பட மூலாதாரம், ANI
நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிப்பை வெளியிட்டார்.
பிகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. முதல் கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், 2வது கட்டத்தில் 122 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
முதல் கட்ட தேர்தல் விவரம்
தேர்தல் தேதி – 06.11.2025
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – 17.10.2025
வேட்பு மனு பரிசீலனை – 18.10.2025
வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் – 20.10.2025
2ம் கட்ட தேர்தல் விவரம்
தேர்தல் தேதி – 11.11.2025
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – 20.10.2025
வேட்பு மனு பரிசீலனை – 21.10.2025
வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் – 23.10.2025
பிகார் சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் நவம்பர் 22, 2025-இல் முடிவடைகிறது. எனவே, நவம்பர் மாதத்திற்குள் மாநிலத்தில் தேர்தலை நடத்த வேண்டும்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் (2020) கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் மூன்று கட்டங்களாக, அக்டோபர் 28 முதல் நவம்பர் 7-ஆம் தேதிவரை நடைபெற்றது.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோய்க் காலத்தின்போது நடைபெற்ற முதல் பெரிய தேர்தல் இதுவாகும். அதற்காகப் பல வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
பிகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் SIR (வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்) தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பிகாரில் இப்போது 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அன்று, தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாரின் செய்தியாளர் சந்திப்பு பாட்னாவில் நடந்தது.
இந்தச் சந்திப்பின் தொடக்கத்தில், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செயல்முறை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை தொடங்கியது. அது மேற்கொள்ளப்பட்ட நேரம் குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பின. ஆனால், இதை வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் நடவடிக்கை என்று தேர்தல் ஆணையம் கூறியது.
பட மூலாதாரம், X/@ECISVEEP
ஆதார் அட்டை குறித்துத் தலைமைத் தேர்தல் ஆணையர் என்ன கூறினார்?
ஆதார் அட்டை தொடர்பான ஒரு கேள்விக்குப் பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகளின்படி, ஆதார் சட்டத்தின் கீழ், இது பிறந்த தேதி, வசிப்பிடம் அல்லது குடியுரிமைக்குரிய ஆதாரம் என்று கருத முடியாது. ஆதார் அடையாளத்திற்கான ஆதாரம் மட்டுமே, குடியுரிமை அல்லது பிறப்பிற்கானது அல்ல,” என்றார்.
“உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டையை அடையாளத்திற்காகப் பயன்படுத்தலாம், ஆனால் அதை குடியுரிமை அல்லது பிறந்த தேதிக்கான ஆதாரமாகக் கருத முடியாது என்று கூறியது. ஆதார் சட்டத்தின் பிரிவு 9-இலும் ஆதார் எந்த ஒரு நபரின் குடியுரிமை அல்லது வசிப்பிடத்திற்கான ஆதாரம் அல்ல என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
“எனவே, 18 வயதுக்கு மேற்பட்டதற்கான ஆதாரத்தை வழங்க ஆதார் அட்டையை மட்டும் காட்டுபவர்களுக்கு இது போதுமானதாக இருக்காது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, ஆதார் அட்டையை அடையாள அட்டையாக ஏற்கலாம், ஆனால் தகுதி அல்லது வயது தொடர்பான உறுதிப்படுத்தலுக்கு பிற ஆவணங்களும் தேவைப்படும்” என்று அவர் விளக்கினார்.
“எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர் என்பதற்கான ஆதாரத்தை வழங்க ஆதார் அட்டையை மட்டும் காட்டுபவர்களுக்கு இது போதுமானதாக இருக்காது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, ஆதார் அட்டையை அடையாள அட்டையாக ஏற்கலாம், ஆனால் தகுதி அல்லது வயது தொடர்பான உறுதிப்படுத்தலுக்கு பிற ஆவணங்களும் தேவைப்படும்” என்று அவர் விளக்கினார்.
2020-க்குப் பிறகு அரசியலில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Images
2020 தேர்தலுக்கு பிறகு மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால், ஆகஸ்ட் 2022-இல், நிதிஷ் குமார் பாரதிய ஜனதா கட்சியுடனான உறவைத் துண்டித்து, மகாகட்பந்தன் கூட்டணியில் இணைந்தார்.
பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை விட இறப்பதையே தான் விரும்புவதாக நிதிஷ் குமார், சொல்லும் அளவுக்கு பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையேயான உறவு மிகவும் கசப்பாக மாறியது.
மறுபுறம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நிதிஷ் குமாருக்கு என்.டி.ஏ-வின் கதவுகள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
ஆனால், அரசியலில் எதுவும் நிரந்தர உண்மை இல்லை என்பதை நிரூபிப்பது போல, நிலைமை மீண்டும் மாறியது.
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இந்தியா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட முக்கியத் தலைவர்களில் நிதிஷ் குமாரும் ஒருவராகக் கருதப்பட்டார்.
ஆனால், ஜனவரி 2024-இல் அவர் மீண்டும் என்.டி.ஏ-வில் இணைந்தார், ராஷ்டிரிய ஜனதா தளத்துடனான கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டார்.
2015 சட்டமன்றத் தேர்தலில், ஜே.டி.யு மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தது. அந்தக் கூட்டணி 2017-இல் முறிந்தது.
பிகார் சட்டமன்றத்தின் நிலை என்ன?
பிகாரில் சட்டமன்றத்தில் மொத்தமாக 243 தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.
பிகாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய என்.டி.ஏ. அரசு உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பிகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
பிகார் சட்டமன்றத்தில் தற்போது பா.ஜ.க.வுக்கு 80 எம்.எல்.ஏ.க்கள், ஆர்.ஜே.டி-க்கு 77, ஜே.டி.(யு)-க்கு 45 மற்றும் காங்கிரஸுக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம்.எல்) 11, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் 1 மற்றும் 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
களத்தில் உள்ள கூட்டணிகள் யாவை?
மாநிலத்தில் இந்த முறையும் என்.டி.ஏ. மற்றும் மகாகத்பந்தன் இடையே தான் முக்கியப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்.டி.ஏ-வில் ஜே.டி.யு, பி.ஜே.பி., எல்.ஜே.பி. (ஆர்), ஜிதன்ராம் மாஞ்சியின் ஹம் (மதச்சார்பற்ற) மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா போன்ற கட்சிகள் உள்ளன.
அதே சமயம், மகாகத்பந்தனில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., சி.பி.ஐ. (எம்.எல்.), விகாஸ்ஷீல் இன்சான் கட்சி (வி.ஐ.பி.), ஜே.எம்.எம். மற்றும் ராஷ்டிரிய எல்.ஜே.பி. ஆகியவை அடங்கும்.
அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி இந்தக் கூட்டணிகள் எதிலும் இல்லை. 2020 தேர்தலில் அவரது கட்சி ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது, ஆனால் பின்னர் அவரது கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் ஆர்.ஜே.டி-யில் இணைந்தனர்.
பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Images
தொகுதிப் பங்கீடு மற்றும் புதிய நபர்கள் யார்?
இதுவரை என்.டி.ஏ-வோ அல்லது மகாகத்பந்தனோ தொகுதிப் பங்கீட்டு விவரங்களை வெளியிடவில்லை. இரு முக்கியக் கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.
தொகுதிப் பங்கீடு குறித்துப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, ஆனால் இதுவரை உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இரு கூட்டணிகளிலும் உள்ள சிறிய கட்சிகள் ‘மரியாதைக்குரிய இடங்களுக்காகத் தங்கள் கோரிக்கையை முன்வைக்கின்றன.
நிதிஷ் குமாரின் மோசமான உடல்நிலை குறித்த செய்திகள், ஜே.டி.யு-வில் வாரிசு குறித்த யூகங்கள், பிரசாந்த் கிஷோரின் நுழைவு, சிராக் பாஸ்வான் தேர்தலில் போட்டியிடப்போவதாக அவ்வப்போது வெளியாகும் செய்திகள் ஆகியவை தேர்தலை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.
நிதிஷ் குமாரிடம் இருந்து பிரிந்த பிறகு தனது சொந்தக் கட்சியைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோரிடம், பிபிசி ஒரு நேர்காணலில், எத்தனை இடங்களில் வெற்றி பெறுவீர்கள் என்று கேட்டபோது, தமது கட்சி உச்சத்தில் இருக்கும் அல்லது மிக மோசமான நிலையில் இருக்கும் என்று அவர் கூறினார்.
அவரது கட்சி 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் என்றும், வேலைவாய்ப்பின்மை, புலம்பெயர்தல் மற்றும் கல்வி போன்ற பிரச்சினைகளின் அடிப்படையில் அவர் தேர்தல் களத்தைச் சந்திப்பார் என்றும் கூறினார்.
இது தவிர, பிகாரில் மற்றொரு புதிய கட்சி உதயமாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை அவரது ஒரு ஃபேஸ்புக் பதிவுக்குப் பிறகு கட்சியிலிருந்து நீக்கினார். இப்போது அவர் ஜன்சக்தி ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
தேர்தலின் முக்கியப் பிரச்னைகள் என்ன?
பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Images
பிகார் சட்டமன்றத் தேர்தலில், என்.டி.ஏ. அரசு மாநிலத்தை அனைத்து வழிகளிலும் மேம்படுத்தியுள்ளது என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காகப் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்றும் கூறி களமிறங்குகிறது.
மறுபுறம், மகாகத்பந்தன் வேலைவாய்ப்பின்மை, வினாத்தாள் கசிவு, மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் என்.டி.ஏ-வைக் குறிவைத்தும், இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளிக்கிறது.
மாநிலத்தில் தேஜஸ்வி யாதவுடன் ‘வாக்காளர் உரிமை யாத்திரை'(வோட் அதிகார் யாத்ரா) மேற்கொண்ட ராகுல் காந்தி, தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் மற்றும் ‘வாக்குத் திருட்டு’ பிரச்சினையை எழுப்பினார்.
இருப்பினும், பா.ஜ.க. மற்றும் ஜே.டி.யு. இதை எதிர்க்கட்சிகளின் விரக்தி அரசியல் என்று கூறிவருகின்றன. மேலும், மகாகத்பந்தன் ஆட்சி அமைந்தால் மாநிலத்தின் வளர்ச்சி நின்றுவிடும் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுவரை எத்தனை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன?
பிகாரில் சட்டமன்றத் தேர்தல்கள் 1952-இல் தொடங்கின. அதன் பிறகு 2020 வரை 17 முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடந்துள்ளன.
2005 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் எந்த அரசும் அமையாததால், அதே ஆண்டு அக்டோபரில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டியிருந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு முதல் தேர்தலில் என்ன நடந்தது?
பட மூலாதாரம், http://postagestamps.gov.in/
சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முதலில் 1951-இல் நடந்த தேர்தலில் பல கட்சிகள் பங்கேற்றன, ஆனால் அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக இருந்தது.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 322-இல் 239 இடங்களைப் பெற்றது.
1957 தேர்தலிலும் காங்கிரஸ் மிகப் பெரிய கட்சியாக மாறியது. அது 312-இல் 210 இடங்களைப் பெற்றது.
1962 தேர்தலில், காங்கிரஸ் 318-இல் 185 இடங்களைப் பெற்றுப் பெரும்பான்மையைப் பெற்றது.இரண்டாவது இடத்தில் ஸ்வதந்திரா கட்சி அதிகபட்சமாக 50 இடங்களைப் பெற்றது.
ஸ்ரீ கிருஷ்ண சின்ஹா பிகாரின் முதல் முதலமைச்சரானார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு