறையின் வளர்ச்சி ஆகியவற்றையே சார்ந்திருப்பதாக உலக பொருளாதார மன்றம் கூறுகிறது.
சர்வதேச சந்தையை குறி வைத்து இயங்கி வரும் நிலையில், இஸ்ரோவால் பெருமைக்குரியதாக முன்னிறுத்தப்படும் பிஎஸ்எல்வி ராக்கெட் “இருமுறை தோல்வியடைந்திருப்பது இஸ்ரோவுக்கு கவலை தரக்கூடிய ஒன்று. ஏனெனில், சர்வதேச சந்தையில் பிஎஸ்எல்வி ராக்கெட் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்.” என முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் குறிப்பிடுகிறார்.
ஆனால் பிஎஸ்எல்வியின் இந்த பின்னடைவு முன்னேற்றத்திற்கான பாடமாகவே இருக்கும் என்பது ஒரு தரப்பினரின் கருத்தாக உள்ளது. ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய விஞ்ஞானி சுவேந்து பட்நாயக், இதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த முன்னேற்றங்கள் நிகழும் என தெரிவித்தார்.
பிஎஸ்எல்வி சி-62 திட்டத்தில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், ISRO
படக்குறிப்பு, இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
ஜனவரி 12-ஆம் தேதி காலை 10.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி – சி62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இதிலிருந்து சுமார் அரை மணி நேரத்தில், ராக்கெட்டின் பயணப்பாதையில் ‘விலகல்’ இருந்ததை இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உறுதி செய்தார்.
ராக்கெட்டின் நிலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “4 நிலைகளைக் கொண்ட பிஎஸ்எல்வி ராக்கெட்டில், மூன்றாவது நிலையின் இறுதியில் இடையூறுகள் அதிகரித்தன. இதனைத் தொடர்ந்து ராக்கெட்டின் பாதை மாறியது உணரப்பட்டது.” என்று கூறினார்.
தரவுகளை ஆராயந்து வருவதாகவும், விரைவில் முழுமையான விளக்கம் தரப்படும் எனவும் வி.நாராயணன் கூறினார்.
பிஎஸ்எல்வி ராக்கெட் எப்படி இயங்குகிறது?
பட மூலாதாரம், ISRO
படக்குறிப்பு, பிஎஸ்எல்வி ராக்கெட்டின் பயணத்தை விளக்கும் வரைபடம்
பிஎஸ்எல்வி ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டது என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். அதாவது தொடர் வண்டியில் இருக்கும் ரயில் பெட்டிகள் போன்று “இது உண்மையில் 4 ராக்கெட்களின் இணைப்பு” என்று அவர் கூறினார்.
ராக்கெட் ஏவுதலுக்காக நிலைநிறுத்தப்படும் போது முதலில் கீழே இருப்பது பிஎஸ்1, இதற்கு அடுத்தபடியாக முறையே பிஎஸ்2, பிஎஸ்3 மற்றும் பிஎஸ்4 நிலைகள் உள்ளன. இவற்றில் பிஎஸ்1 மற்றும் பிஎஸ்3 திட எரிபொருளைக் கொண்டவை. பிஎஸ்2 மற்றும் பிஎஸ்4 திரவ எரிபொருளைக் கொண்டவை.
பிஎஸ் 1 நிலையிலிருக்கும் திட எரிபொருள் ராக்கெட் பூமியிலிருந்து ஈர்ப்புவிசைக்கு எதிராக கிளம்புவதற்கான உந்துவிசையைக் கொடுக்கிறது. இயக்கமற்ற நிலையிலிருந்து, இயங்கும் நிலைக்கு மாறுவதற்கான விசையைத் தரும் முதல் நிலை, ராக்கெட்டை சில கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே உயர்த்தும் என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.
இதன் பின்னர் பிஎஸ் 2 திரவ எரிபொருளைக் கொண்டது, இது ராக்கெட்டின் திசை போன்ற விஷயங்களை தீர்மானிக்கிறது. எந்த சுற்றுப்பாதைக்கு ராக்கெட் செல்லவிருக்கிறது என்பதை இந்த நிலை முடிவு செய்யும்.
இதன் பின்னர், பிஎஸ்3 மீண்டும் திட எரிபொருளைக் கொண்டு ராக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு விண்வெளியில் உயர்த்தும். கடைசியாக, பிஎஸ்4 நிலையில் உள்ள ராக்கெட் திரவ எரிபொருளைக் கொண்டு, செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும்.
பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தில் இந்த மூன்றாவது நிலை வரைக்கும் எதிர்பார்த்தபடி ராக்கெட் சென்றது என்பதைக் குறிப்பிடும் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், “மூன்றாவது நிலையின் செயல்பாட்டுக்கு இடையே பெரிய சிக்கல்” ஏற்பட்டது என்று குறிப்பிடுகிறார்.
Vapor Pressure போதிய அளவுக்கு இல்லாததே இதற்கு காரணம் என அறிவியலாளர்கள் கூறுவதாக குறிப்பிட்ட த.வி.வெங்கடேஸ்வரன், இதன் பின்னுள்ள அறிவியல் காரணத்தை எளிமையாக விளக்கினார்.
“காற்று ஊதப்பட்ட பலூனின் வாயைத் திறந்து விட்டால், அது எதிர்திசையில் வேகமாகச் செல்லும். இதுவே, பலூனின் வாயை பெரிதாக திறந்தால் காற்று வேகமாக வெளியேறி பலூனின் வேகத்தில் மாறுபாடு ஏற்படலாம். இதே போன்று தான் ராக்கெட் இயங்கும் போது, அதன் புகை வெளியேறக்கூடிய முனையில், (Nozzle) திட்டமிட்டிருந்த அழுத்தம் உருவாகவில்லை.” என விளக்கினார்.
“இந்த அழுத்தம் சரியாக உருவாகாமல் இருந்ததற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என்பதில் தான் பிரச்னை உள்ளது. குறுகிய முனையின் (Nozzle) வாய்ப்பகுதி உடைந்திருக்கலாம். பிஎஸ்3 எரிபொருளில் பிரச்னை இருக்கலாம் அதாவது திட எரிபொருளை ராக்கெட்டில் நிரப்பும் போது சரியான விகிதத்தில் அது இல்லாமல் இருந்திருக்கலாம். இதில் சரியான காரணம் என்ன என்பதை இஸ்ரோ இன்னமும் அறிவிக்கவில்லை” என்பதை குறிப்பிடுகிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.
ஆனால், கடந்தமுறை 2025 , மே மாதம் செயல்படுத்தப்பட்டு முழுமையடையாத சி-61 திட்டத்திலும், இதே மூன்றாவது நிலையில், இதே போன்ற பிரச்னை தான் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது என குறிப்பிட்ட த.வி.வெங்கடேஸ்வரன், இது குறித்த அறிக்கை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என்பதையும் கூறினார்.
எந்த ஒரு ராக்கெட் ஏவும் திட்டமாக இருந்தாலும், வெற்றிகரமாக நிறைவடைந்தாலும், தோல்வியடைந்தாலும் அது குறித்த அறிக்கை தயார் செய்யப்படும். இதிலிருந்து தான் இஸ்ரோவுக்கு உதிரிபாகங்கள் வழங்கியவர் தரமானதை வழங்கினாரா? இஸ்ரோவில் போதுமான பரிசோதனை செய்யாமல் அனுப்பினார்களா? யார் மீது தவறு? என்ன தவறு என்பதை தெரிந்துகொள்ள முடியும்.” என த.வி.வெங்கடேஸ்வரன் கூறினார்.