சமீப ஆண்டுகளில் மது அல்லாத பானங்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. வைன், ஸ்பிரிட்ஸ், பியர் மற்றும் சிடர் எனப் பல வகையான பானங்கள் சந்தையில் உள்ளன. யூகவ் நடத்திய ஆய்வில் பிரிட்டனில் மது அருந்துபவர்களில் 38% பேர் குறைவான மது அளவு அல்லது மது இல்லாத பானங்களை விரும்புவதாக தெரியவந்துள்ளது. 2022-இல் இது 29% ஆக இருந்தது.
மது அல்லாத பானங்கள் பிரபலமடைவது பலருக்கும் அதன் சுவை மீதான ஆர்வத்தினால் தானே தவிர மது அருந்த வேண்டும் என்கிற ஆசையால் அல்ல. அதில் பலரும் மது பானங்களை விட மது அல்லாத பானங்கள் ஆரோக்கியமானது எனக் கருதுவதாலும் வாங்குகின்றனர். மின்டெல் மேற்கோண்ட ஆய்வில் மது நுகர்வோரில் 15 முதல் 20% பேர் மது அல்லாத பானங்களை வாங்குவதில் கூடுதல் சுகாதாரப் பலன்கள் இருப்பதாக கருதுகின்றனர்.
மது அல்லாத பானங்கள் அதிகாலை தலைவலியிலிருந்து உங்களை காப்பதோடு கூடுதல் சுகாதார நன்மைகளுடன் வருகிறதா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மது அல்லாத பானங்கள் பிரபலமடைவதற்கான காரணம் என்ன?
அல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் உணவியல் துறையில் மூத்த விரிவுரையாளரான மருத்துவர் காம்ஹியான் லோக், மது இல்லாமல் இரவைக் கழிப்பது தொடர்பான அணுகுமுறையில் கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நம்புகிறார்.
“மதுபான நுகர்வு மற்றும் அதன் சாத்தியமான விளைவுகள் பற்றிய அதிக தகவல்கள் கிடைப்பதால் மக்கள் மது அல்லாத பானங்களை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டனர். இதனால் எழுந்துள்ள தேவைகளை மதுபான நிறுவனங்கள் மூலதனமாக்குகின்றன,” என்றார்.
எப்போதுமே சமூகத்தில் பழக விரும்புபவர்களுக்கு ஆல்கஹால் இல்லாத பானத்திற்கான தேவை இருந்ததாகக் கூறுகிறார் உணவியல் நிபுணரும் பிரிட்டிஷ் டயடிக் அமைப்பின் செய்தித் தொடர்பாளருமான டுவெய்ன் மெல்லோர்.
“முன்னர் அத்தகைய பானங்கள் சிறப்பானதாக இல்லை என்பது தான் பிரச்னையாக இருந்தது. ஆனால் மதுவிற்கு பின்பற்றப்படும் அதே குறைவான அழுத்தம் கொண்ட தயாரிக்கும் முறைகளால் தற்போது சிறந்த பியர் அல்லது வைன் தயாரிக்க முடியும்.” என்று கூறுகிறார் டுவெய்ன்.
மது அல்லாத பானங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் பற்றிய கட்டுக்கதைகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
மது அல்லாத பானங்களில் முற்றிலும் மது இருக்காதா?
பட மூலாதாரம், Getty Images
“ஆல்கஹால் அல்லாத பானங்கள் என விளம்பரப்படுத்தப்படும் பானங்கள் அனைத்திலும் ஆல்கஹால் இல்லை என நாம் அனுமானிக்கக்கூடாது. ஏனெனில் அரசாங்கத்தின் பரிந்துரைகள் அவற்றை அனுமதிக்கின்றன,” எனக் குறிப்பிடுகிறார் லோக்.
‘ஆல்கஹால் அல்லாத’ பானம் எனக் குறிப்பிடப்படும் பானங்களில் 0.5% வரை ஆல்கஹால் இருக்கலாம் என ட்ரிங்க்அவேர் தெரிவிக்கிறது. அதே வேளையில் குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட பானங்களில் 1.2% வரை ஆல்கஹால் இருக்கலாம்.
மது அல்லாத பானங்களில் கலோரிகள் குறைவாக உள்ளனவா?
“ஆல்கஹாலில் கலோரிகள் உள்ளன, எனவே மதுபானத்தோடு ஒப்பிடுகையில் மது அல்லாத பானங்களில் குறைந்த அளவிலே கலோரிகள் உள்ளன,” என்கிறார் பிரிட்டிஷ் நியூட்ரிஷன் ஃபவுண்டேஷனின் ஊட்டச்சத்து விஞ்ஞானியான ப்ரட்ஜெட் பெனலெம்.
“ஆல்கஹாலில் ஒவ்வொரு கிராமில் ஏழு கலோரிக்கள்” இருப்பதாக மெல்லோர் குறிப்பிடுகிறார்.
எனினும் மது அல்லாத பானங்களில் கலோரிக்கள் இல்லாமல் இல்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியம் என்கிறார் பெனலெம்.
“அவற்றில் கலோரிக்கள் உள்ளன, அவை எந்த வகை பானம் என்பதைப் பொருத்து சர்க்கரை நிறைந்ததாகவும் உள்ளன. அந்த பானங்களை இனிப்பானதாக ஆக்க தேவையான அளவு சக்கரை அதில் இருக்கும்,” என விளக்கினார்.
மது அல்லாத பானங்கள் கல்லீரலுக்கு நல்லதா?
பட மூலாதாரம், Getty Images
“நீண்ட கால நோக்கில் அதிக அளவில் மது எடுத்துக் கொள்வது கல்லீரலை பாதிக்கும்,” எனக் குறிப்பிடுகிறார் லோக். “இதிலிருந்து மதுவை நீக்கினால் அந்த தாக்கம் இருக்காது.” என்றும் தெரிவித்தார்.
அதே வேளையில் சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு மீது கவனம் செலுத்துகிறார் லோக்.
இது உணவு அல்லது பானங்கள், சிரப்களில் சேர்க்கப்படும் கூடுதல் சர்க்கரை, தேன், பழச்சாறு, காய்கறி சாறு மற்றும் ஸ்மூத்திகளில் உள்ள சர்க்கரைகளை உள்ளடக்கும்.
மது அல்லாத பானங்கள் மூலம் கூடுதல் அளவிலான சர்க்கரை நுகரப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார். “அவற்றை கூடுதலாக எடுத்துக் கொண்டால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படலாம்.” என்றார்.
மது அல்லாத பானங்கள் நமது பொது ஆரோக்கியத்திற்கு நல்லதா?
ரெட் வைன் போன்ற ஆல்கஹால் குறைக்கப்பட்ட பானங்கள் இதய நோய் ஆபத்து போன்ற பிரச்னைகளை உருவாக்குவதற்கான சாத்தியங்களையும் நாம் பார்க்க வேண்டும் என்கிறார் லோக்.
சில மது அல்லாத பியர்களில் பி வைட்டமின்கள் இருக்கலாம் எனக் பெனலெம் கூறுகிறார். “பியர் போன்ற தயாரிப்புகளில் கவனத்தை ஈர்க்கக்கூடிய சில உள்ளீடுகள் இருக்கலாம்,” என மெல்லோர் குறிப்பிடுகிறார்.
எனினும் ஆல்கஹால் அல்லாத பானங்கள் ஊட்டச்சத்துக்களின் முதன்மை ஆதாரமாக கருதப்படாது என்கிறார் பெனலெம். “உணவில் ஊட்டச்சத்து என நாம் பார்க்கிறபோது அவை ஆரோக்கியமான மற்றும் சமநிலைப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தான் குறிக்கும்.” என்று அவர் தெரிவித்தார்.
அதிகப்படியான திரவம், சர்க்கரை மற்றும் அசிடிக் பானங்களால் பல் எனாமல்களில் ஏற்படும் ஆபத்துகளையும் மெல்லோர் சுட்டிக்காட்டுகிறார்.
சொந்தமாக தயாரிக்க முடியுமா?
பட மூலாதாரம், Getty Images
சந்தைகளில் கிடைக்கும் மது அல்லாத பானங்கள் உங்களை கவரவில்லை என்றால் நீங்கள் சொந்தமாகவே ஒன்றை தயாரிக்கலாம். “மது பானங்களில் காட்டும் அக்கறை மற்றும் கவனத்தை மது அல்லாத பானங்களின் மீதும் காட்ட வேண்டும்,” என்கிறார் காக்டெய்ல் நிபுணரான ப்ரிதேஷ் மோடி.
“ஆப்பிள் சாறு, எலுமிச்சை மற்றும் இஞ்சி பியர் ஒரு சுவையான பானம் ஆகும்” என்கிறார் ப்ரிதேஷ். மேலும் அவர் கொம்புசா மற்றும் விர்ஜின் எஸ்ப்ரெஸோ மார்டினியைக் குறிப்பிடுகிறார். சைடர் வினிகர், ஆப்பிள் சாறு மற்றும் சோடாவை ஒரு மாற்றாகப் பயன்படுத்தலாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.