பட மூலாதாரம், Getty Images
மத்தியிலும் பெரும்பாலான மாநிலங்களிலும் பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக, 2024 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. ஆனால், 240 இடங்களை மட்டுமே வென்று சற்று பலவீனமடைந்தபோது, இந்திய அரசியலில் பாஜகவின் சரிவுக்கான நேரம் இது என பல அரசியல் நிபுணர்கள் கருதினார்கள்.
ஆனால், அதன் பின்னர் மேலும் உத்வேகத்துடன் நாட்டின் பல மாநிலங்களில் நடைபெற்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றபோது, பாஜகவைப் பற்றிய மதிப்பீடுகள் தவறோ என்றே அனைவரும் நினைத்தனர்.
மகாராஷ்டிராவில் 2024-ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் பாஜக, என்சிபி மற்றும் சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற பிரிவுகளுடன் சேர்ந்து மகாயுதி கூட்டணியின் கீழ் போட்டியிட்டது, அந்தக் கூட்டணி 288 இடங்களில் 235 இடங்களை வென்றது. இது மாநிலத்தில் எதிரணியான மகா விகாஸ் அகாடி கூட்டணியை பலவீனப்படுத்தியது.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பொருளாதார ரீதியாக வலுவான மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் பாஜக மீண்டும் தனது பிடியை வலுப்படுத்தியது.
அதற்கு ஒருசில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில், மகாராஷ்டிராவின் 48 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக 9 இடங்களை மட்டுமே வென்றது, காங்கிரஸை உள்ளடக்கிய எதிரணி 30 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 90 இடங்களில் 48 இடங்களை வென்று பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 37 இடங்களை காங்கிரஸ் வென்றது.
தற்போது, இந்தியாவின் முக்கியமான இந்தி பேசும் மாநிலமான பிகாரில், பாஜக, ஜேடியு மற்றும் பல பிராந்தியக் கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எதிர்பாராத மற்றும் இதுவரை பெற்றிராத பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தியாவின் தேசிய அரசியலில் ஆழமான மற்றும் பன்முக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.
பட மூலாதாரம், ANI
‘வலுவடையும் பாஜக’
பிகார் தேர்தல் முடிவு மத்திய அரசையும் அதன் தலைமையையும் பலப்படுத்தியுள்ளதுடன், பாஜகவிற்கு மாபெரும் வெற்றியாகவும், நேர்மறையான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், பாஜகவின் வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு சவாலாகவும், தங்கள் கட்சிகளின் அடிக்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகவும் உள்ளது.
தேசிய அளவில் அர்த்தமுள்ள சவாலை முன்வைக்க எதிர்க்கட்சிகள், தங்களது கொள்கைகள், தலைமை மற்றும் உத்திகளில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.
பிகார் தேர்தல் வெற்றி, பாஜகவை மேலும் வலுவாக வெளிப்படுத்தும் என்றும், அதன் தாக்கம் வரவிருக்கும் பல தேர்தல்களில் தெரியும் என்றும் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோதியும், அமித் ஷாவும் பாரதிய ஜனதா கட்சிக்குள் மேலும் வலுவடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான ஹேமந்த் அத்ரி கூறுகையில், “பிகார் தேர்தல் முடிவுகள் பாஜக, பிரதமர் நரேந்திர மோதி, அமித் ஷா ஆகியோரின் தலைமையை மீண்டும் வலுப்படுத்தியுள்ளன” என்கிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், கணிசமாக பலவீனமடைந்திருந்த பாஜகவை பிகார் தேர்தல் வலுப்படுத்தியுள்ளது என்று ஹேமந்த் அத்ரி கூறினார்.
“இப்போது பாஜக மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதல்கள் மற்றும் அதன் உத்திகளும் மட்டுப்படும். தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற பிரிவினரின் ஆதரவைப் பெறும் திறனை பாஜக மீண்டும் நிரூபிக்கும். பாஜக தலைவர் நியமனம் துரிதப்படுத்தப்படும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. இது அமைப்புக்கு புதிய சக்தியைக் கொண்டுவரும், பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவில் தனது செல்வாக்கை வலுப்படுத்த பாடுபடும் என்பதை தெளிவாகக் குறிக்கிறது,” என அவர் கூறுகிறார்.
மோதி வெல்ல முடியாதவர், அவரை யாராலும் அதிகாரத்தில் இருந்து அகற்ற முடியாது என்ற நம்பிக்கை இப்போது மீண்டும் வலுப்பெறும் என்றும் அத்ரி கூறுகிறார்.
“பாஜகவை தோற்கடிக்க முடியாது என்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம் உருவாக்குவதில் பாஜக இப்போது வெற்றிபெறக்கூடும், இது எதிர்க்கட்சிகளின் உறுதியைப் பாதிக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், AFP via Getty Images)
இந்திய அரசியலில் பாஜகவின் ஆதிக்கம் வலுவடைந்து வருவதாக CSDS இயக்குநர் பேராசிரியர் சஞ்சய் குமார் நம்புகிறார்.
“மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இந்திய அரசியலில் பாஜகவின் செல்வாக்கு குறைந்து வருவதாகத் தோன்றிய போதிலும், பல மாநிலங்களில் அதன் அடுத்தடுத்த அரசியல் வெற்றிகள் அந்த நினைப்பு தவறு என்பதை நிரூபித்துள்ளன. மகாராஷ்டிரா, ஹரியாணா, டெல்லி, இப்போது பிகார் என பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மகத்தான வெற்றி இந்த அனைத்து சாத்தியக்கூறுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது” என்று சஞ்சய் குமார் கூறுகிறார்.
“டெல்லி தேர்தல் முடிவுகள் வந்தபோது, அதுவொரு சிறிய வெற்றி என்று கூறப்பட்டது. ஹரியாணா தேர்தல் முடிவுகள் வந்த போது, பாஜக எப்படியோ வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டது. இந்திய அரசியலில் பாஜகவின் செல்வாக்கு குறையவில்லை, மாறாக அதிகரித்து வருகிறது என்பதை இப்போது பிகார் தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகிறது” என்று சஞ்சய் குமார் கூறுகிறார்.
பிகார் தேர்தல் முடிவுகள் பாஜகவின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என, தி இந்துவின் அரசியல் பிரிவு ஆசிரியர் நிஸ்துலா ஹெப்பர் நம்புகிறார்.
“இது பாஜகவுக்கு ஊக்கமளிக்கும் வெற்றி, குறிப்பாக அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளத் தேர்தல்களுக்கு முன்னதாக பிகார் ஊக்கமளித்துள்ளது,” என்கிறார் ஹெப்பர்.
இருப்பினும், பிகார் சட்டமன்றத் தேர்தல் வெற்றியானது தேசிய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று ஹெப்பர் நம்புகிறார்.
“தேசிய அரசியல் அப்படியே தொடரும். ஒரு மாநிலத்திலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம், ஆனால் அதுவே முழு நாட்டின் மனநிலையையும் மாற்ற முடியாது.” என்று ஹெப்பர் கூறுகிறார்.
பட மூலாதாரம், ANI
பெண் வாக்காளர்களின் முக்கியத்துவம்
பிகார் தேர்தலின் போது, அரசாங்கம், லட்சக்கணக்கான பெண்களுக்குத் தலா 10,000 ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியது. பெண் வாக்காளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முக்கியமான ஆதரவுக் குழுவாக உருவெடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.
பெண்கள் இப்போது ஒரு தனி வாக்காளர் பிரிவாகக் கருதப்படுவார்கள் என்பதை பிகார் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“பிகார் தேர்தல் முடிவுகளிலிருந்து கிடைத்த முக்கியமான பாடம் என்னவென்றால், அரசியல் கட்சிகள் பெண் வாக்காளர்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும். பெண்கள் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்ற புரிதல் வளரும். 2005-ஆம் ஆண்டு முதல் நிதிஷ் குமார் பெண்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அவர்களை ஈர்க்கத் தொடங்கினார்.” என்று நிஸ்துலா ஹெப்பர் கூறுகிறார்.
“சமூக அடிப்படையில் வாக்காளர்களை இணைக்கும் மாதிரியை நிதிஷ் அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு தனது சாதி அடிப்படையில் வலுவான வாக்குத் தளம் இல்லை, ஆனாலும் அவர் சமூக நலத் திட்டங்கள் மூலம் மக்களைத் தன்னுடன் இணைத்து தனது வாக்குவங்கியை வலுவாக்கினார். பிகாரில் சமூக நலனுக்காக அரசு செலவிடும் தொகை மிகவும் அதிகமானது. இந்த மாதிரியை இப்போது பிற மாநிலங்களிலும் காண முடிகிறது.”
“இந்தத் தேர்தல்களில், தேஜகூ வெற்றி பெற வேண்டுமானால், கூட்டணிக்கு அப்பால் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் அதன் உத்திகளில் ஒன்று; கூட்டணியின் முக்கிய ஆதரவாளர்களின் பலத்தால் மட்டுமே தேர்தல்களில் வெற்றி பெற முடியாது” என சஞ்சய் குமார் கூறுகிறார்.
“இறுதியில், யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு எடுக்காத 20-22 சதவிகித வாக்காளர்கள்தான் தேர்தல்களில் தீர்மானிக்கும் காரணியாக உள்ளனர்.” என்று அவர் கூறுகிறார்.
எதிர்வரும் காலங்களில், நலத்திட்டங்களின் தாக்கம் இந்திய அரசியலில் அதிகமாகத் தெரியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“பிகாரில் பாஜக பெற்ற வெற்றி ‘இந்தியா’ கூட்டணியை வலுப்படுத்தும்”
பட மூலாதாரம், ANI
பிகாரில் மகா கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. தேசிய அரசியலில் எப்போதும் முக்கியமான ஓர் அரசியல் மையமாக இருந்து வரும் பிகார், அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றாகும்.
இத்தகைய சூழ்நிலையில், பிகாரின் முடிவுகள் அகில இந்திய கூட்டணியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது.
இந்த விஷயத்தில் அரசியல் நிபுணர்கள் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்தியா கூட்டணி வலுவாக வெளிப்படும் என்று ஹேமந்த் அத்ரி நம்புகிறார், ஏனெனில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இப்போது தங்களது இருப்பை தக்க வைப்பதற்கான சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
“தற்போதுள்ள சூழ்நிலையில், தேஜஸ்விக்கு ஏற்பட்ட நிலை, எதிர்வரும் தேர்தல்களில் மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மு.க ஸ்டாலின் போன்றவர்களுக்கும் ஏற்படலாம் என்பதால், பிகார் தேர்தலின் முடிவுகள், இந்தியா கூட்டணியை வலுவாக்கி, அதை பலமாக வெளிப்படுத்தும் என நினைக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.
“வலுவான மத்திய அரசு, மாநிலத் தலைவர்களை குறிவைக்கலாம் என்ற எண்ணத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் உருவாக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் பிரச்னைகளை மேலும் அதிக வலுவுடன் எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறலாம். இப்போது, இந்தியா கூட்டணிக் கட்சிகள் எப்படியாவது தாக்குப்பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இயங்க வேண்டியிருக்கும்.”
இதற்கிடையில், மகா கூட்டணி தனது உள் பலவீனங்கள் மற்றும் தலைமைப் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிஸ்துலா ஹெப்பர் கூறுகிறார்.
“இந்தியா கூட்டணிக்குள் இப்போது மோதல்கள் இருக்கலாம். மக்களவைத் தேர்தலின் போது பிகாரில் பப்பு யாதவ் மற்றும் பிறரைச் சுற்றியிருந்த சர்ச்சை நினைவிருக்கலாம். ஆர்ஜேடி அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, காங்கிரஸ் அவருக்கு டிக்கெட் கொடுக்கவில்லை. ஆனால் அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுபோன்ற சூழ்நிலையில், பிகாரில் தேஜஸ்வியின் உத்தி குறித்தும் கேள்விகள் எழுப்பப்படலாம்.” என்று ஹெப்பர் கூறுகிறார்.
பட மூலாதாரம், ANI
மேற்கு வங்கத்திற்கான செய்தி
இந்தியா கூட்டணியில், அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கும் சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர் யாரும் இல்லை என்று கூறும் நிஸ்துலா ஹெப்பர், “இந்தியா கூட்டணியில் அனைவரையும் ஒன்றிணைப்பதில் சீதாராம் யெச்சூரி முக்கியப் பங்கு வகித்தார். அந்தத் திறன் கொண்ட யாரும் அந்த முகாமில் இப்போது இல்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்திய கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருப்பதிலேயே சவால்கள் நிறைந்திருக்கும்.” என்று சொல்கிறார் அவர்.
தற்போதைய சூழ்நிலையில், இந்தியா கூட்டணியுடன் தொடர்புடைய தலைவர்கள் பிரிந்து செல்வது எளிதல்ல என்று அத்ரி நம்புகிறார். “எல்லோரும் தங்கள் இருப்புக்காக போராட வேண்டும். யாராவது பிரிந்து சென்றால், அவர்களுக்கு இருக்கக் கூடிய ஒரே வாய்ப்பு பாஜகவில் சேருவதுதான்.” என்று அவர் கூறுகிறார்.
“இன்றைய நிலவரப்படி, இந்தியா கூட்டணியுடன் தொடர்புடைய எந்தக் கட்சிகளும் பாஜகவுடன் இணைய முடியாது. அது தேஜஸ்வி, அகிலேஷ், மு.க ஸ்டாலின், மமதா பானர்ஜி என யாராக இருந்தாலும், இந்தியா கூட்டணிக்கு எதிராக எதையும் சொல்லமாட்டார்கள்.”
பிகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக இன்னும் அதிக பலத்துடன் நுழையும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
“வரவிருக்கும் மேற்குவங்கத் தேர்தல் வரை மத்திய அரசு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதுடன், எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டும் சூழலையும் உருவாக்கும்,” என்று ஹேமந்த் அத்ரி கூறுகிறார்.
“இது பாஜகவுக்கு, குறிப்பாக அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்களுக்கு முன்னதாக மன உறுதியை அதிகரிக்கும்.” என்று நிஸ்துலா ஹெப்பர் கூறுகிறார்.
இருப்பினும், மேற்கு வங்கத்தில் பாஜக பல சவால்களை எதிர்கொள்கிறது என்றும், கட்சிக்கும் இது தெரியும் என்றும் ஹெப்பர் நம்புகிறார்.
“அங்கு கட்சி மக்கள்தொகை சார்ந்த சவாலை எதிர்கொள்கிறது. மேற்கு வங்கத்தில் வெற்றி பெறுவது கடினமான சவால் என்று பாஜகவிற்குள் பொதுவான புரிதல் உள்ளது. அங்கு மொழியும் ஒரு பிரச்னை. இந்தி பேசும் மக்களின் கட்சியாக பாஜக கருதப்படுகிறது, அதே நேரத்தில் மமதா பானர்ஜி அங்கு மொழியை ஒரு முக்கிய அஸ்திரமாக பயன்படுத்த முடியும். திரிணாமுல் காங்கிரஸ் கடந்த முறையும் இந்தப் பிரச்னையை எழுப்பியது,” என்று அவர் கூறுகிறார்.

இந்துத்துவா அரசியலில் கவனம் செலுத்தும் பாரதிய ஜனதா, அதன் மூன்று முதன்மையான நிகழ்ச்சி நிரல்களில் இரண்டை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டது. 2019 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. அதே ஆண்டு, ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இப்போது ஒரேயொரு முக்கிய சித்தாந்த நிகழ்ச்சி நிரல் மட்டுமே எஞ்சியுள்ளது – பொது உரிமையியல் சட்டம் அல்லது பொது சிவில் சட்டம் (Uniform civil code) மட்டுமே.
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பதை பாஜக நீண்ட காலமாக முன்வைத்துள்ளது. இருப்பினும் தேசிய அளவில் இந்தப் பிரச்னையை இன்னும் அது முன்னெடுக்கவில்லை, மாறாக மாநிலங்கள் வழியாக அதைப் பின்பற்றி வருகிறது.
தற்போது பொது சிவில் சட்டத்தை நோக்கி பாஜக முன்னேற முடியும் என்று அரசியல் நிபுணர்கள் நம்புகின்றனர்.
“பாஜக பல சவால்களை எதிர்கொள்வதால் தேசிய அளவில் இதை செயல்படுத்தாமல் போகலாம். ஆனால் ஊடகங்கள் மூலம், கட்சி இதில் முன்னேறிச் செல்கிறது என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியும்,” என்று ஹேமந்த் அத்ரி கூறுகிறார்.
இதற்கிடையில், “தற்போது 240 இடங்களை மட்டுமே பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த போதிலும், என்ன செய்ய விரும்புகிறதோ அதைச் செய்வதில் பாஜக எந்தவிதத் தயக்கமும் காட்டவில்லை. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு முக்கியப் பிரச்னையாக இருக்கும் பொது சிவில் சட்டத்தை பொறுத்தவரை, பழங்குடியினர் பிரச்னை போன்ற பல சவால்கள் அதனுடன் இணைந்துள்ளது என்பதை பாஜக ஏற்கனவே புரிந்துகொண்டுள்ளது, அதனால்தான் மாநிலங்கள் வழியாக பாஜக தன் சித்தாந்த நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுகிறது.” என்று நிஸ்துலா ஹெப்பர் கருதுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு