0
பிபிசியின் (BBC) தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்த டிம் டேவி, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவருடன், பிபிசி செய்தித் துறையின் தலைமை நிர்வாகி டெபோரா டர்னஸும் இராஜினாமா செய்துள்ளார்.
டிம் டேவி, ஐந்து ஆண்டுகள் இந்தப் பதவியில் பணியாற்றியுள்ளார். இந்த இராஜினாமாக்கள், நடுநிலைமை குறித்த கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து வந்துள்ளன. இது தொடர்பாக பிபிசி நிறுவனம் திங்கட்கிழமை அன்று மன்னிப்புக் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிபிசியின் நடுநிலைமை குறித்த கவலைகள் எழுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது, ‘பனோரமா’ ஆவணப்பட நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரை திருத்தப்பட்ட விதம் ஆகும்.
இந்தச் சர்ச்சை, கடந்த ஆண்டு அமெரிக்கத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு பிபிசி ஒளிபரப்பிய Trump: A Second Chance? என்ற ஆவணப்படம் தொடர்பானது.
2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி ட்ரம்ப் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகளைச் சேர்த்து திருத்தி, அவர் தனது ஆதரவாளர்களை “நரகத்தைப் போலப் போராட” (fight like hell) தன்னுடன் அமெரிக்க கேபிடல் நோக்கி வருமாறு கூறியதுபோலக் காட்டப்பட்டதாகக் கவலைகள் எழுந்துள்ளன.
டிம் டேவி ஞாயிற்றுக்கிழமை மாலை ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், இராஜினாமா செய்வது, “முழுக்க தனது சொந்த முடிவு” என்று கூறியுள்ளார். பிபிசி “குறைகள் அற்றது அல்ல” என்பதை ஒப்புக்கொண்ட அவர், “நாம் எப்போதும் வெளிப்படையாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
பிபிசி செய்தி குறித்த தற்போதைய விவாதம் தனது முடிவுக்குப் பங்களித்தது, என்றாலும் அதுவே ஒரே காரணம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக பிபிசி சிறப்பாகச் செயல்படுகிறது என்றாலும், சில தவறுகள் நடந்துள்ளதால், தலைமை இயக்குநர் என்ற முறையில் அதன் முழுப் பொறுப்பையும் நான் ஏற்க வேண்டும் என்று டேவி கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப், டேவி மற்றும் டர்னஸ் ஆகியோரின் இராஜினாமாவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிலளித்தார். அவர்கள் இருவரும் “ஒரு ஜனாதிபதித் தேர்தலின் முடிவைத் திருத்த முயன்ற மிகவும் நேர்மையற்ற நபர்கள்” என்று அவர் விமர்சித்துள்ளார்.