
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இன்று (பிப்ரவரி 16) மாலை 7 மணிக்கு புது டெல்லியில் நடைபெற உள்ள பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் 6-வது பதிப்புக்கான மேடை தயாராக உள்ளது.
விருது நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பை நீங்கள் பிபிசி தமிழ் சேவையின் இணையதளம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கத்தில் காணலாம்.
இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்கள் பிப்ரவரி 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகிய ஐந்து தலைசிறந்த விளையாட்டு வீராங்கனைகள் போட்டியில் உள்ளனர்.
இந்த விருது 2025-இல் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்பை அங்கீகரிப்பதோடு நாட்டில் அனைத்து விளையாட்டுகளிலும் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது.
ஐந்து வீராங்கனைகளின் பெயர்களும் பிபிசி நியமித்த குழுவால் பரிந்துரைக்கப்பட்டன. இந்தக் குழுவில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டு பத்திரிகையாளர்கள், நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இடம்பெற்றனர்.
முதல்முறையாக வெற்றியாளரைத் தீர்மானிக்க தேர்வுக் குழு ஒன்றை பிபிசி அமைத்துள்ளது. இந்த தேர்வுக் குழுவில் டென்னிஸ் வீரர் லியாண்டர் பேஸ், முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் மற்றும் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தீபா மாலிக் ஆகியோர் உள்ளனர்.
பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். பிபிசி விளையாட்டு வீராங்கனை விருதுடன், தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று இதர விளையாட்டு வீராங்கனைகளையும் கீழ்கண்ட பிரிவுகளின் கீழ் பிபிசி கௌரவிக்க உள்ளது.
- பிபிசி மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை – பாரா விளையாட்டில் திறமையை அங்கீகரிப்பது
- பிபிசி வளர்ந்து வரும் வீராங்கனை – ஒரு இளம் வீராங்கனையின் சாதனையைக் கொண்டாடுவது
- பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது – விளையாட்டுத் துறையில் ஈடு இணையற்ற பங்களிப்புக்காக ஒரு மூத்த வீராங்கனையை கௌரவிப்பது.
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை (ISWOTY)
இந்திய விளையாட்டு வீராங்கனை விருது என்பது இந்திய விளையாட்டில் பெண்களின் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கான பிபிசி இந்திய மொழிகளின் முன்னெடுப்பு ஆகும்.
பாரம்பரியமாகவே, விளையாட்டு வீரர்களுக்கு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கிடைக்கும் நிலையில், இந்திய விளையாட்டு வீராங்கனைகள் மீதான வெளிச்சத்தை அதிகரிக்க இந்த தளம் முயல்கிறது. அங்கீகாரத்திற்கு அப்பால், இந்திய விளையாட்டு வீராங்கனை விருது விளையாட்டில் பாலின பிரதிநிதித்துவம் மற்றும் சமத்துவம் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களை வளர்க்கிறது.
பரிந்துரைக்கப்பட்ட வீராங்கனைகள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
திவ்யா தேஷ்முக், சதுரங்கம்

20 வயதான திவ்யா தேஷ்முக், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஃபிடே பெண்கள் உலக கோப்பையை வென்ற முதல் இந்தியர் மற்றும் இளம் சாம்பியனாக வரலாறு படைத்துள்ளார். இந்த வெற்றி அவருக்கு கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. இறுதிப் போட்டியில் கோனெரு ஹம்பியை அவர் வென்றது, கோப்பையை கைமாற்றும் தருணமாக அமைந்தது. ஏனெனில் கோனெரு ஹம்பி தான் கிராண்ட் மாஸ்டரான முதல் இந்தியப் பெண்.
2005-ஆம் ஆண்டு நாக்பூரில் பிறந்த திவ்யா ஐந்து வயதில் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளுக்குள் 7 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன் ஆனார். 2017-இல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பிரிவில் உலக இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
2022-இல் சென்னையில் நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அதைவிட பெரிய புகழுக்கான நேரம் வந்தது. அவர் தனிநபர் தங்கம் வென்றதோடு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த அணியிலும் அங்கம் வகித்தார்.
ஹர்மன்ப்ரீத் கௌர், கிரிக்கெட்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கௌர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரை வெல்வதற்கு தன் அணியை வழிநடத்திச் சென்றார். உள்ளூர் மண்ணில் விளையாடிய போது அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 339 ரன்களை சேஸ் செய்தபோது 88 பந்துகளில் 89 ரன்கள் அடித்து அணியை முன்னின்று வழிநடத்தினார்.
இதே அணிக்கு எதிராக 2017-இல் நடைபெற்ற இன்னொரு உலக கோப்பை அரை இறுதிப் போட்டியில் அவுட் ஆகாமல் இவர் அடித்த 171 ரன்கள் மகளிர் கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆட்டங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
1989-இல் பஞ்சாபில் விளையாட்டை விரும்பும் பெற்றோருக்கு மகளாக கௌர் பிறந்த போது அவரின் தந்தை “குட் பேட்டிங்” என பொறிக்கப்பட்டிருந்த டீ-ஷர்ட் ஒன்றை இவருக்கு வாங்கியிருந்தார். அந்த வார்த்தைகளை மெய்ப்பிக்கும் விதமாக 2009-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானதில் இருந்து பேட்டிங்கில் முக்கியமான நபராக இருந்து வருகிறார்.
இவர் டைம் இதழின் 2023-ஆம் ஆண்டிற்கான டாப் 100 வளரும் தலைவர்களின் பட்டியலிலும் பிபிசியின் டாப் 100 மிகவும் ஊக்கமளிக்கும் பெண்களின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். 2017-ஆம் ஆண்டு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. 2026-ஆம் ஆண்டில் இவருக்கு பத்மஶ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மிருதி மந்தனா, கிரிக்கெட்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா, எல்லா காலத்திலும் சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் ஒருவராக திகழ்கிறார். 29 வயதான இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் தற்போது விளையாடி வரும் வீராங்கனைகளில் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
மகாராஷ்டிராவின் சங்லி நகரத்தில் பிறந்த ஸ்மிரிதி மந்தனா அவரின் தந்தை மற்றும் சகோதரரால் ஊக்கம் பெற்றார். அவர்கள் இருவருமே மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
2013-ஆம் ஆண்டில், 19 வயதுக்குட்பட்டோருக்கான மண்டல அளவிலான போட்டியில் விளையாடிய போது, உள்ளூர் அளவிலான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்தார் . இது 50 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு இந்தியரின் அதிவேக சதமாகும். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்தார்.
அவர் 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார். 2019-ஆம் ஆண்டில் இந்திய அரசின் மதிப்புமிக்க அர்ஜுனா விருதை அவர் பெற்றார்.
சுருச்சி சிங், துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்குவதில் சிறப்பான வரலாற்றைக் கொண்ட ஹரியாணாவைச் சேர்ந்த சுருச்சி சிங், 2024-ஆம் ஆண்டில் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 7 தங்கப் பதக்கங்களை வென்று தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
19 வயதான அவர் அடுத்த ஓராண்டிற்குள் சர்வதேச அளவில் சீனியர் பிரிவு போட்டிகளில் அறிமுகமாகி, விரைவிலேயே உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். 2025-ஆம் ஆண்டில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் (ஐஎஸ்எஸ்எஃப் – ISSF) உலகக் கோப்பைத் தொடரில் பியூனஸ் அயர்ஸ் (Buenos Aires), லிமா மற்றும் மியூனிக் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 3 தங்கப் பதக்கங்களை வென்றார். லிமாவில் ஆண், பெண் இணைந்த கலப்பு குழு போட்டியில் அவர் தங்கம் வென்றார்.
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் -2025 தொடரில் மகளிர் குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் பாலக் குலியாவுடன் இணைந்து வெண்கலம் வென்றார்.
கடந்தாண்டு செப்டம்பரில் ஐஎஸ்எஸ்எஃப்-யின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார் சுருச்சி சிங்.
ஜோதி யாராஜி, தடகளம்

2024-ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் பங்கேற்க ஜோதி யாராஜி தகுதி பெற்றார். இதன் மூலம், தடகளம் மற்றும் களப் போட்டிகளில் சர்வதேச அளவிலான சாதனைகள் மிகக் குறைவாகவே இருக்கும் இந்தியாவில் இருந்து ‘ஒலிம்பிக்கில் 100 மீ தடை தாண்டும் ஓட்டத்திற்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனை’ என்ற பெருமையைப் பெற்றார்.
26 வயதான ஜோதி யாராஜி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், தடைகளைத் தாண்டுவது உண்மையில் அவருக்கு ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. அவரது தந்தை ஒரு காவலாளியாகவும், தாய் வீட்டு வேலைகள் செய்பவராகவும் இருந்தனர்.
2022-ஆம் ஆண்டில், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 13.23 விநாடிகளில் இலக்கை எட்டி, புதிய தேசிய சாதனையை அவர் படைத்தார். அதன் பின்னர் அவர் தனது சொந்த சாதனையை பலமுறை முறியடித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஸ்பிரிண்ட் ( குறுகிய தூர ஓட்டப்பந்தயம்) மற்றும் தடை தாண்டும் ஓட்டப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
2023-ஆம் ஆண்டில், ஜோதி ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பில் 60 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கத்தையும், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளியையும் வென்றார். இதன்மூலம் அவர் ஆசியாவின் சிறந்த தடை தாண்டும் வீராங்கனையாக தனது பெயரை நிலைநிறுத்தினார். 2025-ஆம் ஆண்டு குமியில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.
2024-ஆம் ஆண்டு ஜோதி யாராஜிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது
இந்தியாவில் விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளை கௌரவிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது (ISWOTY) 2019-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
2020-ஆம் ஆண்டுக்கான விருதை உலக சதுரங்க சாம்பியன் கொனேரு ஹம்பி வென்றார். 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான விருதுகளை பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வென்றார். 2024-ஆம் ஆண்டுக்கான விருதை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வென்றார்.
தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா மற்றும் அஞ்சு பாபி ஜார்ஜ், பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, ஹாக்கி வீராங்கனை பிரீதம் சிவாச் மற்றும் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் முந்தைய ஆண்டுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வென்றுள்ளனர்.
டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேல் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லேகரா ஆகியோர் பிபிசி இந்தியாவின் பாரா மகளிர் விளையாட்டு வீராங்கனை விருதுகளை வென்றுள்ளனர்.
கிரிக்கெட் வீராங்கனை ஷாஃபாலி வர்மா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் மற்றும் வில் வித்தை வீராங்கனை ஷீதல் தேவி ஆகியோர் பிபிசியின் வளர்ந்துவரும் வீராங்கனைகளுக்கான விருதுகளை வென்றுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு