
-
- எழுதியவர், சுதா ஜி திலக்
-
70 வயதில், பியானா வாத்ரே மோமின் வீட்டிலிருந்து வெகு தூரம் செல்ல துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார்.
ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியரான இவர், வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள காரோ மலையில் நான்கு நாய்களை வளர்த்துக்கொண்டு, தன் பேரப்பிள்ளைகளை அன்புடன் பார்த்துக்கொண்டு, எங்கே அமைதியான குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தாரோ – அங்கிருந்து திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து தெற்கே கேரளாவுக்குச் சென்றார்.
அவர் தனக்குப் புரியாத ஒரு மொழியைக் கையாள வேண்டியிருந்தது, ஷூட்டிங் தொடங்கிய பின்னரே அவர் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தின் முழு விவரம் தெளிவானது.
அந்தப் படம் ‘எகோ’ , அவரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஒரு மலையாள மொழித் திரைப்படம்.
காரோ பழங்குடியினத்தைச் சேர்ந்த மோமினுக்கு நடிப்பு என்பது ஒருபோதும் லட்சியமாகவோ அல்லது தொலைதூர ஆர்வமாகவோ இருந்ததில்லை.
“நான் வளர்ந்தபோது, எங்கள் நகரத்தில் சினிமா அரங்கோ அல்லது திரையரங்கோ இல்லை,” என்று அவர் பிபிசியிடம் கூறினார். அவர் நடிப்புக் கலைகளில் ஒருபோதும் பயிற்சி பெறவில்லை, “வகுப்பறையில் கற்பிப்பதை ஒரு வகையான நடிப்பு என்று நீங்கள் அழைத்தால் தவிர,” என்று சிரிக்கிறார் அவர்.
அரசு கல்லூரியில் ஓய்வுபெற்ற ஆங்கில இலக்கிய ஆசிரியரான இவர் ரொமாண்டிக் கவிதைகளில் ஆர்வமுடையவர். ஒரு நாள் கேமரா தன் முகத்தை படம் பிடிக்கும் என்று மோமின் நம்பவில்லை. ஆயினும் எகோ அவர் வாழ்க்கையில் நுழைந்தபோது, அது எதிர்பாராத சாகசத்தை வழங்கியது.
“ஆரம்பத்தில் நான் தயக்கம் காட்டினேன், ஏனெனில் எனக்கு நடிப்பில் அனுபவம் இல்லை, மேலும் வீட்டிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்வதைக் குறித்தும் கவலையாக இருந்தேன்,” என்று கூறுகிறார். “ஆனால் என் மகள் என்னை தூண்டினார், ‘உன்னை நீ நம்பு, புதிதாக ஏதாவது முயற்சி செய்,’ என்று கூறினார்.”

45 நாட்களில் முடிக்கப்பட்ட திரைப்படம்
“எக்கோ” என்ற வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட “எகோ” என்ற திரைப்படத்தில், மோமின் மேற்குத் தொடர்ச்சி மலையில் தனிமையில் வாழும் ஒரு மர்மமான மூதாட்டியான மலாத்தி செட்டத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரமாக, அவர் முழு கதைக்கும் தளமாக நிற்கிறார். மங்கலான பனிமூட்டம் சூழ்ந்த காட்சிகளுக்கும், படத்தின் நல்லது – கெட்டது என்ற மைய கருத்துக்கும் அவரது நடிப்பு வலுவாக உள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் படமாக்கப்பட்டு, 45 நாட்களில் முடிக்கப்பட்ட “எகோ” திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
அது அவரது நடிப்பின் அமைதியான சக்தி மற்றும் அவரது அசாதாரணமான தோற்றம் ஆகிய இரு காரணங்களுக்காகவும் அந்தப் படம் குறித்த பெரும்பாலான ஆர்வம், மோமினின் நடிப்பைச் சுற்றியே மையமிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியப் படையெடுப்பின் போது மலேசியாவிலிருந்து தப்பித்து, மறைமுக நோக்கங்களைக் கொண்ட சில ஆண்களுடன் கேரளாவுக்கு வரும் ஒரு வயதான மலாய் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் தின்ஜித் அய்யத்தன் ஒரு புதுமுகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.
பல தசாப்தங்களாக, அவர் ஒரு காடு சூழ்ந்த மலையின் உச்சியில் உள்ள சிதிலமடைந்த வீட்டில் தனிமையில் வாழ்கிறார்; காட்டு நாய்களுடனும் நகரும் மேகங்களுடனும் தனது உலகத்தைப் பகிர்ந்துகொள்கிறார். அதே சமயம், நண்பர்கள், உறவினர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆண்கள், அவரைச் சுற்றியுள்ள மர்மத்தைத் தீர்க்க முயல்கிறார்கள்.
சரியான நடிகரைத் தேடும் பணி, எகோ படக்குழுவை வளர்ந்து வரும் திரைப்படத் துறையில் உள்ள நண்பர்களையும், வடகிழக்கு மாநிலங்கள் எட்டிலும் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தினரையும் அணுக வைத்தது. மலாய் இனத்தவரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை அவர்கள் தேடினர்.
அப்போதுதான் காரோ நாட்டுப்புறக் கதைகளைப் பற்றிய குறும்படத்தில் சமீபத்தில் தோன்றிய மோமினின் படங்கள் மற்றும் காட்சிகள், கேரளாவை தளமாகக் கொண்ட தேடல் குழுவுக்கு கிடைத்தன, மனித ஆத்மாக்கள் விலங்குகளாக மாறுவதை ஆராய்ந்த படம் அது.

மழை நாளில், அவர் தனது மகனுடன் இயக்குனரையும் எழுத்தாளரையும் ஆடிஷனுக்காக சந்திக்க சென்றார்.
“நாங்கள் அவருக்கு ஒரு கற்பனையான சூழ்நிலையைக் கொடுத்தோம்: தனது மகனைக் காணவில்லை என்று காவல்துறை அதிகாரிகளை அணுகி புகார் அளிக்கச் சொன்னோம்,” என்கிறார் எகோவின் எழுத்தாளரும் ஒளிப்பதிவாளருமான பாஹுல் ரமேஷ்.
“அவரது தன்னிச்சையான தன்மை, உணர்ச்சிபூர்வமான கட்டுப்பாடு மற்றும் அமைதியான நம்பிக்கை உடனடியாகத் தெரிந்தது. இந்த வயதில் வீட்டை விட்டு வெகுதூரம் சென்று முற்றிலும் புதிய ஒன்றை முயற்சிக்கும் அவரது தைரியம் எங்களை வென்றது.”
எகோ பெரும்பாலும் ஒரு சுற்றுச்சூழல்-மர்மம் அல்லது உளவியல் த்ரில்லர் என்று விவரிக்கப்பட்டாலும், அதை எளிதாக ஒரே வகைக்குள் அடக்க முடியாது. அதேபோல மிளாத்தி செட்டாத்தி என்ற கதாபாத்திரமும். அவர் அலங்காரமோ அல்லது மாயக் க்ளிஷேவோ அல்ல. அதற்கு பதிலாக, அவர் ஒரு அமைதியான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்.
“ஒரு பழங்குடியினராக, இந்த வயதில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்பும் படைப்பாற்றல் உள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்,” என்று மோமின் கூறுகிறார். “இது மேலும் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.”

ரமேஷ் அவரது நடிப்பை “இயற்கையானது மற்றும் உள்ளுணர்வு மிக்கது” என்று வர்ணிக்கிறார். “70 வயதில் முதல் முறையாக ஒரு படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்த அவரது அச்சமின்மைதான் அசாதாரணமானது” என்று அவர் கூறுகிறார்.
மோமினுக்கு அந்தப் படப்பிடிப்பு ஒரு கல்வி அனுபவமாக இருந்தது.
“திடீரென்று, நான் மீண்டும் ஒரு மாணவியாகிவிட்டேன்,” என்று அவர் கூறுகிறார்.
ஒரு மொழிப் பயிற்சியாளரின் உதவியுடன் தனது மலையாள வசனங்களை உச்சரிப்பு ரீதியாகக் கற்றுக்கொண்டார், காட்சி அமைப்பிற்கான குறிப்புகளைப் பின்பற்றினார், உணர்ச்சிப்பூர்வமான நுணுக்கங்களைப் உள்வாங்கிக்கொண்டார்,
அவரது வசனங்கள் பின்னர் உள்ளூர் குரல் கலைஞரால் டப் செய்யப்பட்டாலும், மோமின் படப்பிடிப்பின் போது தனது வசனங்களை மனப்பாடம் செய்து பேசினார். படப்பிடிப்பு ஒவ்வொரு நாளும் மலையில் நீண்ட நடைப்பயணங்கள், கணிக்க முடியாத வானிலை, மூத்த நடிகர்கள், கனரக உபகரணங்கள் மற்றும் மழை ஆகியவற்றை உள்ளடக்கியது.
“நான் ஒரு வலுவான பெண்,” என்று அவர் கூறுகிறார். “வானிலை காரணமாக நான் நோய்வாய்ப்படவில்லை, கேரளாவில் உணவு வகைகளை முயற்சிக்கும் அளவுக்கு சாகசமாக இருந்தேன்.”
பட மூலாதாரம், Biana Watre Momin
படக்குழு உறுப்பினர்கள் உணர்ச்சி, கோணங்கள் மற்றும் இயக்கம் பற்றிய அவரது கூர்மையான புரிதலால் ஈர்க்கப்பட்டதாக கூறுகின்றனர்.
“நான் முழு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன், அதிலிருந்து நான் பெற முடியும்,” என்று அவர் கூறுகிறார். “நான் கேரளாவைப் போலவே ஒரு தாய்வழி பழங்குடியினத்திலிருந்து வந்தவள், எனது பெண்ணியம் பாத்திரத்திற்கான எனது அணுகுமுறையை தெரிவித்தது.”
”மோமின் அமைதியான புரிதலுடன் இந்த பெண்ணியக் கதைக்குள் ஒன்றிவிட்டார்,” என்று ரமேஷும் ஒப்புக்கொள்கிறார்.
அவரைப் பாராட்டிப் பலரும் புகழ்ந்துள்ளனர். நடிகர் தனுஷ் இதை ஒரு “உலகத் தரம் வாய்ந்த நடிப்பு” என்று வர்ணித்துள்ளார்.
‘எகோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, பாலிவுட் மற்றும் பிற திரையுலகைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் மோமினைத் திரைக்கதைகளுடன் அணுகியுள்ளனர். “பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன,” என்று அவர் சொல்கிறார்.
“நடிப்பு என்பது கடினமான வேலை. என்னென்ன ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்று பார்ப்போம்.”
தற்போதைக்கு, மோமின் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு, தனது புத்தக மன்றத்தில் ஈடுபட்டு, தனது வீட்டு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். “இந்த வாரம் நாங்கள் அருந்ததி ராயின் ‘மதர் மேரி கம்ஸ் டு மீ’ புத்தகத்தைப் பற்றி விவாதிக்கப் போகிறோம்,” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு