பட மூலாதாரம், AFP via Getty Images
பிகாரில், தற்போதைய முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாக பிகாரில் அடிப்படை உள்கட்டமைப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் மேம்பாட்டில் நிதிஷ் குமார் பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இந்த மாற்றங்களின் காரணமாக அவர் ‘சுஷாசன் பாபு’ என்றும் அறியப்படுகிறார்.
ஆனால், பிகார் இன்னும் நாட்டின் மிகப் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளது.
நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சரானால், பிகாரின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை வேகப்படுத்துவதற்காக பல முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிகார் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் என்ன என்பதையும், புதிய அரசாங்கம் எந்தெந்த துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
1. இடப்பெயர்வு மற்றும் வேலைவாய்ப்பு
பட மூலாதாரம், Getty Images
பிகார் சட்டமன்றத் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி, வேலைவாய்ப்புக்காக பிகாரிலிருந்து மக்கள் இடம்பெயர்வதை ஒரு முக்கிய பிரச்னையாக முன்வைத்திருந்தன.
ஆர்ஜேடி தலைமையிலான மகா கூட்டணி, மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. அதே நேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஒரு கோடி வேலைகளை உருவாக்குவதாக அறிவித்திருந்தது.
வேலைவாய்ப்புக்காக பிகார் இளைஞர்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்வது, பிகார் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது.
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்ட செய்தியின்படி, பிகாரில் உள்ள மூன்று வீடுகளில் இரண்டில், குறைந்தது ஒருவராவது வேறு மாநிலத்தில் பணிபுரிகிறார் எனக் கூறப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டில், 10-15 சதவிகித வீடுகள் மட்டுமே இடம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டிருந்தன. ஆனால், 2017 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 65 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
ஒரு சமீபத்திய தகவலை மேற்கோள் காட்டி, 2023-இல் இந்தியாவின் நான்கு பரபரப்பான, முன்பதிவு செய்யாத ரயில் பாதைகள் பிகாரிலிருந்து தொடங்குகின்றன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்தது.
இது பிகாரின் தொழிலாளர் படை எவ்வாறு மாநிலத்தை விட்டு வெளியேறுகிறது என்பதற்கான தெளிவான சான்று.
பிகாரில் சிறிய நில உடைமைகள், தொழில்துறையில் வேலையின்மை, பலவீனமான உற்பத்தித்தளம் போன்ற காரணங்களால் மக்கள் தங்களுடைய ஊர்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை உள்ளது.
பிகாரின் தொழிலாளர் எண்ணிக்கையில் 54 சதவிகிதம் பேர் இன்னும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அளவில் இது 46 சதவிகிதமாக உள்ளது.
உற்பத்தி துறையில் பிகாரில் வெறும் 5 சதவிகித மக்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். மறுபுறம், தேசிய சராசரி 11 சதவிகிதமாக உள்ளது.
இந்தியாவின் இளைய மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் பிகாரும் ஒன்று. இங்குள்ள மக்களின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 15-59 வயதுக்குட்பட்டவர்கள்.
ஆனாலும், மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன.
2. நகரமயமாக்கல் மற்றும் உட்கட்டமைப்பு
பட மூலாதாரம், Getty Images
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கேரளாவில் நகரமயமாக்கல் 47.7%, குஜராத்தில் 42.6% மற்றும் தமிழ்நாட்டில் 48.4% உயர்ந்துள்ளது. ஆனால், பிகாரில் நகரமயமாக்கல் வெறும் 11.3% ஆக மட்டுமே உள்ளது.
பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் உட்கட்டமைப்பை வலுப்படுத்த பல பணிகள் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும், நகரமயமாக்கல் விகிதம் இன்னும் மிகவும் குறைவாக உள்ளது.
2013 முதல் 2023 வரையிலான நைட் லைட் தரவுகளின்படி, பிகாரின் பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகள் இன்னும் கிராமப்புறங்களாகவே உள்ளன என தெரிய வருகிறது.
ஒரு பகுதியில் உள்ள மனித செயற்பாடு, மின்சாரப் பயன்பாடு போன்றவற்றை மதிப்பிட நைட் லைட் தரவு உதவுகிறது.
அதேபோல், இரவு நேரத்தில் தெரியும் ஒளி, சாலைகள் மற்றும் வாகனங்கள் மட்டுமல்லாமல், கட்டுமானம், சாலை அமைத்தல் போன்ற பொருளாதார நடவடிக்கைகளையும் அது பிரதிபலிக்கிறது.
அதனால், நைட் லைட் முறைமை, ஒரு பகுதியின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் முக்கிய குறியீடாகக் கருதப்படுகிறது.
3. உற்பத்தியை வலுப்படுத்துவதில் உள்ள சவால்கள்
பட மூலாதாரம், Getty Images
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, பிகாரின் உற்பத்தித் துறை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 5–6% மட்டுமே பங்களிக்கிறது.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே சூழல் தான் இன்றும் காணப்படுகிறது. அப்போது குஜராத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித்துறை 36 சதவிகிதத்தைக் கொண்டிருந்தது.
பிகாரின் உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள இந்த தேக்கநிலை, மாநிலத்திற்குள் நிலவும் சவால்களை மட்டுமல்லாமல், தேசிய அளவில், சமமற்ற தொழில்துறை வளர்ச்சிப் போக்கையும் பிரதிபலிக்கிறது.
மாநிலத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால், திறன் மேம்பாட்டு முயற்சிகளும் பாதிக்கப்படுகின்றன.
இதனால், இளைஞர்கள் அதிகளவில் பிற மாநிலங்களுக்கு வேலை தேடி புலம்பெயர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
4. குற்றங்களைக் குறைப்பதில் உள்ள சவால்
பட மூலாதாரம், Getty Images
பிகாரில் ‘வனராஜ்ஜியம்’ என்று கூறப்படும் நிலையை முடிவுக்கு கொண்டு வந்தது நிதிஷ் குமாரின் முக்கிய சாதனையாகக் கூறப்படுகிறது.
ஆனால், மாநில குற்றப் பதிவுப் பணியகத் தரவுகளின்படி, 2015 முதல் 2024 வரை பிகாரில் குற்ற விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ வெளியிட்ட தகவல்படி, தேசிய குற்றப் பதிவுப் பணியக (NCRB) தரவுகளில் இதே காலகட்டத்தில் தேசிய அளவில் குற்றம் 24% உயர்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டில் பிகாரில் குற்றங்கள் 1.63 சதவிகிதம் அதிகரித்துள்ளன.
2023-ம் ஆண்டில் பிகாரில் 2,862 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக எண்ணிக்கை. உத்தரபிரதேசத்தில் அதே ஆண்டில் 3,026 கொலை வழக்குகள் பதிவாகியிருந்தன.
அதேபோல், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது நடந்த தாக்குதல்களில் பிகார் முன்னணியில் இருந்தது.
2023 ஆம் ஆண்டில், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக 371 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
5. வருவாயை அதிகரிக்க அழுத்தம்
பட மூலாதாரம், Getty Images
கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் பிகார் கடந்த சில ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
ஆனால், தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை, பிகார் இன்னும் இந்தியாவின் ஏழ்மையான மாநிலமாகவே உள்ளது.
இந்தியாவின் தனிநபர் வருமானம் ரூ.1.89 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், பிகாரில் அது தேசிய சராசரியின் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக, அதாவது சுமார் ரூ.60,000 மட்டுமே உள்ளது.
தலைநகர் பாட்னாவில் தனிநபர் வருமானம் ரூ.2,15,049. இது ஷிவ்ஹார் போன்ற மாவட்டங்களை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். அங்கு இது ரூ.33,399ஐ கூட எட்டுவதில்லை.
இந்த புள்ளிவிவரங்கள், பிகாரில் பொருளாதாரமும் வாய்ப்புகளும் முக்கிய நகர மையங்களில் மட்டுமே குவிந்து கிடப்பதையும், கிராமப்புற பிகார் அந்த முன்னேற்றத்தைத் தொடரப் போராடுவதையும் தெளிவாக காட்டுகின்றன.
6. மாணவர்கள் இடைநிற்றலைக் குறைப்பதற்கான சவால்
பட மூலாதாரம், Getty Images
பிகாரில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் விகிதம் கவலைக்குரிய அளவில் உயர்ந்துள்ளது. கணிசமான மாணவர்கள் நடுநிலைப் பள்ளியைத் தாண்டி மேல்நிலைக்குப் போக இயலவில்லை.
இது, குறைந்த சமூக முன்னேற்றம், குறைந்த திறன்கள், மற்றும் குறைந்த வேலைவாய்ப்புகளின் ஒரு சுழற்சியை உருவாக்குகிறது.
கல்வியில் உள்ள இந்தப் பின்தங்கிய நிலையே மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும் தடுக்கிறது. இதன் விளைவாக, பிகார் இளைஞர்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் பங்கு பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.
பிகாரின் மக்கள் தொகை அமைப்பு சிறிது வித்தியாசமாக உள்ளது. இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக இருந்தாலும், கருவுறுதல் விகிதம் 2.8 என அதிகமாக உள்ளது.
இது, குறைந்த குழந்தை இறப்பு விகிதத்துடன் இணைந்து, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. இதன் தாக்கமாக, மாநில வளங்களும், பொது சேவைகளும் கூடுதல் அழுத்தத்துக்கு உள்ளாகின்றன.
பெரிய குடும்பங்கள் மற்றும் வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகை காரணமாக, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புத் துறைகளில் பிகார் உடனடியாக மிகப்பெரிய முதலீடுகளைச் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், இந்த சவால்கள் இருந்தபோதும், பிகாரின் இளம் மக்கள்தொகையும், மெதுவாக மேம்பட்டு வரும் சுகாதாரக் குறிகாட்டிகளும், இன்னும் நம்பிக்கை எஞ்சியிருப்பதைக் காட்டுகின்றன.
கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் திடமான முயற்சிகளை எடுத்தால், பிகார் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி முன்னேற முடியும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு