பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 4ஆம் தேதி இலங்கை செல்லவிருக்கிறார். இந்தப் பயணத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 4ஆம் தேதி இலங்கை செல்கிறார். இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் பிரதமர், ஏப்ரல் 6ஆம் தேதிவரை அங்கு தங்கியிருப்பார். அதற்குப் பிறகு ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டுச் செல்வார்.
தாய்லாந்தில் நடக்கும் BIMSTEC உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு, அங்கிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை மாலையில் கட்டுநாயக்கேவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோதி வந்து இறங்குவார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர், வெளியுறவுச் செயலர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோரும் வருகின்றனர்.
ஏப்ரல் 5ஆம் தேதி கொழும்பு நகரில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் நரேந்திர மோதிக்கு அரச வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் இலங்கை ஜனாதிபதி, பிரதமர், மூத்த அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இதைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் ஒரு சிறிய வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அதற்குப் பிறகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாய்க்கவுக்கும் பிரதமர் மோதிக்கும் இடையிலான இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடக்கவுள்ளன. மொத்தமாக எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினமே, சம்பூர் சூரிய மின் உற்பத்தித் திட்டத்திற்கான கட்டுமானப் பணியை காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மோதி துவக்கி வைக்கிறார். அதேபோல, இலங்கையில் உள்ள மதத் தலங்களுக்கு சூரிய மின்சாரக் கட்டமைப்புகளைக் கையளித்தல், தம்புள்ளவில் ஒரு குளிர்பதனக் கிடங்கைத் திறந்து வைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளும் கொழும்பு நகரில் இருந்தே நடக்கவிருக்கின்றன.
பிரதமரின் இந்தப் பயணத்தின்போது, அவருக்கு ‘மித்ர விபூஷணா’ என்ற விருது வழங்கப்பட இருப்பதாகவும் இந்திய அமைதி காக்கும் படையில் பணியாற்றி உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்திற்குச் சென்று பிரதமர் மரியாதை செலுத்தவுள்ளதாகவும் விஜித ஹேரத் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கூட்டு செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு அடுத்த நாள், அதாவது ஏப்ரல் 6ஆம் தேதி அநுராதபுரத்தில் உள்ள மகாபோதி கோவிலுக்கு பிரதமர் மோதி செல்கிறார். அதற்குப் பிறகு, இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் சமிக்ஞை கட்டமைப்பைத் திறந்து வைக்கும் நிகழ்வும் நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வு முடிந்த பிறகு, அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு பிரதமர் புறப்படுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இரு தரப்பாலும் பார்க்கப்படுகிறது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டார்.
அநுரகுமாரவின் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன, இந்திய எதிர்ப்பிற்குப் பெயர்போன கட்சி. இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கையை ஜனதா விமுக்தி பெரமுன நீண்ட காலமாகவே விமர்சித்து வந்தது. ஒரு விரிவாக்கப் பார்வையுடனயே இலங்கையை இந்தியா அணுகுவதாகக் குற்றம் சாட்டியும் வந்தது. இவையெல்லாம் சேர்ந்து, அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கு சாதகமற்ற ஜனாதிபதி என்ற தோற்றத்தையே ஏற்படுத்தியிருந்தன.
ஆனால், புதிய ஜனாதிபதி விவகாரத்தில் இந்தியா மிகக் கவனமாகவே இருந்தது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பாகவே, அதாவது பிப்ரவரி மாத வாக்கிலேயே அவரை இந்தியாவுக்கு அழைத்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். இந்திய எதிர்ப்புப் பார்வையைக் கொண்ட கட்சியாக அறியப்படும் ஜனதா விமுக்தி பெரமுனவுடன் இணைந்து செயல்பட இந்தியா தயங்கப் போவதில்லை என்பதையும் இது சுட்டிக்காட்டியது.
அநுர குமார திஸாநாயக்க தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பிரதமர் நரேந்திர மோதி உடனடியாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இருந்தபோதும் அநுர குமார இந்தியாவை எப்படி அணுகுவார் என்பது தெளிவில்லாமல் இருந்த நிலையில், தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ள முடிவு செய்தார் ஜனாதிபதி. இது, இந்தியப் பெருங்கடல் அரசியலில் தான் இந்தியாவுக்கு எதிராக இருக்கப் போவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.
இந்தப் பின்னணியில்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் இலங்கைக்குச் செல்லவிருக்கிறார். அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியான பிறகு, அந்நாட்டிற்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நரேந்திர மோதிதான்.
பிரதமரின் இந்தப் பயணத்தில் என்ன நடக்கும்?
பட மூலாதாரம், Getty Images
இந்திய பிரதமரின் இந்தப் பயணத்தில் முக்கிய நிகழ்வாக அமையவிருப்பது, சம்பூர் மின் திட்ட கட்டுமானப் பணிகளின் துவக்கவிழா நிகழ்வுதான்.
திருகோணமலையில் உள்ள சம்பூரில் அமையவிருக்கும் இந்த மின் திட்டம், பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் ஒரு மின் திட்டம். 2006ஆம் ஆண்டில் 500 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் சம்பூரில் ஓர் அனல் மின் நிலையம் இந்திய ஒத்துழைப்புடன் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு அடுத்தகட்ட ஒப்பந்தங்கள் இலங்கை அரசு, இலங்கை மின்சார சபை, இந்தியாவின் தேசிய அனல் மின் கழகம் ஆகியவற்றுக்கு இடையில் 2013இல் தான் கையெழுத்தாகின. பிறகு 2016-வாக்கில், அனல் மின் நிலையத்திற்குப் பதிலாக, எரிவாயுவில் இயங்கும் மின் நிலையமாக இது உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இது சூரிய மின் திட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது.
முதல் கட்டமாக, 50 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள திட்டத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கவிருக்கின்றன. அடுத்த கட்டமாக 70 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள திட்டம் செயல்பாட்டுக்கு வரும். இந்த மின் நிலையத்தை இலங்கை மின்சார சபையும் தேசிய அனல் மின் கழகமும் சேர்ந்து செயல்படுத்தவுள்ளன.
இந்த மின்திட்டம் இலங்கையின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 28ஆம் தேதியன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, “இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பில் இந்தத் திட்டம் மிக முக்கியமான ஒரு மைல் கல்” எனத் தெரிவித்தார்.
அதேபோல, பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படலாம் என சூசகமாகத் தெரிவித்திருக்கிறார் விக்ரம் மிஸ்ரி. ஆனால், அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த பிற தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் கவனம் பெற்றிருக்கிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு நடவடிக்கையாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் பேசியுள்ள விஜித ஹேரத், பயிற்சியளிப்பது, சில கருவிகளைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
“கடந்த முறை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இந்த விவாகரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோதி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அந்தத் தருணத்திலும் அதற்குப் பிறகும் இலங்கை இது தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இதுபோன்ற ஒப்பந்தம் கையெழுத்தாவது இரு நாடுகளின் பாதுகாப்பிற்கும் அப்பால் சென்று இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருக்கும்,” என்கிறார் வெளியுறவு விவகார ஆய்வாளரான என். சத்தியமூர்த்தி.
இவை தவிர, இரு நாடுகளுக்கும் இடையில் மின் கட்டமைப்பை உருவாக்குவது, இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து திருகோணமலையை எரிசக்தி மையமாக வளர்த்தெடுப்பது, கடன் மறுசீரமைப்பு ஆகியவை குறித்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளன.
ஆனால், இரு தரப்பு உறவிலும் பேசித் தீர்க்க வேண்டிய சில நெருடலான அம்சங்களும் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக, மன்னாரில் அதானி நிறுவனத்தால் அமைக்கப்படவிருந்த காற்றாலை மின் திட்டம் நிறுத்தப்பட்டிருக்கும் விவகாரம். இலங்கையில் அதானி குழுமம் இரு திட்டங்களை முன்னெடுத்தது. ஒன்று, மன்னார் – பூநகரி காற்றாலை மின் திட்டம். இரண்டாவது, கொழும்பு துறைமுகத்தில் செயல்படுத்தப்படும் West Container Terminal project என்ற திட்டம். இந்த இரண்டாவது திட்டம் எந்தச் சிக்கலும் இன்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், காற்றாலை மின் திட்டம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இலங்கை முதலீட்டு சபை, 442 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 350 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள காற்றாலைகளை அமைக்க, 2023 பிப்ரவரியில் அனுமதி அளித்தது. அதன்படி 250 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள காற்றாலைகள் மன்னாரிலும் 100 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள காற்றாலைகள் பூநகரியிலும் அமைக்கப்படும்.
இந்தத் திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நாட்டின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல மின் தொடரமைப்பும் நிறுவப்படும். ஆனால், இந்தத் திட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வந்தது. 2024ஆம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை ‘8.26 அமெரிக்க சென்ட்டிற்கு ஒரு யூனிட் ‘ என்ற விலைக்கு வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தத் திட்டத்திற்கு எதிராக தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலேயே அநுர குமார திஸாநாயக்க பேசி வந்தார். இந்தத் திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை மிக அதிகமாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். அவர் ஜனாதிபதியான பிறகு, இந்தத் திட்டத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் விலை குறித்து மீண்டும் விவாதிக்க அவரது அமைச்சரவை முடிவு செய்தது.
ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 6 அமெரிக்க சென்ட்டிற்கு குறைவாக இருக்க வேண்டுமென இலங்கை அரசு விரும்பியது. இதையடுத்து இந்தத் திட்டத்தை நிறுத்தப் போவதாக அதானி நிறுவனம் அறிவித்தது. இருந்தபோதும், இந்தத் திட்டத்திற்காக சுமார் 5 மில்லியன் டாலர்கள் அளவுக்கு ஏற்கெனவே செலவழித்துவிட்ட நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அதானி நிறுவனம் ஆர்வமாகவே இருக்கிறது. இந்தப் பயணத்தின்போது இந்தத் திட்டம் குறித்து ஏதும் விவாதிக்கப்படுமா என அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஏதும் இல்லை.
“வெளிப்படையாக இதுகுறித்துக் குறிப்பிடாவிட்டாலும் அதானி மின் திட்டம் குறித்துப் பேச வாய்ப்பிருக்கிறது” என்கிறார் கொழும்பு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம்.
“மேலும் மன்னாருக்கும் இந்தியாவுக்கும் இடையில் நில ரீதியான பாலம், மின் தொடரமைப்பு ஆகியவற்றைக் கொண்டு வருவதில் இந்தியா ஆர்வம் காட்டுகிறது. இவை தவிர, இந்தியாவிலிருந்து குழாய் மூலம் பெட்ரோலை இலங்கைக்குக் கொண்டு வருவதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த விஷயங்களைப் பற்றித்தான் முக்கியமாகப் பேசுவார்கள்” என்கிறார் அவர்.
அடுத்ததாக, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம். தமிழ்நாடு அரசு தரும் தகவல்களின்படி கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில், 528 (சில தருணங்களில் 530 எனக் குறிப்பிடப்படுகிறது) தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 2025ஆம் ஆண்டு ஜனவரியில் மட்டும் 53 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதுதவிர, கைது செய்யப்படும் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பயணத்தின்போது இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் தங்கள் பகுதி கடற்கரை வரை வந்து மீன் பிடிப்பதாக இலங்கையின் வட பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது அவ்வளவு எளிதாக இருக்காது.
மேலும், பிரதமர் இலங்கைக்குச் செல்வதற்கு இரு நாட்களுக்கு முன்பாக கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பதே மீனவர் பிரச்னைக்குத் தீர்வு என தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமும் இலங்கை வட்டாரத்தில் கவனிக்கப்படும்.
பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரங்கள் பற்றி வெளிப்படையாகப் பேச வாய்ப்புகள் குறைவு என்கிறார் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம். “இந்த விவகாரங்களைப் பற்றி ராஜதந்திர ரீதியிலான அறிக்கைகளில் குறிப்பிடலாம். இலங்கைத் தமிழர் விவகாரங்களைப் பொறுத்தவரை, 13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுங்கள், மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்துங்கள் என வலியுறுத்தியதாகச் சொல்லலாம். அதற்கு மேல் இந்த விவகாரங்களில் வேறு எதற்கும் வாய்ப்பில்லை” என்கிறார் அவர்.
இந்தக் கருத்தையே எதிரொலிக்கிறார் சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியரான கிளாட்சன் சேவியர். “இந்தப் பயணம் முழுக்க முழுக்க நல்லிணக்கத்திற்கான பயணம்தான். ஆகவே, சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதுவும் பேசப்படமாட்டாது. இந்தியாவை பொறுத்தவரை, இலங்கை பிராந்திய ரீதியில் மிக முக்கியமான நாடு. இலங்கையிலும் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. ஆகவே, சர்ச்சைக்குரிய விஷயங்கள் எதையும் இப்போது பேச மாட்டார்கள். இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால அபிலாஷைகள் குறித்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு” என்கிறார் அவர்.
ஆனால், இலங்கை அரசுடன் இலங்கைத் தமிழர் நலன் சார்ந்து இந்தியா பேச வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இருக்கின்றன என்கிறார் கிளாட்ஸன் சேவியர்.
“உள்நாட்டுப் போரின்போது இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு வந்த 19,000 குடும்பங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களில் பலர் இங்கேயே பிறந்து, இங்கேயே படித்தவர்கள். ஆனால், இங்கே அளிக்கப்படும் பல்கலைக் கழகப் பட்டங்களை இலங்கையில் பெரும்பாலும் அங்கீகரிப்பதில்லை. அதை அங்கீகரிக்க வேண்டும் என இந்தியா தரப்பு பேசவேண்டும். இவை தவிர, இந்தியா, இலங்கைக்கு பொருளாதார ரீதியாக நிறைய கடனுதவிகளைச் செய்துள்ளது. கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இது தவிர, சமூக ரீதியிலும் ஏதாவது செய்ய வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பாவுக்கென மிகப்பெரிய திட்டத்தை வகுத்து, அமெரிக்கா செயல்படுத்தியது. அதைப் போன்ற ஒரு திட்டத்தை இந்தியாவும் வகுக்க வேண்டும்” என்கிறார் அவர்.
ஆனால், அதிகாரிகள் மட்டத்திலேயே விரிவான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் தேவைப்படும் இதுபோன்ற விவகாரங்களை இந்தக் குறுகிய பயணத்தில் விவாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.