பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், சிடு திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தொகுதி பங்கீட்டில் அக்கட்சி முக்கிய பங்கை வகிக்காதது இதுவே முதன்முறை.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில்(என்டிஏ) 2020 சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதிகளில் போட்டியிட்டது, அதேசமயம் பாஜக 110 இடங்களில் போட்டியிட்டது.
ஆனால், 2025 சட்டமன்ற தேர்தலில் ஜேடியு மற்றும் பாஜக இரு கட்சிகளும் தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது.
அக்டோபர் 12 அன்று வெளியான அறிவிப்பின்படி, என்டிஏ கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி – ராம் விலாஸ் (எல்ஜேபி) 29 இடங்களிலும், (மதச்சார்பற்ற) ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (ஹெச்ஏஎம் ) மற்றும் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா இரு கட்சிகளும் தலா ஆறு இடங்களிலும் போட்டியிடுகின்றன.
கடந்த 20 ஆண்டுகளாக கூட்டணியில் ‘பெரியண்ணனாக’ இருந்த ஜேடியு கட்சியினருக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஜேடியு சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தலைவர் ஒருவர், பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையின்பேரில் பேசுகையில், “பெரியண்ணன் – தம்பி என்பதையெல்லாம் விட்டுவிடலாம். ஜேடியு இதிலிருந்து மீண்டு வருமா, இல்லையா என்பதுதான் கேள்வி” என்றார்.
என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, ஜேடியு கட்சியினர் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது.
அதேசமயம், இந்த தேர்தலுக்குப் பிறகு ஜேடியுவின் நிலை ஒரு கட்சியாக என்னவாக இருக்கும் என்பது குறித்த கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
நிச்சயமாக, ஜேடியு தலைமை மற்றும் நிதிஷ் குமாரின் உடல்நலம் குறித்த கேள்விகள் எழும்.
மேலும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி(எல்ஜேபி) எப்படி அதிக இடங்களை பெறுவதில் வெற்றி அடைந்தது என்பது குறித்தும் கேள்வி எழுகிறது.
அதேபோன்று என்டிஏ கூட்டணியில் உள்ள தலித் தலைவரான ராம் மாஞ்சியின் ஹெச்ஏஎம் கட்சிக்கு கடந்த தேர்தலை விட ஒரு தொகுதி குறைவாகவே கிடைத்துள்ளது.
இந்த முறை ஹெச்ஏஎம் ஆறு இடங்களில் போட்டியிடுகிறது, 2020 சட்டமன்ற தேர்தலில் ஏழு இடங்களில் போட்டியிட்டது.
பட மூலாதாரம், Getty Images
‘பெரியண்ணன்’ அந்தஸ்தை இழந்த ஜேடியு
இந்தாண்டின் தொடக்கத்தில் அமைச்சரவை விரிவாக்கப்பட்டதில் இருந்தே, தங்கள் கட்சி இத்தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடும் என ஜேடியு தலைவர்கள் கூறி வந்தனர்.
பிப்ரவரி மாதம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, அதில் பாஜகவை சேர்ந்தவர்களே அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். ஜேடியுவை சேர்ந்த ஒரு தலைவர் கூட விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் இல்லை.
அதற்கு முரணாக, என்டிஏ கூட்டணி அரசில் ஜேடியுவை விட பாஜக அமைச்சர்களின் எண்ணிக்கை ஒன்றரை மடங்கு அதிகமாக இருப்பதுவும் இதுவே முதன்முறை.
அதேசமயம், ஊடகங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, ஒரு தொகுதி வித்தியாசமாக இருந்தாலும் இம்முறை பாஜகவை விட அதிகமான தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என ஜேடியு செய்தித் தொடர்பாளர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.
பிகார் அரசியலில் கடந்த 20 ஆண்டுகளாக மையமாக இருந்த ஜேடியுவின் ‘பெரியண்ணன்’ என்ற அந்தஸ்து 2024 மக்களவை தேர்தலிலேயே சிக்கலுக்கு உள்ளானது.
அந்த தேர்தலில் ஜேடியு 16 இடங்களிலும் பாஜக 17 இடங்களிலும் போட்டியிட்டன.
அதற்கு முந்தைய மக்களவை தேர்தலை (2019) நோக்கினால், ஜேடியு மற்றும் பாஜக இரு கட்சிகளும் தலா 17 இடங்களில் போட்டியிட்டன.
அதற்கு முன்பு, 2009 மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஜேடியு 25 இடங்களிலும் பாஜக 15 இடங்களிலும் போட்டியிட்டன.
எனவே, ‘பெரியண்ணன்’ அந்தஸ்தை 2024 மக்களவை தேர்தலில் இருந்தே ஜேடியு இழக்கத் தொடங்கிவிட்டது.
அதேபோன்று, 2020 சட்டமன்ற தேர்தலில் ஜேடியு 115 இடங்களிலும் பாஜக 110 இடங்களிலும் போட்டியிட்டன.
அந்த தேர்தலில் ஜேடியு மூன்றாவது இடத்தைப் பிடித்தது, ஆனாலும் நிதிஷ் குமார் முதலமைச்சரானார்.
பட மூலாதாரம், ANI
சிராக் பஸ்வானுக்கான வெகுமதி
என்டிஏவில் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்புக்கு முன்னதாக எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் வேறு நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, நிதிஷ் குமார் அரசாங்கம் குறித்தும் சட்டம்-ஒழுங்கு மோசமாகி வருவதாகவும் சிராக் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தார்.
கட்சியினருடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்-க்கு ஒப்படைக்கப்பட்டது.
2024 மக்களவை தேர்தலில் ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் சிராக்கின் கட்சி வெற்றி பெற்றது, எனவே சட்டமன்ற தேர்தலில் 30 இடங்கள் அல்லது ஒரு மக்களவை தொகுதிக்கு ஆறு இடங்கள் வேண்டும் என விரும்பியது.
தொகுதிப் பங்கீட்டை வைத்துப் பார்க்கும்போது, சிராக் தன் கோரிக்கையில் வெற்றி பெற்றுள்ளார், அவருக்கு 29 இடங்கள் கிடைத்துள்ளன.
மூத்த பத்திரிகையாளர் ரவி உபத்யாய் பிபிசியிடம் கூறுகையில், “சிராகின் கட்சியுடைய அமைப்பை பார்த்தோமானால், பிராமணர்கள் முதல் முஸ்லிம்கள் வரை அனைவரும் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். முதலாவதாக, அவரை பஸ்வான் சமூகத்தினருக்கான தலைவராக கருதக்கூடாது.
இரண்டாவதாக, என்டிஏவில் சிராகின் அந்தஸ்தை கொண்ட இளம் தலைவர் இல்லை. அப்படியான சூழலில் 2025, 2030 தேர்தல்களை தாண்டியும் தங்களுடன் இருக்ககூடிய தலைவரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என பாஜக நினைக்கிறது. அதனால்தான், சிராக் கட்சிக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.” என்றார்.
இதனிடையே, எல்ஜேபி கட்சியை பாஜகவுடன் இணைக்குமாறு பாஜக சிராக் பஸ்வானுக்கு அழுத்தம் தருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன. ஆனால், இதை சிராக் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் புஷ்பேந்திரா, மாறுபட்ட கருத்தை கொண்டிருப்பதாக தெரிகிறது.
“கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜேடியுவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றியதற்கு சிராகுக்கு அளிக்கப்படும் வெகுமதி இது. சிராக் பஸ்வானுக்கு என தனிப்பட்ட பலம் இல்லை, இது கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்தேர்தலில் ஒரேயொரு வேட்பாளர் மட்டுமே அக்கட்சி சார்பில் வெற்றி பெற்றார்.” என்றார் அவர்.
“ஆனால், சிராக் என்டிஏவில் இணைந்த பின் அவருடைய கட்சி வலுபெற்றது. ஆனால் எதிர்காலத்தில் அவர் சுயமாக அரசியலில் இருப்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது, ஏனெனில் தங்கள் கூட்டணி கட்சிகளை உடைக்கும் வரலாறு கொண்டது பாஜக. இப்போது பிகாரில் ஜேடியு அழிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
ஜேடியுக்கு உள்ள வாய்ப்புகள்
கடந்த சட்டமன்ற தேர்தல்களில் சிராக் பஸ்வான் கட்சி தனித்து 135 இடங்களில் போட்டியிட்டு, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஜேடியு மூன்றாவது பெரிய கட்சியாக ஆனதற்கு சிராக் பஸ்வான்தான் காரணம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“ஜேடியு கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர், அக்கட்சி தலைவர்கள் தங்களுடைய சொந்த வழியை பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால், இப்போது நிதிஷ் குமார் கேட்கும் நிலையில் இல்லை, அவருடைய உடல்நிலையும் மோசமாகி வருகிறது. மேலும், எதையும் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அவர் இல்லை. அப்படியான சூழலில், அனைத்துக் கட்டுப்பாடும் பாஜகவின் கையில் உள்ளது” என்றார் ஆய்வாளர் புஷ்பேந்திரா.
“பாஜக என்ன செய்தாலும், அதை ஜேடியு ஏற்றுக்கொள்கிறது. அமைச்சரவை விரிவாக்கத்திலேயே அதற்கான அறிகுறிகள் தெளிவாக தெரிந்தன. ஜேடியுவின் வாங்கு வங்கியிலும் பாஜக நுழைந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் குர்மி, கோயேரி சமூகத்தவர்களை பாஜக அமைச்சர்களாகியது. அப்போதே, பிகார் அரசியலில் ஜேடியு தன் தொடர்பை இழந்து வருவது உணரப்பட்டது.”
பட மூலாதாரம், ANI
உற்சாகமும் அதிருப்தியும்
தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்ட பிறகு என்டிஏ கூட்டணியில் உற்சாகமும் அதேசமயமும் அதிருப்தியும் தென்பட்டது.
பாஜக தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில், ‘சுமூகமான சூழல்’ உள்ளதாக தெரிவித்தது, அதேபோன்று எல்ஜேபி கட்சியும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால், ஜேடியுவின் பெரும்பகுதியினர் அதிருப்தியில் உள்ளன. ஆனால், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் வெளியிட்ட அறிக்கையில், “(எதிர்க்கட்சியின்) மகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால், என்டிஏவில் நிதிஷ் குமாரின் அனுபவம் மற்றும் மோதியின் தலைமையால் சிறப்பான ஒத்துழைப்பு உள்ளது. ராகுல் காந்தியை இயக்குபவராக தேஜஸ்வி உள்ளார். நிதிஷ் தான் இங்கு முதலமைச்சர் ஆவார். ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், எல்லோரும் துணை முதலமைச்சராக குதித்துக் கொண்டிருக்கின்றனர்.” என்றார்.
என்டிஏ கூட்டணியில் 6 தொகுதிகளை பெற்றுள்ள ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவை சேர்ந்த உபேந்திரா குஷ்வாஹா மற்றும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவின் சிதன் ராம் மாஞ்சியும் கோபத்தில் உள்ளனர்.
தொகுதிப் பங்கீட்டுக்கு பின்பு, ஜிதன் ராம் மாஞ்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், “என்டிஏவின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், எங்களுக்கு 6 இடங்கள் மட்டுமே கொடுத்திருப்பது என்டிஏவையே பாதிக்கும்” என்றார்.
உபேந்திரா குஷ்வாஹாவும் தன் அதிருப்தியை சமூக ஊடக பதிவு வாயிலாக திங்கட்கிழமை வெளிப்படுத்தினார்.
இதனிடையே, எதிர்க்கட்சியின் மகா கூட்டணியிலும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வது எளிதானதாக இல்லை. விகாஷீல் இன்சான் கட்சி (VIP) தலைவர் முகேஷ் சாஹ்னி கூறுகையில், “மகா கூட்டணியின் நிலை தற்போது சற்று சரியில்லை; அதன் மருத்துவர்கள் டெல்லியில் உள்ளனர்,” என சூசகமாக குறிப்பிட்டார்.
இதனிடையே, கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளன. மேலும், தாங்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை சமூக ஊடகங்கள் வாயிலாக வேட்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இம்முறை, இரு கூட்டணிக்கும் வெற்றிக்கான பாதை எளிதானதாக இருக்காது.
ஜேடியுவின் தற்போதைய நிலை, நிதிஷ் குமாரின் உடல்நிலை என பல சூழல்கள் உள்ளதால், பிகாரில் புதிய தலைமை உருவாகலாம்.
இருபது ஆண்டுகளாக நிதிஷ் குமாரை சுற்றி கட்டமைக்கப்பட்ட ஜேடியுவின் அரசியல் அதிகாரத்தை முடிவு செய்யும் தேர்தலாக இது இருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு