பட மூலாதாரம், Cortesía/Parque Zoobotânico Arruda Câmara/AFP
கட்டுரை தகவல்
எச்சரிக்கை: உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம்
பிரேசிலில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்படும் இடத்திற்குள் நுழைந்த 19 வயதான கெர்சன் டி மெலோ மச்சாடோ என்கிற இளைஞர் பெண் சிங்கம் ஒன்று தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பிரேசிலின் ஜொவா பெசோவா நகரில் உள்ள அரூடா கமாரா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது.
பார்வையாளர்கள் பதிவு செய்த காணொளிகளில் அந்த இளைஞர் மரத்தின் உதவியுடன் ஏறி வேலிகளை மற்றும் தடுப்புகளைக் கடந்து குதித்து சிங்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் செல்வதைப் பார்க்க முடிகிறது.
சிறிது தூரத்தில் இருந்த சிங்கம் மெதுவாக அருகே வந்து அந்த இளைஞர் மரத்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தது. இருவருமே ஒரு இடத்தில் நின்றனர். ஆனால் அந்த இளைஞர் சிங்கத்தின் அருகில் சென்றார் அப்போது தான் சிங்கம் அவரைத் தாக்கியது.
மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது. அதில் அவரின் குடும்பத்தினர் அவரை கவனித்துக் கொண்ட சமூக நல பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் 9 ஆண்டுகளாக கெர்சனை பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெராவும் ஒருவர்.
அவரைப் பொருத்தவரை கெர்சனின் மரணம் என்பது அரசு, சமூகம் மற்றும் மன நலன் சவால்கள் கொண்ட இளைஞரை பாதுகாக்க தவறிய அமைப்பு ஆகிய அனைவரின் கூட்டுத் தோல்விதான்.
“அந்த வீடியோவில் காட்டப்படுவது மட்டுமல்ல அவன். அவன் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை. இந்த ஒட்டுமொத்த அமைப்பும் அவனை கைவிட்டுவிட்டது,” எனத் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறும் அவர், அதிகாரிகளின் பதில் என்பது அந்த இளைஞருக்கு நடத்தை சிக்கல்கள் உள்ளது என்பதாகவே இருந்தது என்றார்.
“ஜொவா பெசோவாவில் உள்ள அனைத்து பாதுகாப்பு மையங்களிக்கும் அவர் சென்று வந்தார். இந்த ஒட்டுமொத்த சமயமும் ஒரு அறிக்கை பெற முயற்சித்தோம். ஆனால் ஜூலியானோ மொரெய்ராவில் உள்ள மன நல மருத்துவர் இவரிடம் எந்தச் சிக்கலும் இல்லை, இவரின் பிரச்னை எல்லாம் நடத்தை சார்ந்ததுதான் என்றார். அவருக்கான அறிக்கையை பெறவே முடியவில்லை,” என அவரின் சட்டப்பூர்வ பிரதிநிதி தெரிவித்தார்.
பட மூலாதாரம், AFP
படக்குறிப்பு, மன நல சவால்கள் கொண்ட கெர்சனின் உடல் திங்கட்கிழமை அன்று அடக்கம் செய்யப்பட்டது.
இளைஞர் பெற்றுவந்த சிகிச்சை
கிளேசியஸ் கப்ரால் டோஸ் ரெய்ஸ் என்கிற மன நல மருத்துவர் 2023-ஆம் ஆண்டு வழங்கிய அறிக்கை ஒன்றை பிபிசி பிரேசில் ஆய்வு செய்தது. அதில் “பொருந்தாத நடத்தை”, “மன நிலை மாற்றங்கள்”, “நிலையற்றத்தன்மை”, மற்றும் “உணரச்சி வேகத்தில் செயல்படும் தன்மை” இருப்பதாகவும் அதற்கு பல்முனை சிகிச்சைகளை பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அந்த அறிக்கையின்படி, குழந்தைப் பருவத்திலும் இளமைக் காலத்திலும் கெர்சன் மூன்று மன நல மருத்துவர்களைச் சந்தித்துள்ளார். அவை போக சமூக சேவைகள் துறை ஏற்பாடு செய்த தனியார் கலந்தாய்வுகளிலும் கலந்து கொண்டுள்ளார்,” என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இளைஞர் தொடர்ந்து வெவ்வேறு சேவைக்கு பரிந்துரைக்கப்பட்டு வந்துள்ளார்.
கமின்ஹார் உளவியல் நல மையத்தின் இயக்குநரும் கெர்சனின் பொறுப்பாளாறுமான ஜனைனா டி’எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். டிசம்பர் 2024-இல் அந்த மையத்திற்கு வந்த கெர்சன் சிகிச்சை பெறுவதில் சிரமங்களை சந்தித்து வந்துள்ளார். கெர்சன் பல முறை அங்கு வந்து மீண்டும் காணாமல் போனதாகவும் ஜனைனா தெரிவித்தார்.
பட மூலாதாரம், Vídeo/Reprodução
படக்குறிப்பு, கெர்சனின் பொறுப்பாளாரான ஜனைனா டி’எமெரி அவர் சிறுவயது முதலே கண்காணிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.
கெர்சனின் மரணத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மேற்பார்வையிட பரைபா சட்ட அலுவலகம் விசாரணை ஒன்றை துவக்கியுள்ளது. அரூடா கமாரா பூங்காவில் “மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், நிர்வாக நடைமுறைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளைக்” குறிப்பிட்டு சுற்றுச்சூழல் செயலகம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அதே வேளையில் பூங்கா நிர்வாகம் சிங்கத்தின் நிலை உட்பட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
பட மூலாதாரம், Arquivo Pessoal
படக்குறிப்பு, 9 ஆண்டுகளாக அவரைப் பார்த்துக் கொண்ட வெரோனிகா ஆலிவெரா
சிங்கத்தை தழுவ கனவு கண்ட கெர்சன்
கெர்சன் சிங்கத்தை தழுவுவதற்கு கனவு கண்டதாகக் கூறுகிறார் ஆலிவெரா. “சிறு வயது முதலே அவன் அதைப்பற்றி பேசி வந்துள்ளான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆப்ரிக்கா சென்று சஃபாரி செல்ல ஜொவா பெசோவா விமான நிலையத்தில் உள்ள விமானம் ஒன்றின் லெனடிங் கியரில் ஏற முயற்சித்துள்ளான்.” என்றார்.
சிங்கத்தை நெருங்குவதால் ஏற்படும் ஆபத்தை அவன் உணர்ந்து இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“நீங்கள் அந்த வீடியோவை கவனமாகப் பார்த்தால் அவன் சிங்கத்தை நெருக்கி செல்வதைப் பார்க்க முடியும். எந்த பிரச்னையும் ஏற்படாது என அவன் நினைத்துள்ளான். சிங்கத்துடன் விளையாடுவதற்காக கீழே இறங்கி சென்றுள்ளான்,” என்றார்.
கெர்சனுக்கு 10 வயது இருக்கிறபோது சிறுவர் தடுப்பு மையத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார். நெடுஞ்சாலையில் சுற்றித் திரிந்தவரை காவல்துறையினர் அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பட மூலாதாரம், Parque Zoobotânico Arruda Câmara/AFP
படக்குறிப்பு, சிங்கம் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் சென்று பார்த்தபோது அது அவனின் பாட்டி வீடாக இருந்தது. அவரின் தாய் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரின் தாய், பாட்டி இருவருக்கும் மனச் சிதைவு நோய் இருந்தது. இருவரும் அவனைப் பார்த்து, ‘கண்ணா, நீ இங்கே இருக்க முடியாது’ என்றனர். அதற்கு அவன், ‘இல்லை, நான் உங்களுடன் இருக்க வேண்டும்’ எனக் கூறினான் ” என்கிறார் ஆலிவெரா.
மனச் சிதைவு நோய் கொண்ட அத்தாய் 5 குழந்தைகளின் பாராமரிப்பையும் இழந்தார். அவர்களின் 4 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். கெர்சன் பராமரிப்பு மையங்களில் வளர்ந்து வந்துள்ளார்.
“நாங்கள் அவனுடன் பேசினோம். அவன் காப்பக்கத்தில் இருக்க விருப்பமில்லை எனத் தெரிவித்தான். அவனுடைய எண்ணத்தில் தாயுடன் இருப்பது தான் சரியாக இருக்கும் என இருந்தது. அவன் தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளான். ஆனால் அவர் சரியான நிலையில் இருந்ததில்லை, இப்போதும் இல்லை,” என்றார் ஆலிவெரா.
‘கொள்ளையில் ஈடுபட ஆர்வம்’
கெர்சனுக்கு விலங்குகளுடன் வலுவான பிணைப்பு இருந்ததாகக் கூறுகிறார் ஆலிவெரா.
”குதிரைகளைத் திருடி அதன் மீது சிறுது தூரம் சவாரி சென்று திரும்பியுள்ளான்.காலப்போக்கில் சிறு கொள்ளைகளில் ஈடுபடும் ஆர்வம் அவனிடம் உருவானது. ஆனால் இது திட்டமிடப்பட்டோ அல்லது தீங்கு விளைவிக்கும் நோக்கிலோ இருக்காது. வாகங்களை திருடக் கற்றுக் கொண்ட கெர்சன், அவற்றை காவல் நிலையங்களில் ஒப்படைத்தும் விடுவான்.”
சமூக ஊடகங்களில் அவருக்கு “வாகுவெரின்ஹோ” (சிறிய கவ்பாய்) என்கிற பெயர் இருந்ததாகக் கூறும் ஆலிவெரா, “மக்கள் அவனைப் பற்றி பதிவிட்டு லைக்ஸ் பெற ஆரம்பித்தனர். அவனைக் கெட்ட விஷயங்கள் செய்யத் தூண்டினார். இது மிகவும் சோகமானது. பலரும் அவனின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதால் அவனுடைய தகவல்களை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க பலமுறை புகார் அளித்துள்ளோம்,” என்றார்.
”சமூக மற்றும் கல்வி அமைப்பில் அவன் பாதுகாப்பாக உணர்ந்தான், அவனுக்கு உணவு கிடைத்தது, யாரும் அவனை தொல்லை செய்யவில்லை. அங்கிருந்து சென்ற பிறகு அவன் திரும்பவில்லை”. என்றார் ஆலிவெரா
முதிர்வயதை அடைந்த பிறகு பாராமரிப்பு பெறும் உரிமையை இழந்தார்.
“சிறைக்குச் செல்வதற்கான வழியை கண்டுபிடிக்கப் போவதாக அவன் கூறினான்” என நினைவு கூறும் ஆலிவேரா. “அங்கு அவனுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்.” எனத் தெரிவித்தார்.
காவல் நிலையம் அருகே உள்ள ஏடிஎம்-ஐ திறக்க முயற்சிப்பது ரோந்து வாகனத்தின் மீது கல்லைத் தூக்கி எறிவது என ஏற்கெனவே ஆறு முறை சிறைக்குச் சென்றுள்ளார் கெர்சன். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி கார்டியன்ஷிப் கவுன்சிலுக்கு சென்று ஆவணங்கள் மற்றும் வேலை உரிமம் பெற கெர்சன் முயற்சித்துள்ளதாகாகக் கூறும் ஆலிவெரா, அவர்கள் அவனுக்கு உதவவில்லை என்றும் தெரிவித்தார்.
அவரின் இறுதிச் சடங்கில் பேசிய பாதிரியார் ஒருவர், “அவன் சிங்கத்தின் கூண்டிற்குள் சென்றான். சமூகம் அவனை அதற்குள் தூக்கி எறிந்தது.” எனத் தெரிவித்தார்.
விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ நடைமுறைகள் முடிகின்ற வரையில் அரூடா கமாரா பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளது.