• Mon. Feb 2nd, 2026

24×7 Live News

Apdin News

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள்

Byadmin

Feb 2, 2026


பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 வீராங்கனைகள் ,  BBC ISWOTY

பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் (Indian Sportswoman of the Year) 6-ஆவது பதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

2025-ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாகவும் விளையாட்டு துறையில் அனைத்து பெண்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர் குழு, ஐந்து இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் இறுதிப் பட்டியலைத் தொகுத்தது. இந்த நடுவர் குழுவில் இந்தியா முழுவதிலுமிருந்து அனுபவமிக்க விளையாட்டுப் பத்திரிகையாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உள்ளனர்.

இம்முறை பிபிசி முதன்முறையாக வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்க தேர்வுக்குழுவை (Grand Jury) அறிமுகம் செய்துள்ளது. இந்த தேர்வுக்குழுவில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் மற்றும் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் உள்ளனர்.

பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். மேலும் 3 பிரிவுகளின் கீழ் நடுவர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகளை பிபிசி கௌரவிக்கும். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளை முன்னிலைப்படுத்த பிபிசி சிறந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை, இளம் தடகள வீராங்கனைகளின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக பிபிசி வளரும் வீராங்கனை விருது மற்றும் மூத்த வீராங்கனை ஒருவரின் ஈடுஇணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

By admin