பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ரெஹான் ஃபஸல்
- பதவி, பிபிசி ஹிந்தி
-
லியோனிட் பிரெஷ்னேவ் முதன்முறையாக டிசம்பர் 15, 1961 அன்று இந்தியா வந்தபோது, அவர் சுப்ரீம் சோவியத் பிரசிடியத்தின் தலைவராக இருந்தார். அவர் அதிகாரப்பூர்வமாக அதிபர் பதவியில் இல்லை என்றாலும், அவர் அரசாங்கத்தின் தலைவர் பதவியை வகித்தார். இந்த வருகை திடீரென, ஒரு வார கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தியா வருவதற்கு முன்பு, பிரெஷ்னேவ் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்ற விரும்புவதாகவும், சோவியத் உபகரணங்கள் இந்தியத் திட்டங்களுக்காக இறக்கப்படும் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்குச் செல்ல விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்தார். பிரெஷ்னேவின் இந்த இரண்டு விருப்பங்களும் நிறைவேறவில்லை.
அப்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கவில்லை. அது பிப்ரவரி 1962 வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் எந்த ஒரு அரசாங்கத்தின் தலைவரும் தங்குவதற்கு ஏற்ற வசதியான இடங்கள் அங்கு இருக்கவில்லை என்பதால் பிரெஷ்னேவை விசாகப்பட்டினத்திற்கு அனுப்ப இந்திய அரசு சம்மதிக்கவில்லை.
குடியரசுத் தலைவர் மாளிகை செயலக ஆவணங்களின்படி, “ஆந்திரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் பிரெஷ்னேவை விசாகப்பட்டினத்தில் தங்க வைக்க வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சகத்திடம் கோரியிருந்தார்.”
பிரெஷ்னேவ் தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்தார். டெல்லிக்கு 50 மைல்களுக்கு அப்பால் இருந்து, இந்திய விமானப்படையின் எட்டு போர் விமானங்கள் பிரெஷ்னேவின் விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தன. பிரெஷ்னேவ் தரையிறங்கியதும் அவருக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.
அந்த நாட்களில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால், சோவியத் தலைவரை வரவேற்கும் பொறுப்பு குடியரசுத் துணைத்தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.
இந்தியாவின் பல நகரங்களுக்குப் பயணம்
பட மூலாதாரம், Getty Images
டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது டிசம்பர் 16, 1961 இதழில், “பாலம் விமான நிலையத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை செல்லும் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் பிரெஷ்னேவை வரவேற்க நின்றனர். அவர்கள் அவர் மீது பூக்களைத் தூவினர், பிரெஷ்னேவ் அவர்களுக்கு ‘நமஸ்தே’ என்று பதிலளித்தார். பிரெஷ்னேவின் கார்கள் அணிவகுத்து விஜய் செளக்கை அடைந்தபோது, குடியரசுத் தலைவர் மாளிகையின் குதிரைப்படை பாதுகாவலர்கள் அவரை வரவேற்று, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்,” என்று எழுதியது.
பிரெஷ்னேவுடன் வந்திருந்த சமையல்காரர், இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் சமையல்காரர்களுடன் சேர்ந்து பிரெஷ்னேவுக்கான உணவைத் தயாரித்தார். இரவு உணவுக்குப் பிறகு, பாடல் மற்றும் நடனப் பிரிவின் கலைஞர்கள் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தினர். அடுத்த நாள், பிரெஷ்னேவ், தீன்மூர்த்தி பவனுக்குச் சென்று அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் ஆயுதக் குறைப்பு, ஜெர்மனி, காலனித்துவம் மற்றும் உலக அமைதி போன்றவை குறித்துப் பேசினார்.
மாலை அவர் இந்தியத் தொழில்துறை கண்காட்சியைப் பார்க்கச் சென்றார். அங்கு அவருக்குக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தந்தத்தால் செய்யப்பட்ட ஒரு மேசை விளக்கையும், அவரது மனைவிக்கு பனாரஸ் பட்டுத் துணியாலான ஒரு ஸ்கார்ஃப் ஒன்றையும் பரிசாக வழங்கினார்கள். இந்தப் பயணத்தின்போது பிரெஷ்னேவ் ஆக்ரா, பம்பாய்(மும்பை), அங்கலேஷ்வர், பரோடா, கல்கத்தா (கொல்கத்தா), மெட்ராஸ் (சென்னை), ஜெய்ப்பூர் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.
டிசம்பர் 19 அன்று அங்கலேஷ்வரில் தனது 55வது பிறந்தநாளையும் அவர் கொண்டாடினார். ஜெய்ப்பூரில் யானை சவாரி செய்த பிறகு, பிரெஷ்னேவ் ஹிந்தியில் நன்றி கூறி மக்களை ஆச்சரியப்படுத்தினார். செங்கோட்டையில் நடந்த வரவேற்பு விழாவில், கோவா நடவடிக்கைக்கு ஆதரவு அளித்தமைக்காக ஜவஹர்லால் நேரு பிரெஷ்னேவுக்கு நன்றி தெரிவித்தார். கடைசியாக, பிரெஷ்னேவ் அகில இந்திய வானொலியில் இந்திய மக்களிடையே உரையாற்றினார்.
1971 போருக்குப் பிறகு மீண்டும் இந்தியா வந்த பிரெஷ்னேவ்
பட மூலாதாரம், Getty Images
பிரெஷ்னேவ் இரண்டாவது முறையாக நவம்பர் 1973 இல் இந்தியா வந்தார். 1971 ஆம் ஆண்டுப் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், இந்தப் பயணம் முக்கியமானதாக இருந்தது. பிரெஷ்னேவ் அப்போது சோவியத் ஒன்றியத்தின் மிக மூத்த தலைவராக இருந்தபோதிலும், அவருக்கு அரசாங்கத் தலைவர் அந்தஸ்து இருக்கவில்லை. எனவே, நெறிமுறையைப் பின்பற்றி, பிரெஷ்னேவை குடியரசுத் தலைவர் வரவேற்காமல் பிரதமர் இந்திரா காந்தி விமான நிலையத்தில் வரவேற்றார்.
ஆங்கில நாளிதழான ‘ஸ்டேட்ஸ்மேன்’ அதன் நவம்பர் 17, 1973 இதழில், “சாலை ஓரத்தில் நின்றிருந்த மக்கள் ‘துரூஸ்பா’ (தோழர் பிரெஷ்னேவ், நண்பர்) என்று கூறித் தோழர் பிரெஷ்னேவை வரவேற்றனர். விமான நிலையத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி முழுவதும் பிரெஷ்னேவ் சிரித்த முகத்துடன் இருந்தார்” என்று எழுதியது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு சுவாரஸ்யமான தலைப்பைக் கொடுத்தது: “அனைத்து சாதனைகளை முறியடித்த புன்னகை (Smile that Broke All Records).” ஆறு கதவுகள் கொண்ட குண்டு துளைக்காத மெர்சிடிஸ் காரில் பிரெஷ்னேவ், 32 கார்கள் புடைசூழ குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வழியில் பல இடங்களில் குழந்தைகள் பாங்க்ரா நடனமாடி பிரெஷ்னேவை வரவேற்றனர்.
அவர் டெல்லி வருவதற்கு முன், குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சோவியத் தூதரகத்திடமிருந்து இரண்டு விசித்திரமான கோரிக்கைகள் வந்தன. முதலாவது, சோவியத் விருந்தினர்களுக்காக குடியரசுத் தலைவர் மாளிகையின் ஒவ்வொரு குளியலறையிலும் “லைப் பாய்” சோப்பு வைக்கப்பட வேண்டும்.
இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகைப் பதிவேடுகளின் இறுதி எண் 30-ன் படி, இந்தக் கோரிக்கையைக் கேட்டு குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்கள் சற்று குழப்பமடைந்தனர். ஏனெனில் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு உலகின் சிறந்த சோப்புகள் குடியரசுத் தலைவர் மாளிகையின் குளியலறையில் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். லைப் பாய் சோப்பு அந்த நேரத்தில் இந்தியச் சந்தையில் கிடைத்த மிகவும் மலிவான சோப்பாகும்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் வீட்டு நிர்வாகக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒவ்வொரு குளியலறையிலும் ஒரு லைஃப் பாய் சோப்புத் துண்டுடன் சேர்த்து, உயர்தர பிராண்ட் சோப்புகளையும் வைக்கச் செய்தார்.
உண்ணுவதற்கு முன் உணவு பரிசோதனை
பட மூலாதாரம், Getty Images
சோவியத் தரப்பிலிருந்து வந்த இரண்டாவது கோரிக்கை, பிரெஷ்னேவ் தங்கியிருந்த அறையின் ஜன்னல்களில் தடிமனான திரைகள் பொருத்தப்பட வேண்டும் என்பதாகும். இந்தக் கோரிக்கையும் குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களைச் சற்றுக் குழப்பியது, ஏனெனில் குடியரசுத் தலைவர் மாளிகை பல நூறு ஏக்கர் பரப்பளவில் விரிந்திருந்தது. அதற்கு முன் சாலைகள் ஏதும் இல்லை என்பதால் போக்குவரத்து இரைச்சல் பிரெஷ்னேவின் படுக்கையறையை அடைவதற்கு வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி, எந்தவொரு வெளிநாட்டு விருந்தினரின் பயணத்தின்போதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்படுவது வழக்கம்.
இருப்பினும், சோவியத் தூதரகத்திடமிருந்து வந்த இந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் வசிப்பவர்களுக்கு, ஜன்னல்கள் வழியாக எட்டிப் பார்க்கவோ அல்லது சத்தம் போடவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. மற்றொரு சுவாரஸ்யமான கோரிக்கையும் வைக்கப்பட்டது. பிரெஷ்னேவின் அறையில் இரண்டு சிறந்த மின்சார இஸ்திரி பெட்டிகள் மற்றும் இஸ்திரி பலகை வைக்கப்படவேண்டும் என்பதுதான் அது.
உணவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு அறையின் குளிர்சாதனப் பெட்டியிலும் அன்னாசி, கொய்யா மற்றும் திராட்சை பழச்சாறுகள் வைக்கப்பட்டன. பிரெஷ்னேவுக்குப் பரிமாறப்படும் மாட்டிறைச்சி, கோழிக்கறி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றைத் தயாரிப்பதற்கு முன்பு மருத்துவர் அதன் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வந்தது. பிரெஷ்னேவின் தூதுக்குழுவில் இருந்த ஒருவருக்கு இதை சரிபார்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
பிரெஷ்னேவ் வேகவைத்த உருளைக்கிழங்குடன் ஹில்சா மீன் சாப்பிட விரும்புகிறார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் மயோனைஸ் மற்றும் மசாலாப் பொருட்கள் இல்லாத சாலட்டை ஒரு ஸ்நாக்காக சாப்பிட விரும்பினார். இது தவிர, அவருக்கு முட்டைக்கோஸ் சூப் குடிக்கவும் பிடிக்கும்.
பிரெஷ்னேவ் “சினாண்டலி” (Tsinandali) மற்றும் “முகுசானி” (Mukuzani) ஆகிய உலர் ஒயின்களையும், “போர்ஸோமி” (Borzhomi) மற்றும் “நர்ஸான்” (Narzan) ஆகிய மினரல் வாட்டரையும் மட்டுமே பயன்படுத்துகிறார் என்ற தகவலும் வழங்கப்பட்டது. வெளியுறவு அமைச்சகத்தின் உதவியுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன.
பிரெஷ்னேவுக்கு பிரியங்கா, ராகுலை அறிமுகப்படுத்திய இந்திரா காந்தி
பட மூலாதாரம், Getty Images
அந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் கடிதக் குண்டு சம்பவங்கள் பதிவாயின. எனவே, சோவியத் விருந்தினர்களுக்காக வரும் தபால்களை நேரடியாக அவர்களுக்கு அனுப்பாமல், சோவியத் தூதரகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று குடியரசுத் தலைவர் மாளிகையின் தபால் அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
பிரெஷ்னேவின் பயணத்திற்காக ஒரு தனி தகவல் தொடர்பு அமைப்பு நிறுவப்பட்டது. இதற்காகச் சோவியத் யூனியனில் இருந்து சிறப்புக் கருவிகள் வரவழைக்கப்பட்டன. சுமார் 20 டன் எடையுள்ள உபகரணங்கள் ஏழு லாரிகளில் ஏற்றப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
பிரெஷ்னேவின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கச் சோவியத் யூனியனில் இருந்து மருத்துவர்களின் ஒரு முழு குழுவும் வந்தது. அடுத்த நாள் பிரெஷ்னேவ் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றார்.
மாலை பிரதமர் இந்திரா காந்தி பிரெஷ்னேவுக்கு மரியாதை அளிக்கும் விதமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளித்தார். விருந்தின் மெனுவை விவரித்த ‘ஸ்டேட்ஸ்மேன்’ நாளிதழ், “விருந்தில் கிரீம் டோடியு, கபாப் உடன் தந்தூரி சிக்கன், காலிபிளவர் புஜியா, ஸ்டப்ட் தக்காளி, பச்சை பட்டாணி, சாலட், அப்பளம், பழங்கள் மற்றும் காபி ஆகியவை இருந்தன” என்று எழுதியது. விருந்துக்குப் பிறகு, அடர் மஞ்சள் நிறப் பட்டுச் சேலை அணிந்த இந்திரா காந்தி ஹிந்தியில் உரையாற்றினார். 1971-இல் செய்யப்பட்ட இந்திய-சோவியத் நட்பு ஒப்பந்தம் எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என்று அவர் கூறினார்.
விருந்துக்குப் பிறகு, அசோகா மண்டபத்தில் சங்கீத கலா அகாடமியின் கலைஞர்களின் கதக் மற்றும் மணிப்பூரி நடனங்களை விருந்தினர்கள் கண்டு களித்தனர். அடுத்த நாள் இந்திரா காந்தி தனது பேத்தி பிரியங்காவை பிரெஷ்னேவுக்கு அறிமுகப்படுத்த குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்து வந்தார். செங்கோட்டையில் பிரெஷ்னேவ் 90 நிமிட நீண்ட உரை நிகழ்த்தினார். அதனை ஒரு மொழிபெயர்ப்பாளர் இந்தியில் மொழிபெயர்த்தார்.
அடுத்த நாள் இந்திரா காந்தி தனது பேரன் ராகுலை பிரெஷ்னேவுக்கு அறிமுகப்படுத்த அழைத்து வந்தார். ராகுல், பிரெஷ்னேவுக்குப் பேசும் மைனா பறவையைப் பரிசளித்தார். அன்று மாலை, பிரெஷ்னேவ் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார், அவருக்கு முந்தைய பயணத்தில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிரெஷ்னேவ் – இந்திரா காந்தி கருத்து வேறுபாடு
பட மூலாதாரம், Getty Images
பிரெஷ்னேவின் மூன்றாவது இந்தியப் பயணம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 1980-இல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நடந்தது. இந்த நேரத்தில் பிரெஷ்னேவ் மிகவும் வயதானவராகக் காணப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது தெளிவாகத் தெரிந்தது.
ஆப்கானிஸ்தானுக்கு சோவியத் ராணுவத்தை அனுப்பியதால் பிரெஷ்னேவின் உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருந்தது. இதைக் கருத்தில் கொண்டு, பிரெஷ்னேவ் பயன்படுத்துவதற்காக மாஸ்கோவிலிருந்து ஒரு சிறப்பு கார் கொண்டு வரப்பட்டது. பிரெஷ்னேவின் பாதுகாப்பில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்பதால், காரின் ஓட்டுநரும் சோவியத் யூனியனில் இருந்து அழைத்து வரப்பட்டார். சோவியத் கார்களின் நம்பர் பிளேட்களில் இந்தியாவின் தேசியச் சின்னம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அளித்த விருந்தில், பிரதமர் இந்திரா காந்தி, அப்போதைய திட்டக்குழு உறுப்பினரும், பின்னாளில் இந்தியப் பிரதமராகவும் ஆன மன்மோகன் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். மற்ற விருந்தினர்களில் அடல் பிஹாரி வாஜ்பாய், பூபேஷ் குப்தா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் ஆகியோர் அடங்குவர்.
விருந்தில் பிரெஷ்னேவுக்கு பாம்ப்ரே மீன், ஹுசைனி கபாப், பனீர் கட்லெட், பனீர் கோர்மா மற்றும் சுவிஸ் ஸ்லாவ் ஆகியவை பரிமாறப்பட்டன. விருந்துக்குப் பிறகு உரையாற்றிய சஞ்சீவ ரெட்டி ஆப்கானிஸ்தானைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அடுத்த நாள் ஆப்கானிஸ்தான் பிரச்னை குறித்து இந்திரா காந்திக்கும் பிரெஷ்னேவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் இந்தப் பிரச்னையில் இரு தலைவர்களின் கருத்துகளும் வெவ்வேறாக இருந்தன.
ஜி.கே. ரெட்டி, “தி இந்து” நாளிதழின் டிசம்பர் 10, 1980 இதழில், “ஆப்கானிஸ்தானில் சோவியத் நடவடிக்கையின் தாக்கம் இந்தியாவிலும் ஏற்படும் என்பதை பிரெஷ்னேவிடம் இந்திரா காந்தி தெளிவுபடுத்தினார். ஆப்கானிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல், ஒரு நாடு மற்றொரு நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா எதிர்க்கிறது என்று கூறினார்,” என்று இந்திரா கூறினார்.

நியூயார்க் டைம்ஸ் ஒரு சுவாரஸ்யமான கருத்தைப் பதிவு செய்தது, அதாவது “பிரெஷ்னேவ் இந்தியா வந்தபோது எதிர்பார்த்த “பியர் ஹக்” (Bear Hug-அன்பான அணைப்பு) அவருக்குக் கிடைக்கவில்லை.” இந்த முறையும் பிரெஷ்னேவுக்குக் சிறப்பான மரியாதை அளிக்கப்பட்டது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இடம் செங்கோட்டையிலிருந்து விஞ்ஞான் பவனுக்கு மாற்றப்பட்டது.
பிரெஷ்னேவின் பயணம், இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்குச் சோவியத் தூதரகத்தில் அவர் அளித்த விருந்துடன் முடிந்தது. பாலம் விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், சாலையோரம் நின்றிருந்த மக்கள் “லால் சலாம்” (சிவப்பு வணக்கம்) என்று முழக்கமிட்டு பிரெஷ்னேவுக்கு விடை கொடுத்தனர்.
பிரெஷ்னேவ் அடுத்த இரண்டு ஆண்டுகள் சோவியத் ஒன்றியத்தை தொடர்ந்து வழிநடத்தினார். நவம்பர் 10, 1982 அன்று மாரடைப்பால் அவர் காலமானார். அப்போது அவருக்கு வயது 75. அவரது மனைவி விக்டோரியா பிரெஷ்னேவா 1995 வரை உயிருடன் இருந்தார்.
(இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள், இந்தியாவின் குடியரசுத் தலைவர் மாளிகையின் செயலகப் பதிவுகளிலிருந்து திரட்டப்பட்டவை.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு