பட மூலாதாரம், Getty/ANI
பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியும், மகாகட்பந்தன் எனப்படும் மகா கூட்டணியும் போட்டியில் இருந்தன. இதற்கு மத்தியில் பிரபல முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் இறங்கியது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ), பாஜக, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ராம் விலாஸ் உட்பட சில கட்சிகள் அங்கம் வகித்தன.
மகா கூட்டணியில் தேஜஸ்வி யாதவ்வின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி), காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் உட்பட சில கட்சிகள் இடம்பெற்றன. இந்தக் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தலைமை தாங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?
தைனிக் பாஸ்கர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளது. என்.டி.ஏ 145 – 160 இடங்கள் வரையும், மகா கூட்டணி 73 – 91 இடங்கள் வரையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.