ராமேசுவரத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள பாம்பன் புதிய தூக்கு பாலத்தில் சனிக்கிழமை (ஏப்.6) முதல் ரயிலை மதுரையைச் சேர்ந்த தெற்கு ரயில்வே பிரிவில் பணிபுரியும் ஓட்டுநர் தாமரைச்செல்வன் இயக்குகிறார்.
இவர்,கடந்த 1994-ல் அன்றைய தென் மத்திய ரயில்வே ஹூப்ளி கோட்டத்தில் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரையிலும் சுமார் 31 ஆண்டுகளாக ரயில் ஓட்டுநர் பணி அல்லாது வேறு எந்த பணியும் செய்ய விரும்பாதவர். தொடர்ந்து ரயிலை ஓட்டுநர் பணி மட்டுமே செய்கிறார். ரயில் ஓட்டுநர்கள் தங்களின் பணி காலத்தில் சில காலம் மேற்பார்வையாளர்களாக பணிபுரிய செல்வார்கள். ஆனால் அதில் எல்லாம் ஈடுபாடு இன்றி ரயில் இயக்குவது தான் தனக்கு பிடித்த, விரும்பும் பணி என மிகுந்த ஈடுபாட்டுடன் செய்கிறார்.
மேலும் 2019 மார்ச் 1-ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்த மதுரை – சென்னை தேஜாஸ் ரயிலை முதன்முதலாக இயக்கினார். இது தவிர, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்யும் ரயில், ரயில்வே வாரிய அதிகாரிகள் ஆய்வு ரயில், பொது மேலாளர், கோட்ட மேலாளர் ஆய்வு ரயில் உள்ளிட்ட முக்கியமான அனைத்து ரயில்களும் இயக்கிய பெருமை உடையவர். புதிய பாம்பன் பாலத்தில் பிரதமர் தொடங்கி வைக்கும் முதல் ரயிலை இயக்க அவர் தேர்வாகியுள்ளார். இதற்காக அவருக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது.
இது குறித்து தாமரைச்செல்வனிடம் கேட்டபோது, ‘எனது தகுதியினாலும், பெற்றோர் ஆசியினாலும் இப்பணி எனக்கு கிடைத்தது. இதனை அர்ப்பணிப்புடனும், ஈடுபாட்டோடும் செய்கிறேன். இதனை நாட்டுக்கு செய்யும் சேவையாக கருதுகிறேன். பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயிலை ஓட்டுவதிலும் பெருமை கொள்கிறேன்’ என்றார்.