1
‘லவ் டுடே’, ‘டிராகன்’ என இரண்டு வணிக ரீதியான வெற்றி படங்களை அளித்த இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும்’ டியூட் ‘படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டியூட் ‘ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், மமீதா பைஜூ , சரத்குமார், ஹிர்து ஹாரூன்,நேகா ஷெட்டி, ரோகிணி, ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
தீபாவளி திருநாளை முன்னிட்டு எதிர்வரும் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையின் புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பங்கு பற்றி நாயகன் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ” இந்தப் படத்தில் கதையின் நாயகன் – மற்றவர்களை மகிழ்ச்சி அடைய செய்து அதில் சந்தோஷம் அடைகிறார்.
மேலும் இந்தத் திரைப்படத்தில் தற்போதைய இளைய தலைமுறையினருக்கு தேவையான சமூக பொறுப்பு மிக்க ஒரு செய்தியையும் இயக்குநர் விவரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு குடும்பத்தினருடன் படமாளிகையில் கண்டு களித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.