பட மூலாதாரம், Manickam Tagore / Facebook
-
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
காங்கிரஸ் கட்சி குறித்து கருத்து தெரிவித்த கூட்டணிக் கட்சிகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர். என்ன நடந்தது?
தமிழ்நாட்டின் கடன் அளவு குறித்து காங்கிரஸ் கட்சியின் புரொஃபஷனல் காங்கிரஸ் பிரிவின் தலைவர் பிரவீண் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்து சமீபத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், தி.மு.க. கூட்டணிக்குள் எழுந்திருக்கும் இந்த சலசலப்புகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஏற்கெனவே பிரவீண் சக்கரவர்த்தி த.வெ.கவின் தலைவர் விஜயை சந்தித்ததாகக் கூறப்படும் விவகாரத்தால் எழுந்த பரபரப்பு சற்று ஓய்ந்த நிலையில், இப்போது இந்த விவகாரம் எழுந்திருக்கிறது.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குறித்து, கட்சியின் தேசியத் தலைமை அனுமதியின்றி இதுபோன்ற கருத்துகள் வெளியாகியிருக்குமா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
பின்னணி என்ன?
காங்கிரஸ் கட்சியில் உள்ள புரொஃபஷனல் காங்கிரஸ் பிரிவின் தலைவர் பிரவீண் சக்கரவர்த்தி சமீபத்தில் “தமிழ்நாட்டின் கடன் அளவு, உத்தர பிரதேசத்தைவிட அதிகம்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அவரது அந்தக் கருத்து அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் புதன்கிழமையன்று கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.
அதில், ம.தி.மு.கவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பியும் பொதுச் செயலாளருமான து. ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் பிரவீண் சக்கரவர்த்தியின் பதிவு தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தனர்.
பட மூலாதாரம், Praveen Chakravarty/X
பிரவீண் சக்கரவர்த்தியின் பதிவு தொடர்பான விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட வேண்டுமென்று துரை வைகோவும் ராகுல் காந்தி இதை அனுமதிக்கக்கூடாது என்று து. ரவிக்குமாரும் கூறியிருந்தனர். சண்முகமும் வீரபாண்டியனும் காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு காண வேண்டுமெனக் கூறியிருந்தனர்.
பிரவீண் சக்கரவர்த்தியின் கருத்துக்கு ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகையும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில்தான் கூட்டணிக் கட்சியினர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பியான மாணிக்கம் தாகூர், இது தொடர்பாகத் தனது கருத்துகளை எக்ஸ் பக்கத்தில் கடுமையாகப் பதிவு செய்திருக்கிறார்.
“வி.சி.க., ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி எதிர்க்கட்சி தலைவர் அவர்களிடம் ‘நடவடிக்கை எடுக்க’ கோரும் செய்தியைப் படித்தேன். இது ஓர் அடிப்படை கேள்வியை எழுப்புகிறது. காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துகளை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?
ரவிக்குமார், துரை வைகோ, சண்முகம், வீர பாண்டியன் ஆகியோரிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதைச் சகிப்பார்களா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன, பொது அழுத்த அரசியலால் அல்ல என்றும் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும் என்றும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
தலைவர்கள் மீது விமர்சனம்
“ஒரு கூட்டணிக் கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொதுவெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. இது பாஜக–ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையைப் பலவீனப்படுத்தும். இது கட்சியின் செயல் வீரர்களின் தன்மான உணர்வைத் தூண்டும்” எனவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்றும் அதேபோல, வைகோவும் திருமாவளவனும் கூட்டணிக் கட்சிகளுடனான விவகாரங்களில் லட்சுமண ரேகையை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
“கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய, காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல” என்று அவர் தனது பதிவில் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், WriterRavikumar/X
கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூறுவது என்ன?
அவரது இந்தப் பதிவு சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பிபிசியிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீர பாண்டியன், “ராகுல் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் சொல்லவுமில்லை. அந்த நாளிதழில் அப்படி வெளியிடப்படவுமில்லை” என்றார்.
துரை வைகோவும் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். “பிரவீண் சக்கரவர்த்தியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவரே பதில் சொல்லிவிட்டார் என்றுதான் குறிப்பிட்டேன். மேலும், அரசியலை கடந்து ராகுல் காந்தியை மிகவும் மதிக்கிறோம் என்றும் குறிப்பிட்டேன். அடுத்ததாக, கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்று கேட்டபோது கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படாது என்றுதான் குறிப்பிட்டேன்” என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார் உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்தார். “பிரவீண் சக்ரவர்த்தி மீது ராகுல் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறுகிறீர்களா என செய்தியாளர் கேட்டபோது, அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்படி கேட்பது தவறு என்றுதான் நான் அவரிடம் தெரிவித்தேன். ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான் ஒரு தலைவர் உறுதியாக இருக்கிறார் என்று கருதுவது தவறு. அவர் கருத்தியல் நிலைப்பாட்டில் எப்படி சமரசம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் என்பதை வைத்துத்தான் அவரது அரசியல் உறுதியை மதிப்பிட வேண்டும். அந்த விதத்தில் ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள தலைவர்களிலேயே மிகவும் அரசியல் உறுதிமிக்க ஒருவர்” என்று தெரிவித்ததாகக் கூறினார் ரவிக்குமார்.
மேலும், உறுதியான தலைவராக இருப்பதற்கும் அதிகாரத்துவ அணுகுமுறை கொண்ட (authoritarian) தலைவராக இருப்பதற்கும் வேறுபாடு உள்ளது என்றும் ஓர் அமைப்பில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும், அந்த விதத்தில் ராகுல் காந்தி மிகுந்த ஜனநாயகம் கொண்ட தலைவர் என்றும் தான் அந்த நாளிதழுக்குத் தெரிவித்ததாக” குறிப்பிட்டார்.
“ஆனால், நான் தெரிவித்த கருத்துக்கு நேர்மாறாக பிரவீண் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரசில் நானும் சேர்ந்து கொண்டிருப்பதாக அந்தச் செய்தி எழுதப்பட்டிருப்பது தவறானது. அப்படி நான் கூறவில்லை” என்று ரவிக்குமார் விளக்கமளித்தார்.
ஆனால், மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்வினையாற்றியுள்ளது. அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரான கே. கனகராஜ், அரசியல் மரியாதையையும் ஒழுக்கத்தையும் மாணிக்கம் தாகூர் எங்களுக்குப் போதிக்க வேண்டியதில்லை என்று கூறியிருக்கிறார்.
பட மூலாதாரம், Kanagaraj Karuppaiah/Facebook
இது தொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவரின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி ஆங்கில நாளிதழின் பத்திரிக்கை நிருபர் கேட்டபோது, சி.பி.எம் மாநில செயலாளர் பெ. சண்முகம் ‘அது காங்கிரசின் உள்கட்சி பிரச்னை, அவர்கள்தான் தீர்வு காண வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.
அந்த நாளிதழும் அப்படித்தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தேவையில்லாமல் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு, தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி நீண்ட அறிவுரை வழங்கியுள்ளார். அரசியல் மரியாதையையும் ஒழுக்கத்தையும் பேணுவதற்கு அவர் எங்களுக்குப் போதிக்க வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு, பாடம் எடுக்கும் இடத்தில் அவரும், கேட்கும் இடத்தில் நாங்களும் இல்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, தற்போதைய சூழலில் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கருத்தைத் தாண்டி எதுவும் சொல்ல முடியாது என்று மட்டும் தெரிவித்தார்.

ஆனால், மாணிக்கம் தாகூரின் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் காங்கிரஸுக்கு இருக்கும் ஆழமான வருத்தம் வெளிப்படுகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
“சமீபத்தில் மாநிலங்களவை இடம் காலியானபோது, ஒரு இடத்தைத் தங்களுக்கு தர வேண்டுமென காங்கிரஸின் மேல்மட்டத்தில் இருந்து கோரப்பட்டது. இருந்தபோதும் முதலமைச்சர் ஊட்டிக்கு சென்றிருந்தபோது மாநிலங்களவை நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் ஒரு இடம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு அளிக்கப்பட்டது. தாங்கள் ஓரிடத்தைக் கேட்டிருந்தும் இது பற்றி எதுவும் கூறாமல் வேறொரு கூட்டணிக் கட்சிக்கு இதுபோல வாய்ப்பளித்ததில் காங்கிரஸ் அதிருப்தி அடைந்தது. அதன் வெளிப்பாடுகள்தான் இவை” என்கிறார் அவர்.
ஆனால், பிரவீண் சக்கரவர்த்தி விவகாரத்தில் காங்கிரஸ் சற்று அதிகமாக எதிர்வினையாற்றுவதாகக் கருதுகிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
“காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி தி.மு.க. தலைவர்கள் இதுபோல விமர்சித்து இருந்தால் காங்கிரஸின் எதிர்வினை என்னவாக இருந்திருக்கும்? தி.மு.கவில் இருந்து கே.எஸ். ராதாகிருஷ்ணன் எதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். மல்லிகார்ஜுன் கார்கே குறித்த ஒரு பதிவுக்காகத்தானே அவர் நீக்கப்பட்டார்? அதேபோன்ற எதிர்பார்ப்பு மற்ற கட்சிகளுக்கும் இருக்கும்தானே? என்னைப் பொறுத்தவரை, சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களைப் பெறுவதற்காகத் தரப்படும் அழுத்தமாகவே இதைப் பார்க்கிறேன்” என்கிறார் குபேந்திரன்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெரிவிக்காமல் இதுபோன்ற விமர்சனத்தை வைத்திருக்க முடியுமா?
“வாய்ப்பில்லை. கே.சி. வேணுகோபாலுக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை” என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
ஆனால், இது தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்குள் பாதிப்பை ஏற்படுத்துமா?
“அதற்கு வாய்ப்பில்லை. ஆனால், கசப்புகள் அதிகரித்திருப்பதை இது வெளிப்படுத்துகிறது” என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி.
எல்லாம் சரி, மாணிக்கம் தாகூர் இந்த விவகாரம் குறித்து இவ்வளவு தீவிரமாக எதிர்வினையாற்றியிருப்பது ஏன் என, மாணிக்கம் தாகூரிடம் பிபிசி இதுகுறித்துக் கேட்டபோது, “பிரவீண் சக்கரவர்த்தி விவகாரம் குறித்து மாநில தலைவர் எதிர்வினையாற்றிவிட்ட நிலையில், ராகுல் காந்தியை இதில் தொடர்புபடுத்திப் பேச வேண்டியதில்லை. பிரவீண் சக்கரவர்த்திக்கு ராகுல் காந்தியின் ஆதரவு இருக்கிறது என்ற தொனியிலேயே கருத்துகள் வெளியாகி வந்தன. அதனால் எதிர்வினையாற்றினேன்” என்று மட்டும் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு