பிரிட்டனில் பிறந்த முதல் மூன்று வருடங்களாக ஒரு தாய், அவரது மகளை டிராயரில் அடைத்து வைத்திருக்கிறார். இந்த குற்றத்திற்கு அந்த தாய்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிர அலட்சிய செயலுக்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டிராயரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தச் குழந்தை, வெளி உலகத்தையோ, சுத்தமான காற்றையோ அனுபவித்தது இல்லை என்றும் செஷயரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்திருந்த ஒருவர் அந்த குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டபோதுதான் அவர் கண்டுபிடிக்கப்பட்டார் என்றும் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்தச் குழந்தையின் பெயரையோ அல்லது அவருடைய குடும்பத்தை பற்றியோ குறிப்பிடவில்லை.
இதுவரை நடந்த விசாரணையில், குழந்தையை கொடுமைப்படுத்தியது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுக்களை அவரது தாய் ஒப்புக்கொண்டார். அதற்காக செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அன்பு, பாசம், உரிய கவனிப்பு, சரியான உணவு, மற்ற மனிதர்களுடன் தொடர்பு, மிகவும் முக்கியமான மருத்துவ கவனிப்பு போன்றவை அக்குழந்தைக்கு அவரது தாய் வழங்கவில்லை என நீதிபதி ஸ்டீவன் எவரெட் கூறியுள்ளார்.
“புத்திசாலியான அக்குழந்தை, அந்த டிராயரில் நரகமான வாழ்க்கையை வாழ்ந்து வந்திருந்தார், தற்போது அவர் அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறார்”, என்றும் அவர் தெரிவித்தார்.
“அத்தாய், தனது மற்ற குழந்தைகளிடம் இருந்தும், அதே வீட்டில் தங்கியிருந்த தனது இணையருக்கும் தெரியாமல் ரகசியமாய் அக்குழந்தையை படுக்கையின் கீழ் உள்ள டிராயரில் மறைத்து வைத்திருந்தார்”, என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அவரது சொந்த பெயர் சொல்லி அழைத்தபோதும், அவர் பதிலளிக்கவில்லை. மேலும் போதுமான உணவின்றி, தன்னைத்தானே பாதுக்கத்துக்கொண்டு, நீண்ட நேரம் தனிமையில் அந்த குழந்தை இருந்ததாக கண்டறியப்பட்டது என அரசு வழக்கறிஞர் ரேச்சல் வொர்திங்டன் கூறினார்.
திகில் சம்பவம்
குழந்தைக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகவும், அவர் மூன்று வயது குழந்தையைப் போல் இல்லாமல், ஏழு மாத குழந்தை போல் தோற்றமளித்ததாகவும், தற்போது அவருக்கு உணவு வழங்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்குழந்தைக்கு மேல் வாய் பிளவு மற்றும் பல உடல்நலப் பிரச்னைகள் இருக்கின்றன. ஆனாலும் அவரது தாய், குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லவில்லை.
2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2023-ஆம் ஆண்டின் முற்பகுதி இந்த குழந்தை டிராயரில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு வந்த ஒருவர் மாடியில் சத்தம் கேட்டுச் சென்றபோது, இந்தச் குழந்தையை கண்டுபிடித்தார்.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஒரு சமூக சேவகர் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார். முடி, உடலில் குறைபாடுகள் மற்றும் தோலில் தடிப்புகளுடன் குழந்தை இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
“குழந்தையை நீங்கள் வைத்திருக்கும் இடம் இதுதானா? ” என சமூக சேவகர் அவரது தாயிடம் கேட்டதற்கு, “ஆமாம், டிராயரில் வைத்திருக்கிறேன்” என்று தாய் பதிலளித்தார்.
“அவரது தாய் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை என்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.”
“தனது தாயின் முகத்தைத் தவிர அக்குழந்தைக்கு பார்த்த ஒரே முகம் எனது மட்டுமே என்பதை அறிந்தபோது திகிலாக உணர்ந்தேன்” என்று அந்த சமூக சேவகர் கூறினார்.
‘குடும்பத்தில் ஒரு அங்கம் இல்லை’
தற்போது அந்த குழந்தைக்கு முறையான பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது. புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக அவருக்கு ஏற்பட்டுள்ள கடுமையான வளர்ச்சி சார்ந்த பிரச்னைகள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் கர்ப்பமாக இருப்பது தனக்குத் தெரியாமல் இருந்தது என்றும், அக்குழந்தையை பிரசவித்தபோது உண்மையில் பயந்துவிட்டதாகவும் காவல் துறை விசாரணையில் தாய் கூறினார்.
குழந்தையை எப்போதும் படுக்கைக்கு அடியில் உள்ள டிராயரில் வைத்திருக்கவில்லை என்றும், டிராயர் மூடப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த குழந்தை அக்குடும்பத்தில் ஒரு அங்கமே இல்லை என்றும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
“தான் நன்றாக வளர்த்த மற்ற குழந்தைகள் தன்னுடன் தற்போது வாழவில்லை” என்பதை கண்ணீரைத் துடைத்துக்கொண்டே தாய் விவரித்தார்.
“அந்தப் பெண் செய்தததை முற்றிலும் நம்பமுடியவில்லை” என்று நீதிபதி எவரெட் கூறினார்.
“நீங்கள் இந்த சூழ்நிலையை உங்களால் முடிந்தவரை கவனமாக மறைக்க முயற்சித்தீர்கள், ஆனால் தற்செயலாக உங்கள் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டது,” என்றும் அத்தாயிடம் நீதிபதி கூறினார்.
“எனது 46 ஆண்டு கால அனுபவத்தில் இது போன்ற ஒரு மோசமான வழக்கை நான் பார்த்ததில்லை” என்று நீதிபதி எவரெட் கூறினார்.