படக்குறிப்பு, தலைமறைவாக உள்ளவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.கட்டுரை தகவல்
எழுதியவர், பிரீதி பிரபா
பதவி, செய்தியாளர், பிபிசி ஹிந்தி, பேகுசாராய்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
(எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.)
பிகாரின் பேகுசாராய் மாவட்டத்தில் 28 வயது பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரின் படி, ஜூன் 11-ஆம் தேதி இரவு சிமரியா காட் பகுதியில் 28 வயதுடைய அந்தப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்ணின் கணவர், மருத்துவப் பரிசோதனையின்போது பெண்ணின் பிறப்புறுப்பிலிருந்து தோட்டா, கல் மற்றும் மரத்துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடையாளம் தெரியாத இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய அந்தப் பெண், “ஜூன் 11 அன்று இரவு சுமார் 11:30 மணியளவில் நான் வீட்டுக்குள் இருந்த கழிப்பறைக்குச் சென்றேன். அப்போது, உள்ளே தூங்கிக்கொண்டிருந்த என் கணவரை ஐந்து மர்ம நபர்கள் அறையின் வெளியே இருந்து பூட்டிவிட்டனர். நான் கழிப்பறையிலிருந்து வெளியே வந்ததும், அந்த நபர்கள் என்னைப் பிடித்துக்கொண்டனர்” என்று கூறினார்.
“பின்னர், அந்த நபர்கள் ஒவ்வொருவராக என்னை வன்கொடுமை செய்தனர். அவர்கள் பிளேடால் என் உடலில் கீறி காயப்படுத்தினர், பின்னர் என்னைத் தாக்கத் தொடங்கினர். நான் மயங்கிவிட்டேன். நான் கழிப்பறையிலேயே விழுந்து கிடந்தேன்,” என்று அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுவது என்ன?
இது குறித்து பிபிசி அந்தப் பெண்ணின் கணவரிடம் பேசியது.
அவர் கூறுகையில், “என் மனைவியின் சத்தம் கேட்டு நான் வெளியே வர முயன்றேன், ஆனால் கதவு வெளியே இருந்து பூட்டப்பட்டிருந்தது. நான் பக்கத்து வீட்டினருக்குத் தொலைபேசி மூலம் அழைத்து கதவைத் திறக்கச் செய்தேன். என் மனைவியின் நிலையைக் கண்டு நான் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். நாங்கள் முதலில் பரௌனி மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கிருந்து எங்களை சதர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர்” என்றார்.
கணவர் மேலும் கூறுகையில், “அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், என் மனைவி உடல் ரீதியாக கடுமையாக காயப்படுத்தப்பட்டிருந்தார். அந்தச் சமயத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்குப் பிறகு, என் மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார், அதனால்தான் அவருக்கு வலி ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நாங்கள் வீட்டுக்குத் திரும்பிவிட்டோம். ஆனால், வலி தொடர்ந்து நீடித்ததால், ஜூன் 17 அன்று மீண்டும் சதர் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு நடந்த பரிசோதனையில், அவரது பிறப்புறுப்பிலிருந்து தோட்டா, கல் மற்றும் மரத்துண்டு ஆகியவை அகற்றப்பட்டன. என் மனைவிக்கு இன்னும் வலி உள்ளது” என்று தெரிவித்தார்.
பேகுசாராய் மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி, “இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நான் ஒரு மருத்துவக் குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளேன். அந்தக் குழு இந்தச் சம்பவத்தை ஆழமாக விசாரிக்க வேண்டும். ஒரு பெண் மருத்துவர் தலைமையிலான குழுவை அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து சில பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
மூன்று மாதங்களுக்கு முன்பு, இதேபோல் அடையாளம் தெரியாத மூன்று பேர் தங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன் மனைவியை வன்கொடுமை செய்ய முயன்றதாக அந்தப் பெண்ணின் கணவர் தெரிவித்தார். அந்த நபர்கள் தன்னைத் தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.
அந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை கூறுவது என்ன?
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, பேகுசாராய் காவல் கண்காணிப்பாளர் மனிஷ், இந்தச் சம்பவம் குறித்த செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
பிடிஐ செய்தி முகமையின் தகவல்படி, பேகுசாராய் காவல் கண்காணிப்பாளர் மனிஷ் கூறுகையில், “இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது, இதற்காக ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ளவர்ளைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
ஏஎன்ஐ செய்தி முகமையிடம் அவர் மேலும் கூறுகையில், “பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில் கடந்த 13-ஆம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிகிச்சையின் போது மருத்துவர்கள் அவரது உடலில் இருந்து சில பொருட்களைக் கண்டெடுத்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஃப்.ஐ.ஆரில் அந்தப் பெண் வன்கொடுமை புகார் அளித்து, மூன்று பேரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
சகியா காவல் நிலைய பொறுப்பாளர் ராஜீவ் குமார் ரஞ்சன் கூறுகையில், “இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்து, விரைவான விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.