பட மூலாதாரம், Reuters
பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 31 , செப்டம்பர் 1 என இரண்டு நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)மாநாட்டில் அவர் பங்கேற்பார்.
கூடுதல் வரிவிதிப்புகள் காரணமாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் பதற்றம் நிலவும் நேரத்தில் பிரதமர் மோதியின் சீனப் பயணம் கவனிக்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருந்தன.
ஆனால் சமீபத்தில் இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர்.
மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், குறிப்பாக டிரம்பின் ‘வரிவிதிப்பு போருக்கு’ப் பிறகு, இந்த புதிய இராஜதந்திர செயல்பாடு உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை சீன ஊடகங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றன என்பதை காணலாம்.
மூலோபாய சுயாட்சியின் முக்கியத்துவம்
“சீன வெளியுறவு அமைச்சர் வாங்யியின் கடந்த வார இந்திய பயணம், மோதியின் வருகைக்கான தயாரிப்பாக பரவலாகப் பார்க்கப்படுகிறது” என்று சீனாவின் அரசு செய்தித்தாளான ‘சீனா டெய்லி’ எழுதியுள்ளது.
உலகளாவிய நிலைமையைச் சமாளிக்க சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என்று அந்நாளிதழ் எழுதியுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான அழுத்தம் காரணமாக, சுதந்திர வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒழுங்கிற்கு சவால்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளதோடு,
அமெரிக்காவின் வரிவிதிப்பு அழுத்தத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற உண்மையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று சீனா டெய்லி எழுதுகிறது.
“ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் இந்தியா அமெரிக்காவுடன் மோதல் சூழ்நிலையில் சிக்கியது. அதன் பிறகு இந்தியா மூலோபாய சுயாட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது.”
சீனாவை ஒரு போட்டியாளராகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ பார்ப்பதற்குப் பதிலாக, இந்தியா அதை ஒரு கூட்டாளியாகவும் அதன் உயர்தர வளர்ச்சியை ஒரு வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும் என்றும் அந்த நாளிதழ் எழுதியுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அர்ஜுன் சாட்டர்ஜி ‘சீனா டெய்லி’யில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரதமர் மோதி பங்கேற்கும் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் மீது இப்போது அனைவரின் பார்வையும் இருப்பதாகக் கூறியுள்ளார்.
டிரம்பின் வரிவிதிப்புகளுக்குப் பிறகு சீனா இந்தியாவுடன் ஒற்றுமையைக் காட்டியுள்ளது என கூறும் அவர், அமெரிக்க நடவடிக்கையை அச்சுறுத்தும் செயலாக சீனா கருதுவதாகவும் எழுதுகிறார்.
இந்தியா தனது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால்வளத் துறையின் நலன்களில் சமரசம் செய்யாது என்று பிரதமர் மோதி தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
பசுமை விவசாயம், குறிப்பாக நைட்ரஜன் பயன்பாட்டு திறன், இந்தியாவும் சீனாவும் வேகமாகச் செயல்படும் ஒரு பகுதி என்று அர்ஜுன் சாட்டர்ஜி குறிப்பிடுகிறார். இது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு சிறந்த படியாக இருக்கும் என்பது அவரது கூற்றாக உள்ளது..
இணைப்பு, இரு நாடுகளுக்கும் இடையே மக்களின் பயணம், விவசாயம் அல்லாத வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டாண்மை ஆகியவற்றில் தியான்ஜின் உச்சிமாநாட்டில் ஏதேனும் ஒப்பந்தம் ஏற்பட்டால், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான போட்டி இருந்தபோதிலும் இது நடைமுறை ஒத்துழைப்புக்கான ஒரு வழியாக இருக்கலாம் என்று அவர் எழுதுகிறார்.
அமெரிக்கா, சீனா என இரண்டையும் சமாளிக்கும் முயற்சி
அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) மற்றும் வேறு சில நிறுவனங்களின் செய்திகள், பிரதமர் மோதியின் வருகையை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவை இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரிகள் குறித்த பிரச்னையை விவாதிக்கின்றன.
ஆகஸ்ட் 27 முதல் இந்திய ஏற்றுமதிகளில் அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத ‘அபராத வரி’ விதித்துள்ளதை ‘சின்ஹுவா’ செய்தி குறிப்பிடுகிறது.
இதன் காரணமாக, இந்தியாவின் மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதே காரணம் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக, சுமார் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும், இந்தியா எந்த அழுத்தத்தையும் தாங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
ஜிஎஸ்டியில் விரைவான சீர்திருத்தங்களை அவர் அறிவித்துள்ளார். மறுபுறம், இந்தியா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று ஸ்தம்பித்துள்ளது
பட மூலாதாரம், Getty Images
அதே நேரத்தில், தேசியவாத செய்தி வலைத்தளமான ‘குவாஞ்சா’ (Guancha), ‘சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுடனான தனது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்’ என்று எழுதியுள்ளது.
“மோதி கடந்த ஆண்டு முதல் தனது அமெரிக்க சார்பு கொள்கையை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறார், ஆனால் அவர் சீனா மற்றும் ரஷ்யாவுடன் எவ்வளவு தூரம் செல்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.”
இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் Quad இரண்டிலும் ஒரு பகுதியாக இருந்த போதிலும், எந்த ஒரு குழுவுடனும் கட்டுப்பட்டு இயங்க மறுக்கிறது.
ஆயினும்கூட, கூட்டு அறிக்கையில் கையெழுத்திடாதது மற்றும் ஆங்கிலத்தை வேலை மொழியாக மாற்றக் கோருவது என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பல சந்தர்ப்பங்களில் சீனா மற்றும் ரஷ்யாவுக் முயற்சிகளுக்கு இந்தியா சவாலாக இருந்திருக்கிறது.
குவாஞ்சாவில் வெளியிடப்பட்ட செய்தி, “இந்தியா ‘இரு தரப்புடனும் விளையாடும்’ கொள்கையுடன் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது. இருப்பினும், டிரம்ப் 2.0 சகாப்தத்தில் இந்த சமநிலை கடினமாகி வருகிறது.” என கூறுகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு