வயநாடு மக்களவைத் தொகுதி, ஆறே மாதங்களில் இரண்டாம் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது.
இந்தத் தேர்தல் ராகுல் காந்தியால்தான் அவசியமின்றி நடப்பதாக, பிற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி தன்னுடைய இடத்தில் தன் சகோதரியை நிற்க வைத்திருப்பது வயநாடு மக்கள் மீதான அவரின் அன்பின் வெளிப்பாடு என்று கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
பிரியங்கா காந்தி இங்கு போட்டியிடுவதால், தேசிய அளவில் இந்தத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. வயநாடு இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
வயநாடு மக்களவைத் தொகுதியில், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கல்பெட்டா, மானந்தவாடி, சுல்தான்பத்தேரி, திருவம்பாடி, நிலம்பூர், எரநாடு மற்றும் வண்டூர் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர். 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நவம்பர் 13 அன்று 1354 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. நவம்பர் 23 அன்று 8 இடங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்நிலையில், வயநாட்டின் களநிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள் பிபிசி தமிழ் அங்கு சென்றது.
வயநாட்டின் முக்கியமான கோரிக்கைகள்
இந்த இடைத்தேர்தலில் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்த கோரிக்கைகளொடு புதிய ஒரு கோரிக்கை இணைந்துள்ளது.
கடந்த ஜூலை 30–ஆம் தேதி அதிகாலை, சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் மறுவாழ்வுக்கான நிவாரணமும், இயற்கைப் பேரிடரால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள சுற்றுலாத் தொழிலுக்குத் தேவைப்படும் புத்துயிரும் தான் அந்தக் கோரிக்கை.
இதை முக்கிய வேட்பாளர்கள் அனைவருமே வாக்குறுதியாகவும் அளிக்கின்றனர்.
தேர்தல் பரப்புரை முடிவதற்கு முந்தைய நாளில், சுல்தான்பத்தேரி தொகுதிக்குட்பட்ட நாய்க்கெட்டியில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய பிரியங்கா காந்தி, ‘‘நிலச்சரிவு காரணமாக, வயநாடு என்றால் பலரும் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுபற்றி என்னிடம் பேசிய நண்பர்களிடம் நிலச்சரிவு ஏற்பட்டது ஒரு சிறு பகுதிதான், வயநாடு முழுவதுமே பேரழகான பகுதி. சுற்றுலாவுக்கு மிக உகந்த இடம் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த அச்சத்தைப் போக்க வேண்டியது நம் பொறுப்பு,’’ என்றார்.
இதைத் தவிர்த்து, மருத்துவக் கல்லுாரி, மனித–வனவிலங்கு மோதல் பிரச்னைகளுக்குத் தீர்வு, தமிழக, கர்நாடகா எல்லைகளில் இரவு நேர பயணத்துக்கான தடையை நீக்குவது, வயநாட்டில் ரயில்வே வழித்தடம் ஏற்படுத்துவது ஆகியவைதான் பிரதான கோரிக்கைகளாகவுள்ளன.
கம்பளக்காட்டைச் சேர்ந்த அப்துல் சலீம் பிபிசி தமிழிடம், ‘‘இங்கே யாருக்காவது அவசர சிகிச்சை வேண்டுமெனில், கோழிக்கோடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்குதான் போக வேண்டும். போகும் வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். அங்கே கொண்டு செல்வதற்குள் பலர் இறந்து விடுகிறார்கள். எங்களுடைய முதல் தேவையே, மருத்துவக் கல்லுாரிதான்,’’ என்கிறார்.
‘‘மருத்துவக் கல்லுாரி என்பது வயநாடு மக்களின் நீண்ட நாள் கனவு. அதை நான் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்,’’ என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த பாரதிய ஜனதா வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ், அதைத் தங்களால் மட்டும்தான் நிறைவேற்ற முடியும் என்று கூறினார்.
‘பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்பு’
இதையடுத்து, கர்நாடகா எல்லையில் வயநாடு செல்லும் வாகனங்களுக்கு இரவு நேர பயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென்பது முக்கியக் கோரிக்கையாகவுள்ளது.
பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் வயநாடு தேசிய வன உயிரினப் பூங்கா அமைந்துள்ள இந்த வழித்தடத்தில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை எந்தத் தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
இரு மாநிலங்களின் அரசு போக்குவரத்துக்கழகங்களின் 8 பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் கேரள வனத்துறையைச் சேர்ந்த முத்தங்கா வனப்பிரிவு அலுவலர் மணி.
இந்தத் தடையால் பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் படிக்கும் பல்லாயிரக்கணக்கான கேரள மாணவர்கள், ஐடி பணியாளர்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார், வயநாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் மனோஜ்.
காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் இந்தத் தடையை நீக்கியிருக்க முடியுமென்று குற்றம்சாட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மோகேரி, ‘‘முன்புதான் பாரதிய ஜனதா அரசு இருந்ததால் தடையை நீக்க முடியவில்லை என்றனர். இப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருக்கும் நிலையில் அதை நீக்குவதற்கு ராகுல் காந்தி ஏன் முயற்சி எடுக்கவில்லை,’’ என்று கேட்கிறார்.
இவ்விரு பிரச்னைகளைப் போலவே, பிரதானமாகப் பேசப்படும் மற்றொரு பிரச்னை, மனித–வனவிலங்கு மோதல்.
வயநாடு மாவட்டம் விவசாயத்தை நம்பியுள்ள பகுதி என்று சொல்லும் சத்யன் மோகேரி, ‘‘ஆனால் இங்கு நடக்கும் மனித–வனவிலங்கு மோதலால் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கின்றனர். இதற்குத் தீர்வு காண்பதற்கு, கேரள அரசு பல விதங்களிலும் முயன்று வருகிறது. ஆனால் மத்திய அரசின் ஆதரவு எதுவுமேயில்லை,’’ என்கிறார்.
‘ஒரே மாதிரியான வாக்குறுதிகள்’
இந்தத் தேர்தலில் கடும் போட்டியாளர்களாகவுள்ள மத்திய, மாநில ஆளும்கட்சிகளும், இரண்டிலும் பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள காங்கிரஸ் கட்சியும் ஒரே மாதிரியாக பிரச்னைகளைப் பேசுவதையும், ஒரே மாதிரியான வாக்குறுதிகளைத் தருவதையும் களத்தில் காணமுடிகிறது.
அதே நேரத்தில், இரண்டிரண்டு கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து, அடுத்த கட்சியின் மீது ஒரே விதமான குற்றச்சாட்டையும் முன் வைக்கின்றன.
ராகுல் காந்தியின் ராஜினாமாவால் தான் இந்த இடைத்தேர்தல் வந்ததாக பாரதிய ஜனதாவும், கம்யூனிஸ்ட் கட்சியும் குற்றம் சாட்டுகின்றன.
‘‘ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றியதால் இந்தத் தேர்தல் வந்துள்ளது. அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்கு வயநாடு மக்களுடன் நான் இருப்பேன் என்று உறுதியளித்தார். ஆனால் அவருக்கு ரேபரேலிதான் முதல் முன்னுரிமையாகி விட்டது. வயநாடு அடுத்ததாகிவிட்டது. இப்போது அவரது சகோதரியை அழைத்து வந்து, எம்பியாக்க முயற்சி செய்கிறார்.’’ வயநாடு மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் இப்படிக் குற்றம் சாட்டுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மோகேரி, ‘‘கடந்த தேர்தலின்போது, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருந்தார். இங்குள்ள மக்கள் ஏதுமறியாதவர்கள். தங்கள் தொகுதியின் எம்.பி. பிரதமராக வந்தால் நன்றாயிருக்குமென்று கருதி, அவரை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் அவர் ரேபரேலியிலும் போட்டியிட்டு, வயநாடு மக்களைக் கைவிட்டு விட்டார்,’’ என்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த வயநாடு மாவட்டத்தின் கல்பெட்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்திக், “தேர்தலில் போட்டியிடுவதும், பதவியை ராஜினாமா செய்வதும் ஜனநாயக உரிமை. பல காரணங்களுக்காக பல இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. இதை சிபிஎம் குற்றம்சாட்டுகிறது என்றால், சேலக்கரை இடைத்தேர்தல் ஏன் நடந்தது? இதே பதில்தான் சிபிஎம் கட்சிக்கும். அமைச்சர் ராதாகிருஷ்ணன், ஆலத்துார் மக்களவைத் தொகுதியில் நிற்பதற்காக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்,” என்கிறார்.
சூரல்மலை துயரம்
வயநாட்டின் முன்னேற்றத்துக்கு, குறிப்பாக சூரல்மலை நிலச்சரிவுக்குப் பின் உரிய நிவாரண நடவடிக்கைகளை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு செய்யவில்லை என்று காங்கிரசும், பாரதிய ஜனதாவும் குற்றம்சாட்டுகின்றன.
நிலச்சரிவு பாதிப்பைப் பார்வையிட்டுச் சென்ற பின்னும், அதற்காக எந்தவொரு நிதியையும் மத்திய அரசு தரவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசும் ஒரே குற்றச்சாட்டை எதிரொலிக்கின்றன.
‘‘சூரல்மலை துயரம் குறித்து பிரதமரிடம் ராகுல் காந்தி பேசவேயில்லை. நீங்கள் இந்தத் தொகுதியின் பிரதிநிதியாக இல்லாவிட்டாலும், உங்களைத்தானே ஐந்தாண்டுக்கான பிரதிநிதியாக இங்குள்ள மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். எல்லாவற்றையும் முதல்வரிடமே கேட்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்ததையும், ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டதையும் அறிந்திருந்தும் பிரதமர் நரேந்திர மோதி, இதுவரை ஒரு பைசா கூட நிவாரணமாகத் தரவில்லை,” என்று குற்றம்சாட்டுகிறார் சத்யன் மோகேரி.
பாரதிய ஜனதா வேட்பாளரை வயநாடு மக்கள் எம்.பி-யாக்கினால், அவரை மத்திய அமைச்சராக்க தான் உறுதியளிப்பதாக தனது பரப்புரையில் தொடர்ந்து கூறி வருகிறார் மத்திய அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி.
மானந்தவாடி காக்க வயலைச் சேர்ந்த அம்பிகா, பிபிசி தமிழிடம், ‘‘நான் இங்குள்ள பழங்குடியினருக்காக பணியாற்றி வருகிறேன். இங்குள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டுமானால், பாஜக இங்கே வெற்றி பெற வேண்டுமென்றுதான் நான் கூறுவேன்.’’ என்றார்.
ஆனால் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் இவற்றையெல்லாம் தாண்டி, காந்தி குடும்பத்தின் மீது வயநாடு மக்கள் வைத்துள்ள அன்பு, பிரியங்கா காந்தியை அமோக வெற்றி பெறச் செய்யும் என்று காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக நம்புகின்றனர்.
‘‘பிரியங்கா காந்தி ஒரு போராளி, அவர் ஒரு பாதுகாவலர், வயநாடு மக்களின் பேரன்புக்கு உரியவர். அதனால்தான் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் ரோட் ஷோவுக்கு எக்கச்சக்கமான கூட்டம் வருகிறது. நிச்சயமாக 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெறுவார்.’’ என்கிறார் எம்எல்ஏ சித்திக்.
‘15 ஆண்டுகளாக ஓங்கியிருக்கும் காங்கிரசின் கை’
இந்த மக்களவைத் தொகுதி 2009-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பின், இங்கு காங்கிரஸ் கட்சியின் கரமே தொடர்ந்து ஓங்கியுள்ளதாகச் சொல்லும் மூத்த பத்திரிக்கையாளர் மனோஜ், ‘‘அதற்குப் பின் எல்லாத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் ராகுல் காந்தி இரண்டாம் முறை சிறப்பாக வெற்றி பெற்றார். இப்போதும் இதுதான் இங்குள்ள அரசியல் நிலவரம்.’’ என்கிறார்.
ஐக்கிய ஜனநாயக முன்னணியை, காங்கிரஸ் கட்சியை இங்குள்ள மக்கள் பெரிதும் நம்புவதாகக் கூறும் மனோஜ், ‘‘ஒருவேளை, இந்தத் தேர்தலில் 83 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகும்பட்சத்தில், பிரியங்கா காந்தி ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறார்கள். ஆனால் யாராலும் இதை கணிக்க முடியாது.’’ என்கிறார்.
ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலின்போது, இந்தத் தொகுதியில் அதிகமாகப் பரப்புரை மேற்கொள்ளாத ராகுல் காந்தி, இப்போது பல முறை வயநாடுக்கு வந்து பரப்புரை மேற்கொண்டதும், பிரியங்கா காந்தியும் பல நாட்கள் தங்கியிருந்து பரப்புரை செய்ததும் காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கும் அச்சத்தை காட்டுகிறது என்கின்றனர் பாரதிய ஜனதா கட்சியினர்.
‘‘வயநாடு முழுவதும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் படங்கள் அடங்கிய பைகளில் உணவுப் பொருட்களை வழங்கி, வாக்காளர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த முறை தோற்று விடுவோம் என்று காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தையே இது வெளிப்படுத்துகிறது.’’ என்கிறார் நவ்யா ஹரிதாஸ்.
பரப்புரை நிறைவு பெறும் நாளுக்கு முந்தைய நாளில் பிரியங்கா காந்தியும், நிறைவு நாளில் ராகுல் காந்தியும் வந்து தொகுதியில் பல இடங்களில் பரப்புரை மேற்கொண்டதைப் பார்க்க முடிந்தது.
இது ராகுல் காந்தியின் ராஜினாமாவால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியைக் களைவதற்கான முயற்சி என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
‘இளைய தலைமுறையினரிடம் பரவியுள்ள அதிருப்தி’
வயநாடு அரசியல் சூழ்நிலையை தொடர்ந்து கவனித்து வரும் கேரளாவின் மூத்த பத்திரிக்கையாளர்கள் பலரும், காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அமோக ஆதரவை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், இந்த இடைத்தேர்தலால் காங்கிரஸ் கட்சியின் மீது ஒருவித அதிருப்தி ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
‘‘இளைய தலைமுறையினரைப் பொருத்தவரை, இந்தத் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் தேவையில்லாமல் ஏற்படுத்தப்பட்டதாக நினைப்பதால், ராகுல் காந்தியின் மீது ஒருவித அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள், அதனால் எவ்வளவு சதவீதம் வாக்குகள் கிடைக்குமென்பதை இப்போதைக்குக் கணிக்க இயலாது,’’ என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் மனோஜ்.
ஆனால் ராகுல் காந்தியை விட பிரியங்கா காந்திக்கு அமோக ஆதரவு இருப்பதாகச் சொல்லும் சுல்தான்பத்தேரியைச் சேர்ந்த சோனியா, ‘‘பிரியங்காவை இந்திரா காந்தியின் பிரதிநிதியாக மக்கள் பார்க்கிறார்கள். அதனால் ராகுல் காந்தியை விட அவருக்கு அதிக ஆதரவு கிடைக்கும். தனக்குப் பதிலாக ராகுல் காந்தி, யாரையோ நிறுத்தவில்லை. தன் சொந்த சகோதரியைத் தந்திருக்கிறார். அதனால் அவருடைய ராஜினாமாவால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கிவிட்டன,’’ என்கிறார்.
‘அணுக முடியுமா என்றொரு அச்சம்’
ஆனால் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றால், அவரை அணுக முடியுமா, அவரிடம் தங்கள் பிரச்னையைக் கொண்டு செல்ல முடியுமா என்ற கேள்வியும் அச்சமும் படித்த மக்களிடம் இருப்பதையும் உணர முடிகிறது.
கல்பெட்டாவைச் சேர்ந்த சுனிதா சீனிவாஸ் பிபிசி தமிழிடம், ‘‘பிரியங்கா காந்தி மிகப்பெரிய தலைவர். அவரை சுற்று பலத்த பாதுகாப்பு வளையம் உள்ளது. இங்குள்ள மக்கள் மிகவும் சாதாரணமானவர்கள். அப்படியிருக்கையில், அவரை எப்படி அணுக முடியுமென்று தெரியவில்லை. நமக்கு மக்கள் எளிதாக அணுகக்கூடிய ஒரு பிரதிநிதிதான் தேவை,’’ என்கிறார்.
மேலும் அவர் ‘‘இங்கே பாரதிய ஜனதா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, நமக்கு நன்கறிந்த நம்மோடு என்றும் இருக்கக்கூடிய எளிமையான ஒரு பிரதிநிதியாக சத்யன் மோகேரி மட்டும்தான் தெரிகிறார்,’’ என்கிறார்.
தொகுதி முழுவதும் ஊர் ஊராகச் சென்று சின்னச்சின்னக் கூட்டங்களில் பங்கேற்று மக்களிடம் பேசி வரும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யனும் இந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
பிபிசி தமிழிடம் இதுபற்றிப் பேசிய அவர், ‘‘நான் இப்போது தண்ணீரில் இருக்கிறேன். பிரியங்கா காந்தி வானத்தில் நிற்கிறார். போட்டி என்று வரும்போது, இதெல்லாம் முற்றிலும் மாறிவிடும். நான் மெதுமெதுவாக போட்டியில் முன்னேறுகிறேன்.’’ என்றார்.
பிரியங்கா காந்தி பிபிசி தமிழிடம் கூறியது என்ன?
அரசியல் கட்சியினரைத் தவிர, பொது மக்கள் பல தரப்பினரிடமும் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, பலரும் பிரியங்கா காந்திக்கே அதிக வாய்ப்பு என்றே தெரிவித்தனர்.
வயநாடு மக்களின் பிரச்னைகள், அவர்களின் தேவைகள் குறித்து தங்களுக்குத் தெரியுமா என்று பிரியங்கா காந்தியிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ‘‘என்னுடைய பரப்புரையில் எல்லாவற்றையும் விளக்கி வருகிறேன். இங்குள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ள முயற்சி செய்து வருகிறேன். பிரச்னைகளைப் புரிந்து கொண்டு, அதற்குத் தீர்வு காண்பதற்குப் போராடுவேன் என்று உறுதியளிக்கிறேன். அதற்காக மற்றவர்களை விட நான் கடுமையாக உழைப்பேன்,’’ என்றார்.
வெற்றி வித்தியாசம் குறித்த எதிர்பார்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘இங்குள்ள மக்கள் என்னைப் பெரிதும் நேசிக்கிறார்கள். என்னைக் குறித்த புரிதல் அவர்களிடம் நிறையவே உள்ளது. தங்கள் இதயத்தில் எனக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். அதுவே எனக்குப் போதுமானது. வெற்றி வித்தியாசம் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல,’’ என்றார்.
காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறுமென்ற நம்பிக்கையில், ‘‘தேர்தலுக்குப் பின், வயநாடுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என இரண்டு எம்.பி-க்கள் இருப்பார்கள்,’’ என்கிறார் கல்பெட்டா எம்எல்ஏ சித்திக்.