தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 9வது சீசன், 70 நாட்களைக் கடந்துவிட்டது.
இதற்கு முன்பு எட்டு சீசன்களில் வெற்றி பெற்றவர்கள் தற்போது என்ன செய்கின்றனர்? பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது?
சீசன் 1 வெற்றியாளர் ஆரவ்
பிக் பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என, தமிழ் பார்வையாளர்களுக்கு அதிக பரிச்சயமில்லாத சமயத்தில் அதன் முதல் சீசன் பார்வையாளர்களை பல விதங்களில் கவர்ந்தது. சர்ச்சைகள், விமர்சனங்களுக்கு மத்தியில் அந்த சீசனில் நடந்த பல விஷயங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது. மாடலிங் செய்துவந்த ஆரவ் இந்த சீசனில் வெற்றிபெற்றார்.
சீசன் 1 அறிமுக நிகழ்ச்சியில், “எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் இருப்பது மிகவும் கஷ்டம், அதனால் பிக் பாஸ் எனக்கான ஓப்பனிங்காக இருக்கும் என கருதி வந்தேன்” என கமலிடம் கூறினார்.
நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்கு முன்பாக, ஓகே கண்மணி திரைப்படத்தில் துல்கர் சல்மான் அலுவலக காட்சியொன்றில் அவருடன் பணிபுரிபவராக ஒரு கூட்டத்தில் நின்றுகொண்டிருப்பார். மேலும், விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் எதிர்மறை கதாபாத்திரமாக வந்திருப்பார்.
பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், உதயநிதியின் கலகத் தலைவன், மாருதி நகர் போலீஸ் ஸ்டேசன், அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தாண்டு ராஜபீமா, மீண்டும் வா அருகில் வா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். விடாமுயற்சியில் நடித்தது அவருக்கு கவனத்தைப் பெற்றுத் தந்தது. மேலும், தான் ‘ஆரவ் ஸ்டுடியோஸ்’ எனும் பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருப்பதாக கடந்த அக்டோபர் 31 அன்று அறிவித்தார்.
சீசன் 2 வெற்றியாளர் ரித்விகா
பட மூலாதாரம், riythvika_official/Instagram
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்வதற்கு முன்பாகவே மெட்ராஸ், கபாலி, பரதேசி, ஒருநாள் கூத்து போன்ற திரைப்படங்களில் தன்னுடைய கதாபாத்திரங்களுக்காக நன்கு அறியப்பட்டவர் ரித்விகா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, சில நேரங்களில் சில மனிதர்கள், முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்தாண்டு நல்ல விமர்சனங்களை பெற்ற லெவன் எனும் த்ரில்லர் படம் மற்றும் தண்டகாரண்யம் திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு கவனம் பெற்றது.
பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு ‘நியூஸ் மினிட்’ ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “நான் எப்போதும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை, நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன். திரைத்துறையில் வெள்ளை நிறம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, இது மாற வேண்டும்” என கூறியிருந்தார்.
சீசன் 3 வெற்றியாளர் முகேன் ராவ்
பட மூலாதாரம், themugenrao/Instagram
மலேசியாவை சேர்ந்த சுயாதீன பாடகரான முகேன் ராவ் இந்த சீசனில் வெற்றியடைந்த பின்னர் சில திரைப்படங்களில் நடித்தார். முன்னதாக இவர் மலேசிய தொலைக்காட்சி தொடர்கள் சிலவற்றில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு சூரியுடன் இணைந்து வேலன், வெற்றி உள்ளிட்ட படங்களிலும் ஹன்சிகாவின் மை3 எனும் இணையத் தொடரிலும் நடித்தார். ஜின் தி பெட் எனும் படத்திலும் நாயகனாக நடித்தார். இவை பெரிதாக ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கவில்லை. நிறம் உள்ளிட்ட சில படங்களில் முகேன் ராவ் நடித்து வருகிறார். தவிர, பல சுயாதீன பாடல்களையும் பாடிவருகிறார்.
சீசன் 4 வெற்றியாளர் ஆரி அர்ஜுனன்
பட மூலாதாரம், aariarujunanactor/Instagram
ஆரி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே சில திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர். ஆடும் கூத்து, ரெட்டச்சுழி, நெடுஞ்சாலை, மாலைப்பொழுதின் மயக்கத்திலே உள்ளிட்ட படங்களுக்காக அவர் அறியப்படுகிறார். பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதியுடன் இணைந்து நடித்தார்.
மேலும், கோலிசோடா 3 உள்ளிட்ட படங்களிலும், ப்ரியாமணி நடித்த ‘குட் வைஃப்’ இணைய தொடரிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் வா தமிழா வா எனும் நிகழ்ச்சியை ஆரி அர்ஜுனன் தொகுத்து வழங்குகிறார்.
“ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தயக்கம் இருந்தது. ஆனால், ஒரு நிகழ்ச்சியில் வெவ்வேறு பின்னணிகளை கொண்ட 50 பேருடன் உரையாடும் வாய்ப்பை அந்த நிகழ்ச்சி எனக்கு வழங்குகிறது. இத்தகைய நிகழ்ச்சியில் முன்னோடியான கோபிநாத் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது,” என டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு ஆரி அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
பகவான், அலேகா உள்ளிட்ட படங்களிலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.
சீசன் 5 வெற்றியாளர் ராஜு
பட மூலாதாரம், raju_jeyamohan/Instagram
விஜய் தொலைக்காட்சியிலேயே பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ராஜு. இதில், ‘ராஜு வீட்ல பார்ட்டி’ எனும் நிகழ்ச்சி பிரபலமான நிகழ்ச்சியாகும். இதுதவிர, கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களிலும் நடித்தார். மேலும் கவினின் நட்புனா என்னனு தெரியுமா படத்தில் நடித்தார். பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் நடித்தார்.
“பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே பிடித்திருந்தால் மட்டுமே பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் வெற்றி பெறுவது சாத்தியம், அது எனக்கு நடந்திருப்பதில் மகிழ்ச்சி,” என வெற்றிக்குப் பின்னர் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்தாண்டு ‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் நடித்தார், இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நடிகர் விஜய் இந்த படத்தை தன்னை அழைத்து பாராட்டியதாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார் ராஜு. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்றார்.
சீசன் 6 வெற்றியாளர் அசீம்
பட மூலாதாரம், actor_azeem/Instagram
மாயா, பிரிவோம் சந்திப்போம் சீசன் 2, தெய்வம் தந்த வீடு என பல தொடர்கள் மூலம் அறியப்பட்டவர் அசீம். ஆறாவது சீசனில் அவருடைய நடவடிக்கைகளுக்காக பல்வேறு எதிர்ப்புகளை பிக்பாஸ் வீட்டுக்குள் சந்தித்தவர்.
சமீபத்தில் தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரை கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தவெகவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்திருந்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் தான் நடிக்கவிருப்பதாகவும் அது தன் முதல் படமாக இருக்கும் எனவும், மே மாதம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அது கிராமத்து பின்னணியிலான கதை என்று கூறிய அவர், மேலும் 2 படங்களிலும் நடித்துவருவதாக கூறியிருந்தார்.
சீசன் 7 வெற்றியாளர் அர்ச்சனா ரவிச்சந்திரன்
பட மூலாதாரம், iam_archanaravichandran/Instagram
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 2 தொடர் மூலம் அறியப்பட்டவர் அர்ச்சனா ரவிச்சந்திரன். 7வது சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்து டைட்டிலை வென்றார்.
அதன்பின், டிமாண்டி காலனி 2 திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் சின்னத்திரை நடிகர் அருண் என்பவருடன் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன்
பட மூலாதாரம், naan_muthukumaran/Instagram
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு எனும் பேச்சு போட்டியில் பங்கேற்ற முத்துக்குமரன், பட்டிமன்றங்கள் பலவற்றில் பங்கேற்றுள்ளார், நடுவராகவும் பங்கேற்றிருக்கிறார். தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு நிறைய வெளிநாட்டு நிகழ்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மேலும் நிறைய பேரின் அறிமுகம் கிடைத்தது. சமீபத்தில் அமெரிக்காவிலும் சென்று பேசினேன்.”
“என்னைப் பற்றிய அறிமுகத்தை கொடுத்தது பிக்பாஸ் தான். பொருளாதார ரீதியாகவும் உயர்வு கிடைத்துள்ளது. என்னைப் போன்றவர்களை வரவேற்க வேண்டும், என் குரலுக்கு செவி மடுக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது, அதை நிறைவேற்றியது அந்த நிகழ்ச்சிதான். பட வாய்ப்புகளும் வந்துள்ளன, ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை” என்றார்.