• Sat. Mar 1st, 2025

24×7 Live News

Apdin News

பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து | PM Modi extends birthday greetings to Tamil Nadu CM Stalin

Byadmin

Mar 1, 2025


புதுடெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மு.க.ஸ்டாலினுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யவும், அதில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று, தமிழக மக்களுக்கு சேவையாற்றிட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பிஹார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் இளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மரியாதைக்குரிய மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! சமூக நீதி மற்றும் சமத்துவ சமூகம் குறித்த உங்கள் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற கடவுள் உங்களுக்கு நீண்ட, வெற்றிகரமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கட்டும்” என கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தங்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தலைமையில் தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் திசைகளிலும் முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நலமுடன் நல்லாட்சி நடத்துக” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளை தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.



By admin