பட மூலாதாரம், Louvre Museum
பிரபலமான பண்டைய வைரங்கள் பற்றி பேசப்படும்போது அவற்றில் பல இந்திய மண்ணுடன் தொடர்புடையவையாகவே இருக்கின்றன. கோல்கொண்டா வைரங்களும், அவற்றின் கருவறையான ஆந்திரச் சுரங்கங்களும் சரித்திரப் புகழ் பெற்றவை.
பிரான்சின் லூவர் அருங்காட்சியத்தில் அண்மையில் திருடப்பட்ட பல வைரங்களும் இன்றைய ஆந்திரா மற்றும் தெலங்கானாவுடன் தொடர்புடையவை. கோல்கொண்டா வைரங்களும் திருடப்பட்டனவா என்ற கேள்விகளும் எழுகின்றன.
இந்த நிலையில், கோல்கொண்டா மற்றும் பரிதாலாவிலிருந்து பாரிஸுக்கு வைரங்கள் சென்றது எப்படி என்ற பின்னணியை தெரிந்துக்கொள்வோம்.
ஏறக்குறைய 18-ஆம் நூற்றாண்டு வரை, உலகுக்கு வைரங்களை வழங்கும் ஒரே நாடாக இந்தியா இருந்தது. இன்றைய ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் பெண்ணை நதிப் பகுதிகளில் வைரங்கள் ஏராளமாகக் கிடைத்தன.
தெலுங்கு நிலங்களை ஆட்சி செய்த விஜயநகரம் மற்றும் கோல்கொண்டா ராஜ்ஜியங்கள் மிகவும் சக்திவாய்ந்த பேரரசுகளாக மாறின. அவை, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வைரங்களை வெட்டி எடுத்து, விற்று, வர்த்தகம் செய்து வந்தன.
அந்த வரிசையில், கோல்கொண்டா வைரங்களின் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது. ஹம்பியின் தெருக்களும், பின்னர் பழைய ஹைதராபாத் நகரத்தில் உள்ள கேரவன் தெருக்களும் வைர வியாபாரிகளால் நிரம்பி வழிந்தன.
கோஹினூர் போன்ற சில வைரங்கள் குறித்த தரவுகள் தெளிவாக இல்லை என்றாலும், பல வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம் மற்றும் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், AFP via Getty Images
சில வைரங்கள் திருடப்பட்டு கடத்தப்பட்டன என்றால், பல வெளிநாட்டுக்கு விற்கப்பட்டன. வைரங்கள் மீதான ஐரோப்பியர்களின் மோகம், இந்திய வணிகர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நல்வாய்ப்பாக மாறியது.
ஐரோப்பாவில் பிரெஞ்சு மன்னர்கள், அரச குடும்பங்கள் மற்றும் செல்வந்தர்கள் வைரங்களை வாங்கினர். வைர வியாபாரத்துக்கு நல்ல எதிர்காலம் இருந்ததால், பல பிரெஞ்சு வணிகர்கள் வைரங்களை வாங்க இந்தியா வந்தனர்.
இப்படி வாங்கப்பட்ட வைரங்களில் பல பிரெஞ்சு அரச குடும்பத்தினரின் நகைகளில் பதிக்கப்பட்டிருந்தன. அண்மையில் லூவர் அருங்காட்சியகக் கொள்ளையில் திருடப்பட்ட அரச நகைகளில் கோல்கொண்டா வைரங்கள் இரண்டு இருந்தன.
பட மூலாதாரம், louvre
கோல்கொண்டா வைரங்கள்
திருடப்பட்ட பொருட்களில் பிரெஞ்சு பேரரசி யூஜினிக்கு சொந்தமான “ரெலிகுவரி” ப்ரூச்சில் 94 வைரங்கள் இருந்தன. 1855 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆபரணத்தில் மசாரின் 17 மற்றும் 18 எனப்படும் வைரங்களும் அடங்கும். புகழ்பெற்ற ஏல நிறுவனமான கிறிஸ்டிஸ் -இன் கூற்றுப்படி, இவை கோல்கொண்டா வைரங்கள்.
1661-ஆம் ஆண்டு கார்டினல் மசாரின் பிரெஞ்சு மன்னர் லூயிஸ் XIV-க்கு இந்த வைரங்களை வழங்கினார். இந்த இரண்டு வைரங்களும் கோல்கொண்டாவிலிருந்து பாரிஸை எவ்வாறு அடைந்தன என்பதை கிறிஸ்டிஸ் விளக்குகிறது.
கிறிஸ்டிஸ் நிறுவனம் 1766-ஆம் ஆண்டு முதல் வைரங்கள் மற்றும் விலையுயர்ந்த கலைப் படைப்புகளை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. கோல்கொண்டா வைரமான ‘லெ கிராண்ட் மசாரின்’ ஏலத்தில், நிறுவனம் அதன் வரலாற்றையும், லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள சான்சி வைரம் மற்றும் மசாரின் வைரங்கள் 17 மற்றும் 18 ஆகியவற்றின் வரலாற்றையும் விளக்கியது.
“வரலாற்று சிறப்புமிக்க வைரங்களுக்குப் பெயர் பெற்ற தென்-மத்திய இந்தியாவின் கோல்கொண்டா சுரங்கங்களில் கண்டெடுக்கப்பட்ட Le Grand Mazarin வைரம், 1661-ஆம் ஆண்டு இத்தாலிய கார்டினல் மசாரினிடம் இருந்து பதினான்காம் லூயிஸ் மன்னருக்கு வழங்கப்பட்டது. சான்சி மற்றும் மசாரின் பிற வைரங்கள் பிரெஞ்சு மன்னரின் கைகளுக்குச் சென்ற அதே நேரத்தில் இதுவும் நடந்தது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், அண்மையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் அருங்காட்சியகத்தில் இருந்தபோதிலும், கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்லாத பொருட்களின் பட்டியலில் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மூன்று பிரபல வைரங்களும் உள்ளன.
கோல்கொண்டா பேரரசின் ஒரு பகுதியாக இருந்த, தற்போது கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களின் ஒரு பகுதியாக உள்ள கொல்லூர் மற்றும் பரிதலா சுரங்கங்களில் இருந்து கிடைத்த சில வைரங்கள் லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளன. இவற்றில் மிக முக்கியமானது 140.5 காரட் எடையுள்ள ரீஜண்ட் வைரம் ஆகும்.
உலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த வைரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரீஜண்ட் வைரம், இன்றைய கிருஷ்ணா மாவட்டத்தின் பரிதலாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சென்ற இந்த வைரத்தின் பயணம் ‘The Diary of William Hedges during his Agency in Bengal’ என்ற புத்தகத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Louvre Museum
“ரீஜண்ட் வைரம், பிட் டயமண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இது இன்றைய பரிதலா கிராமத்திற்கு அருகிலுள்ள சுரங்கங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அதன் எடை 426 காரட் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுரங்கத்தில் வேலை செய்துவந்த அடிமைத் தொழிலாளி ஒருவர், வைரத்தை அங்கிருந்து கடத்தி மெட்ராஸுக்கு எடுத்துச் சென்றார். அவரைக் கொலை செய்து பிரிட்டிஷ் மாலுமி ஒருவர் வைரத்தை அபகரித்தார்.”
“பின்னர் அந்த மாலுமி வைரத்தை இந்திய வணிகர் ஒருவருக்கு 48,000 பகோடாக்கள் (அப்போது கோல்கொண்டாவின் நாணயம் பகோடா என்று அறியப்பட்டது) என்ற தொகைக்கு விற்றார். அவரிடம் இருந்த வைரத்தை அப்போதைய சென்னை ஆளுநர் பிட் பெரிய தொகைக்கு வாங்கினார்,” என்று கோல்கொண்டா பேரரசைப் பற்றி நன்கறிந்த வரலாற்றாசிரியரும் பத்திரிகையாளருமான நானிசெட்டி செரிஷ் பிபிசியிடம் தெரிவித்தார்.
ரீஜண்ட் வைரம் ஒருவரின் காலணிகளில் மறைத்து வைக்கப்பட்டு மெட்ராஸிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்டதாக பல வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளனர். லூவர் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, தற்போது வைரத்தின் எடை 140.64 காரட் ஆகும்.
“1698 ஆம் ஆண்டு கோல்கொண்டா சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரத்தை, அப்போதைய சென்னை ஆளுநரான தாமஸ் பிட் அதிக விலை கொடுத்து வாங்கினார். லண்டனில் பட்டை தீட்டப்பட்ட அந்த வைரம், 1717-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியாளரான பிலிப்பின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. இது இன்னும் உலகின் மிகச்சிறந்த வைரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது” என்று லூவர் அருங்காட்சியகத்தின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Louvre Museum
1721-ஆம் ஆண்டு லூயிஸ் XV, ரீஜண்ட் வைரத்தை தனது கிரீடத்தில் பதித்து பயன்படுத்தினார். அதன்பிறகு, லூயிஸ் XVI இன் முடிசூட்டு விழா கிரீடத்திலும் இந்த வைரம் பயன்படுத்தப்பட்டது.
சமீபத்தில் லூவர் அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளையின் போது மிகவும் மதிப்புமிக்க இந்த வைரத்தை திருடர்கள் தொடவில்லை. அது தற்போது அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளது.
ரீஜண்ட் மட்டுமல்ல, ஹார்டென்சியா மற்றும் சான்சி ஆகிய இரண்டு கோல்கொண்டா வைரங்களும் லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளன.
“ஹார்டென்சியா வைரத்தை, வணிகர் ஒருவரிடம் இருந்து லூயிஸ் XIV வாங்கினார். 1792-ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் போது திருடப்பட்ட இந்த வைரத்தை நெப்போலியன் I மீட்டெடுத்தார். அவருக்குப் பிறகு, ஹாலந்து ராணி ஹார்டென்ஸ் அதை அணிந்திருந்தார். பின்னர் 1830-இல் மீண்டும் திருடப்பட்டது. அதன் பிறகு, அது லூவர் அருங்காட்சியகத்துக்கு மாற்றப்பட்டது,” என்று வரலாற்றாசிரியரும் பத்திரிகையாளருமான நானிசெட்டி செரிஷ் கூறினார்.
லூவரின் அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்த வைரம் 1691-ஆம் ஆண்டு முதல் அரச குடும்பத்தின் நகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சான்சி 55 காரட் வைரமாகும். இந்த வைரத்தைப் பற்றி இருவேறு தகவல்கள் பதிவாகியுள்ளன. ரீஜண்டை விட பழமையான இந்த வைரம், பல ஐரோப்பிய மற்றும் ஆசிய மன்னர்கள், அரச குடும்பங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் வணிகர்கள் என பலரின் கை மாறி இறுதியாக லூவர் அருங்காட்சியகத்தை வந்தடைந்தது.

“சில வரலாற்றாசிரியர்கள், 1570-ஆம் ஆண்டு ஒட்டோமான் பேரரசின் பிரெஞ்சு தூதர் நிக்கோலஸ், சான்சி வைரத்தை வாங்கினார் என்று நம்புகிறார்கள். பின்னர், ஜாம்ஷெட்ஜி ஜிஜிபாய் என்ற இந்தியர் அதை வாங்கினார். பின்னர், அது பலர் கை மாறி மீண்டும் ஐரோப்பாவை அடைந்தாலும், பல தசாப்தங்களாக மீண்டும் காணாமல் போனது. இறுதியாக, அது லூவரை வந்தடைந்தது,” என்று ஷெரிஷ் கூறினார்.
‘டெக்கானின் வைரங்கள்’ என்ற கட்டுரையில், புவியியலாளர் எஸ்.வி. சத்தியநாராயணா, சான்சி வைரம் இந்தியாவின் டெக்கான் பகுதியில் தோராயமாக 1477-ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக எழுதுகிறார்.
1661-ஆம் ஆண்டில் சான்சி வைரம் பிரெஞ்சு அரச நகைகளில் சேர்க்கப்பட்டது. கார்டினல் ஜூல்ஸ் மசாரின் லூயிஸ் XIV க்கு வழங்கிய 18 ரத்தினங்களில் இதுவும் ஒன்றாகும். 18 ரத்தினங்களில் இரண்டு சமீபத்தில் திருடப்பட்டன, ஆனால், இந்த வைரம் பாதுகாப்பாகவே உள்ளது. இருப்பினும், கொல்லூர் மற்றும் பரிதாவில் உள்ள எந்த சுரங்கங்கத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஹார்டென்சியாவும் கோல்கொண்டா வைரம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள், ஆனால் அதுவும் எந்த சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்திய வைரங்கள்
17-ஆம் நூற்றாண்டில், இந்தியா உலகின் மிகப்பெரிய வைர விநியோக நாடாக இருந்தது. பிரான்சுக்குச் சென்ற பெரும்பாலான வைரங்கள் கோல்கொண்டாவில் இருந்து கிடைத்தவை. எனவே, இவை கோல்கொண்டா வைரங்களாக இருக்கலாம் என்று பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.
கிருஷ்ணா மற்றும் பெண்ணை நதிகளின் கரையில் சுமார் 1200 முதல் 1800 வரை வைர வேட்டை தொடர்ந்து நடைபெற்றுவந்தது.
“18-ஆம் நூற்றாண்டு வரை நீண்ட காலமாக, தென்னிந்தியாவின் டெக்கான் பகுதி வைரங்களின் முக்கிய ஆதாரமாக இருந்தது. கோஹினூர் மட்டுமல்ல, கிரேட் மொகல் வைரம், ரீஜண்ட், ஆர்லோஃப், நிஜாம், ஹோப்… என பல்வேறு வைரங்களும் இங்கிருந்து கிடைத்தவை.” என்று இந்திய புவியியல் ஆய்வு மையத்தில் (GSI) இருந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி எஸ்.வி.சத்தியநாராயணா பிபிசியிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “குறிப்பாக 13 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வைர வர்த்தகம் செழிப்பாக இருந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் கிருஷ்ணா மற்றும் பெண்ணை நதி பள்ளத்தாக்குகளில் வைரங்கள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. 18-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் வைரச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.”
“அதற்கு முன்னர் இங்கும்-அங்குமாக பல சிறிய சுரங்கங்களே இருந்த நிலையில், டெக்கான் பகுதியே உலகின் மிகப்பெரிய வைர மூலமாக இருந்து வந்தது. 1725-இல் பிரேசிலில் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை நிலைமை அப்படியே இருந்தது” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு