பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோசவிரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.
பிரதோசத்திற்காக கூறப்படும் புராணக் கதையில் செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடையும் பொழுது ஆலகாலம் எனும் விசம் வெளிப்பட்டது. அதற்கு அஞ்சிய தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானின் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விசத்தினை உண்டார். அவ்விசம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது.
பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.
இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் அநுட்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்.
The post பிரதோஷ விரதத்தின் மகிமை appeared first on Vanakkam London.