0
பிரான்ஸின் லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் அரச நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் நால்வர் ஈடுபட்டிருந்ததாக நம்பப்படுகிறது. அரச குடும்பத்துக்குச் சொந்தமான நகைகள் உட்பட மொத்தம் 8 ஆபரணங்களும் கலைப்பொருள்களும் திருடப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 102 மில்லியன் டொலர்ஆகும்.
கடந்த வாரம் பட்டப்பகலில் ஏழே நிமிடத்துக்குள் அவை திருடப்பட்டன.
தொடர்புடைய செய்தி : லூவர் அருங்காட்சியகத்திலிருந்து பிரான்ஸ் அரச நகைகள் கொள்ளை; 7 நிமிடத்தில் 8 நகைகள் களவு!
இந்நிலையில், லூவர் அருங்காட்சியகத்தில் இருக்கும் மிகவும் விலையுயர்ந்த நகைகளில் சில பிரான்ஸ் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன. நகைகள் “Souterraine” என்றழைக்கப்படும் மிகவும் பாதுகாப்பான பெட்டகத்தில் வைக்கப்பட்டிருப்பதாக BBC தகவல் வெளியிட்டுள்ளது.
அந்தப் பெட்டகத்தில்தான் பிரான்ஸின் 90 சதவீத தங்கப் பொக்கிஷங்களும் Leonardo Da Vinciஇன் குறிப்பேடுகளும் இதர தேசியப் புதையல்களும் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மதிப்பு சுமார் 600 மில்லியன் யூரோ எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
குறித்த பெட்டகம் எல்லாவிதமான தாக்குதல்களையும் தாங்கக்கூடிய அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.