பட மூலாதாரம், Getty Images
மணிப்பூர் மாநில முதல்வர் பதவியில் இருந்து பிரேன் சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை, ஆளுநர் மாளிகைக்குச் சென்று அம்மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.
பிரேன் சிங்கின் தனி உதவியாளர் தீபக் ஷிஜகுருமா, பிபிசியிடம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏ.என்ஐ. செய்தி முகமையும் படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பித் பத்ரா மற்றும் பிற மாநிலத் தலைவர்களும் பிரேன் சிங்குடன் இருப்பதை அந்த புகைப்படத்தில் காணலாம்.
ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் பிரேன் சிங் குறிப்பிட்டது என்ன?
ஞாயிற்றுக்கிழமை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பிரேன் சிங் சந்தித்தார்.
புது டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு, பிரேன் சிங் சில எம்.எல்.ஏ.க்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று அம்மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
“இதுவரை மணிப்பூர் மக்களுக்கு சேவை செய்ததை ஒரு பெருமையாக கருதுகிறேன்” என்று முதல்வர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், ANI
பிரேன் சிங்கிற்கு எதிராக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டிருந்த நிலையில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த சில எம்எல்ஏக்களும் இதற்கு ஆதரவாக இருப்பதாக செய்திகள் வெளியாயின.
இதற்கிடையில், பிரேன் சிங்குடன், பாஜக மற்றும் NPF (நாகா மக்கள் முன்னணி) கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களும் ஆளுநர் மாளிகையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
பாஜகவின் மணிப்பூர் மாநிலத் தலைவர் ஏ. ஷர்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பித் பத்ரா ஆகியோரும் அதில் இருந்தனர். அதன் பிறகு, பிரேன் சிங் முதலமைச்சர் செயலகத்திற்குச் சென்றார்.
அடுத்த முதல்வர் யார் என்பது ஓரிரு நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகள்
2017 ஆம் ஆண்டு முதல் முறையாக மணிப்பூர் முதல்வராக பிரேன் சிங் பதவியேற்றார். இது மணிப்பூர் மாநிலத்தில் அவர் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் தொடர்ச்சியான இரண்டாவது பதவிக்காலமாகும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக மாநிலத்தில் நடந்த பரவலான வன்முறை அவரை நெருக்கடியில் தள்ளியுள்ளது.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி அன்று மணிப்பூரில் மெய்தேய் சமூகத்திற்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே தொடங்கிய வன்முறையை கட்டுப்படுத்த பிரேன் சிங் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.
வன்முறையைக் கட்டுப்படுத்த அவர் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் பலமுறை குற்றம்சாட்டியுள்ளன. அவர் பதவி விலக வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தின.
வன்முறை தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, பிரேன் சிங் ராஜினாமா செய்வார் என்பது போல இருந்தது, ஆனால் அவர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.
அப்போது பிரேன் சிங்கின் ராஜினாமா கடிதம் என்று கூறப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.
இதற்குப் பிறகு, அவர், “இந்த முக்கியமான கட்டத்தில், நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டார்.
பட மூலாதாரம், Getty Images
யார் இந்த பிரேன் சிங்?
அரசியலுக்கு வருவதற்கு முன்பு பிரேன் சிங் மணிப்பூரைச் சேர்ந்த கால்பந்து வீரராக தேசிய அளவில் புகழ் பெற்றார். 2017 ஆம் ஆண்டு மணிப்பூரில் பாரதிய ஜனதா தலைமையில் அமைந்த அரசில் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அம்மாநிலத்தின் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருந்தது. அதேநேரத்தில் 28 தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிரேன் சிங் அம்மாநிலத்தில் அரசமைத்தார்.
1963 ஆம் ஆண்டுக்கு பிறகு மணிப்பூரில் மொத்தம் 12 முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். அவர்களில் தொடர்ந்து நீண்ட காலம் (15 ஆண்டுகள்) முதலமைச்சர் பதவியை வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஓக்ராம் இபோபி சிங் ஆவார்.
இவருடன் இணைந்து தான் பிரேன் சிங் அரசியல் தந்திரங்களைக் கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், அவர் மற்றும் அவரது கட்சி இரண்டிற்கும் எதிராகக் கலகம் செய்து முதலமைச்சர் பதவியை அடைந்தார்.
கால்பந்து மற்றும் பத்திரிகைத் துறையில் பிரேன் சிங்கின் செயல்திறன் அவரை முதலமைச்சர் பதவிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த பிரேன் சிங், மணிப்பூர் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு இதழியல் துறையில் டிப்ளமோவும் பெற்றுள்ளார்.
1961 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள லுவாங்சங்பாம் மாமாங் லெய்காய் கிராமத்தில் பிரேன் சிங் பிறந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பு வெளிநாடுகளுக்கு சென்று விளையாடிய மணிப்பூரைச் சேர்ந்த ஒரே கால்பந்து வீரர் பிரேன் சிங் ஆவார்.
அவர் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கினார். இதன் காரணமாகவே அவர் 1981ஆம் ஆண்டு டுராண்ட் கோப்பையை வென்ற எல்லைப் பாதுகாப்புப் படை அணியில் ஒரு விளையாட்டு வீரராக இருந்தார்.
பின்னர் அவர் நஹோரோல்கி துவாடாங் என்ற செய்தித்தாளில் பணியாற்றினார். அந்த நேரத்தில், அரசு மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் மணிப்பூரில் இளைஞர்களின் பங்கு குறித்து ஒரு பத்திரிகையாளராகப் பணியாற்றுவது எளிதாக இருக்கவில்லை.
அப்போது முதல்வராக பதவி வகித்த ஓக்ராம் இபோபி சிங்கின் நெருங்கிய நண்பராக பிரேன் சிங் கருதப்பட்டார். 2002 ஆம் ஆண்டு மாநிலத்தின் முதலமைச்சரான பிறகு, நிலையான அரசாங்கத்தை நடத்துவதில் இபோபி சிங் சவால்களை எதிர்கொண்டார்.
பட மூலாதாரம், Getty Images
முதல்வரானது எப்படி?
1972 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில அந்தஸ்து பெற்றதிலிருந்து, அரசியல் கொந்தளிப்பு காரணமாக 18 முறை அரசாங்கங்கள் மாறிவிட்டன.
அத்தகைய நேரத்தில், இபோபிக்கு தனது கூட்டணி அரசாங்கத்தின் பதவிக் காலத்தை முழுமையாக முடிக்க ஒரு குழு தேவைப்பட்டது. அவரது இந்த தேவை 2003-இல் பிரேன் சிங் மூலம் முடிவுக்கு வந்தது.
ஓக்ராம் இபோபி சிங், பிரேன் சிங்கை காங்கிரஸில் இணைத்தார். தனது அமைச்சரவையில் பதவியும் கொடுத்தார். இதனால் இபோபி அரசாங்கத்தில் பிரேன் சிங் விஜிலென்ஸ் துறையின் இணை அமைச்சரானார்.
2002 ஆம் ஆண்டு பிரேன் சிங் அரசியலில் நுழைந்தார். மணிப்பூர் மக்களிடையே அவர் ஒரு கால்பந்து வீரராகவும் பின்னர் ஒரு பத்திரிகையாளராகவும் நன்கு அறியப்பட்டிருந்தார். அவர் அரசியலில் நுழைய இது உதவியது.
இபோபி தனது மூன்றாவது பதவிக்காலத்தில் பிரெனிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டார்.
இபோபியிடமிருந்து எந்த நேரத்திலும் அதிகாரத்தைப் பறிக்கக்கூடிய ஒரு தலைவராக பிரேன் சிங் காங்கிரஸ் கட்சியில் காணப்பட்டார்.
அந்த நேரத்தில், இபோபியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பிய ஒரே காங்கிரஸ் தலைவர் பிரேன் சிங்தான்.
இருவருக்கும் இடையிலான வேறுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கிய போது, அவரை சமாதானப்படுத்த கட்சி பிரேன் சிங்கை மணிப்பூர் காங்கிரஸின் துணைத் தலைவராக்கியது.
ஆனால் இபோபி சிங்குடனான அவரது மோதல் தணியவில்லை. 2012 ஆம் ஆண்டு இபோபி சிங் மூன்றாவது முறையாக மாநிலத்தில் அரசாங்கத்தை அமைத்த போது, பிரேன் சிங் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
2016 ஆம் ஆண்டு அசாமிலும் பின்னர் அருணாச்சலப் பிரதேசத்திலும் அரசாங்கத்தை அமைத்த பிறகு, பாஜக மணிப்பூரில் ஆட்சிக்கு குறி வைத்தது.
மணிப்பூரில் இபோபி சிங்கை தோற்கடிக்கக் கூடிய ஒரு தலைவரை அந்தக் கட்சி தேடிக் கொண்டிருந்தது.
பாஜகவின் பார்வையில், மணிப்பூரில் இபோபியின் அரசியல் செயல்பாடுகளை நன்கு அறிந்த ஒரே தலைவர் பிரேன் சிங் மட்டுமே.
2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பிரேன் சிங்கை தனது கட்சியில் சேர்ப்பதில் பாஜக வெற்றி கண்டது. பின்னர் 2017 ஆம் ஆண்டு, அவர் முதல் முறையாக அம்மாநில முதல்வரானார்.
(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.