பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் மற்றும் அவரது மனைவி பிரிஜித் மக்ரோங் ஆகியோர், பிரிஜித் ஒரு பெண் என்பதை நிரூபிக்க அமெரிக்க நீதிமன்றத்தில் புகைப்பட மற்றும் அறிவியல் சான்றுகளை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
வலதுசாரி சமூக வலைத்தள இன்ப்ளுயன்சர் கேண்டஸ் ஓவென்ஸ், பிரிஜித் மக்ரோங் ஒரு ஆணாகப் பிறந்தவர் என்று பரப்பிய குற்றச்சாட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க உள்ளதாக இந்தத் தம்பதியரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஓவென்ஸின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பிபிசியின் ‘ஃபேம் அண்டர் ஃபயர்’ (Fame Under Fire) என்ற பாட்காஸ்டில் பேசிய, மக்ரோங் தம்பதியரின் வழக்கறிஞரான டாம் கிளார், இந்தக் குற்றச்சாட்டுகள் மக்ரோங்கிற்கு “மிகவும் மன வருத்தத்தை” ஏற்படுத்தியுள்ளதாகவும், ஃபிரான்ஸ் அதிபருக்கு அது ஒரு “கவனச்சிதறலாக” இருப்பதாகவும் கூறினார்.
“இது அவருடைய செயல்பாட்டைக் குலைத்துவிட்டதாக நான் கூற விரும்பவில்லை. ஆனால், ஒரு தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையைச் சமநிலைப்படுத்தும் எவரையும் போலவே, அவரது குடும்பம் தாக்கப்படும்போது, அது அவரையும் பாதிக்கிறது. அவர் ஒரு நாட்டின் அதிபராக இருந்தாலும், இதற்கு விதிவிலக்கு அல்ல” என்று அவர் கூறினார்.
“அறிவியல் தன்மை கொண்ட நிபுணர் சாட்சியம்” வெளிவரும் என்று அவர் கூறினார். இந்த கட்டத்தில் அவர் அதனை வெளியிட மறுத்த போதிலும், இந்தத் தம்பதியினர் இந்தக் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதை “பொதுவாகவும் குறிப்பாகவும்” முழுமையாக நிரூபிக்கத் தயாராக உள்ளதாக கிளார் கூறினார்.
“இந்த வகையான ஆதாரத்தை முன்வைக்க நீங்கள் சென்று உங்களை அதற்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
“இது மிகவும் பொது வழியில் அவர் (பிரிஜித்) தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு செயல்முறை. ஆனால், அவர் அதைச் செய்யத் தயாராக உள்ளார். உண்மையை நிலைநிறுத்த என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
“உண்மையை நிலைநிறுத்தவும், இதை நிறுத்தவும், அவர் தன்னை அந்த வகையில் வெளிப்படுத்துவதால் ஏற்படும் சங்கடத்தையும், அசௌகரியத்தையும் எதிர்கொள்ளவேண்டும் என்றிருந்தால், அவர் அந்தச் சுமையை எதிர்கொள்ள 100% தயாராக உள்ளார்.”
படக்குறிப்பு, மக்ரோங் தம்பதியரின் வழக்கறிஞரான டாம் கிளார்
பிரிஜித் கர்ப்பமாக இருந்த மற்றும் தன் குழந்தைகளை வளர்த்த புகைப்படங்களை மக்ரோங் தம்பதியினர் வழங்குவார்களா என்று கேட்கப்பட்டபோது, அவை உள்ளன என்றும், விதிகள் மற்றும் தரநிலைகள் உள்ள நீதிமன்றத்தில் அவை சமர்ப்பிக்கப்படும் என்றும் கிளார் கூறினார்.
அமெரிக்காவின் பழமைவாத ஊடகமான டெய்லி ஒயர் (Daily Wire)-இன் முன்னாள் வர்ணனையாளரான ஓவென்ஸ் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டவர். அவர் பிரிஜித் மக்ரோங் ஒரு ஆண் என்ற தனது கருத்தை மீண்டும் மீண்டும் பரப்பி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
2024 மார்ச்சில், இந்தக் குற்றச்சாட்டுக்காகத் தனது “முழு தொழில் நற்பெயரையும்” பந்தயம் கட்டுவதாக அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக 2021-ல் ஃபிரெஞ்சு பதிவர்களான அமான்டின் ராய் மற்றும் நடாச்சா ரே ஆகியோரின் யூடியூப் வீடியோ மூலம் பரவலாகத் தொடங்கியது.
இந்த தம்பதியினர் முதலில் 2024-ல் பிரான்ஸில் ராய் மற்றும் ரே-க்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் வென்றனர். ஆனால், அந்தத் தீர்ப்பு 2025-ல் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் மேல்முறையீட்டில் ரத்து செய்யப்பட்டது. உண்மையை அடிப்படையாகக் கொண்டு அது ரத்து செய்யப்படவில்லை. இந்தத் தம்பதியினர் அந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்கின்றனர்.
கடந்த ஜூலையில், மக்ரோங் தம்பதியினர் ஓவென்ஸுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்தனர்
“அவரது கூற்றை மறுக்கும் அனைத்து நம்பகமான சான்றுகளையும் புறக்கணித்து, அறியப்பட்ட சதி கோட்பாட்டாளர்கள் மற்றும் அவதூறு செய்பவர்களுக்கு ஒரு மேடையை அமைத்துக் கொடுத்தார்” என்று அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க அவதூறு வழக்குகளில், பொது நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பவர்கள் “உண்மையான தீய நோக்கத்தை” (actual malice) நிரூபிக்க வேண்டும். அதாவது, பிரதிவாதி வேண்டுமென்றே தவறான தகவலைப் பரப்பினார் அல்லது உண்மையைப் பொருட்படுத்தாமல் செயல்பட்டார் என்பதை நிரூபிக்க வேண்டும்.
பட மூலாதாரம், Candace Owens
படக்குறிப்பு, கேண்டஸ் ஓவென்ஸ், யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில், பிரிஜித் மக்ரோங் ஒரு ஆண் என்ற தனது குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர் என்பதை மக்ரோங் ஆகஸ்டு மாதம் ஃபிரெஞ்சு பத்திரிகையான பாரிஸ் மேட்ச்-சிடம் விளக்கினார்.
“இது எனது கண்ணியத்தைக் காப்பது பற்றியது! ஏனென்றால் இது முட்டாள்தனம். இதைச் செய்தது தனக்கு கிடைத்தது தவறான தகவல் என நன்கு தெரிந்தும், தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அதை செய்த ஒரு நபர். இந்த நபர் ஒரு சித்தாந்தத்திற்கு ஆதரவானவர் என்பதுடன் தீவிர வலதுசாரி தலைவர்களுடன் தொடர்பு இருப்பது நிறுவப்பட்ட ஒரு நபர்,” என அவர் தெரிவித்தார்.
ஓவென்ஸின் வழக்கறிஞர்கள், இந்த வழக்கு டெலாவேரில் பதிவு செய்யப்படக்கூடாது என்று கூறி, மக்ரோங் தம்பதியினரின் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு, அந்த மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட தனது வணிகங்களுடன் தொடர்பில்லாதது என்று அவர் கூறுகிறார். டெலாவேரில் வழக்கை எதிர்கொள்ள அவரை கட்டாயப்படுத்துவது “குறிப்பிடத்தக்க நிதி மற்றும் செயல்பாட்டு சிரமத்தை” ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
பிபிசி, கேண்டஸ் ஓவென்ஸின் சட்டக் குழுவைத் தொடர்பு கொண்டு கருத்து கேட்டுள்ளது. தான் கூறுவது உண்மை என்று நம்புவதாகவும், கருத்துச் சுதந்திரம் மற்றும் விமர்சிக்கும் திறனை விட அமெரிக்காவில் வேறெதுவும் அதிக அமெரிக்கத்தன்மை கொண்டது அல்ல என்றும் அவர் இதற்கு முன் கூறியுள்ளார்.