படக்குறிப்பு, பிரேமலால் மற்றும் அவரின் எக்ஸ்ரே படம்கட்டுரை தகவல்
பல் துலக்குவது எளிதான ஒன்றாக இருந்தாலும் அதுவே ஆபத்தானதாக மாறியது என சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒன்றை தான் இலங்கையில் உள்ள பிரேமலால் எதிர்கொண்டார்.
சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பாகத்தை (bristle) மருத்துவர்கள் அகற்றி பிரேமலால் உயிரை காப்பாற்றினர்.
சிகிச்சை முடிந்த பிறகு ஓய்வில் இருந்த பிரேமலாலுடன் பிபிசி சிங்கள சேவை உரையாடியது.
“ஜனவரி 23-ஆம் தேதி காலை குளியலறை சென்று பல் துலக்கிய போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் வாயில் இருந்த பிரஷ் இரண்டாக உடைந்து ஒரு பகுதி தொண்டைக்குள் சிக்கியது. அதை பலமுறை இழுத்துப் பார்த்தும் அது என் தொண்டையில் இருந்து வராததால் ஆபத்தின் தீவிரத்தை உணர்ந்தேன்” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக உள்ளது எங்களால் சிகிச்சை அளிக்க இயலாது என மருத்துவர்கள் மறுத்தனர்” என பிரேமலால் தெரிவித்தார்.
“உடனடியாக மாத்தறையில் உள்ள பொது மருத்துவமனைக்கு சென்று நிலைமையை விவரித்தேன். அவர்கள் என்னை உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சையளிக்க தொடங்கினர்” என்றார்.
முதலில் தன்னுடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் மருத்துவர்கள் பரிசோதித்ததாகவும் ஆனால் பிரஷ்ஷின் பாகம் இருப்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. பின்னர் சிகிச்சை முடிந்து விரும்பினால் கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்கு செல்லலாம் என மருத்துவர்கள் சொன்னதால், தான் வீட்டுக்கு சென்றதாக பிரேமலால் பிபிசியிடம் தெரிவித்தார்.
இறுக்கமான தொண்டை
வீட்டுக்கு சென்று ஒரு மணி நேரமான பிறகு தன்னுடைய தொண்டை இறுக்கமாவதை பிரேமலால் உணர்ந்தார். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சென்று, தன்னுடைய தொண்டை இறுக்கமாவதையும், இருமல் அதிகரிப்பதையும், சளியுடன் சேர்ந்து ரத்தம் வருவதையும் மருத்துவரிடம் தெரிவித்தார். அங்கிருந்த மருத்துவர் லக்மல் பிரேமலாலுக்கு உடனடியாக எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி, அவருக்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டது. பல் துலக்கு பிரஷின் தலைப்பகுதி அவரது உடலுக்குள் இருப்பதை பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது.
“இது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பது போன்றது, எக்ஸ்-ரேயில் பிரஷின் தலைப் பகுதி தொண்டைக்குள் இருப்பது தெரிகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் எக்ஸ்-ரேயில் தெரிவதில்லை என்று மாத்தறை மருத்துவமனையில் என்னிடம் கூறப்பட்டது” என்று அவர் கூறினார்.
மாத்தறை முதல் கல்லே வரை…
படக்குறிப்பு, பிரேமலாலின் கழுத்தில் பல் துலக்கும் பிரஷின் முன்பகுதி எவ்வாறு சிக்கிக்கொண்டது என்பதை எக்ஸ்-ரே பரிசோதனை காட்டியது..
மருத்துவரின் ஆலோசனைப்படி காலி நகரில் உள்ள காது மூக்கு தொண்டை நிபுணரான மருத்துவர் அனுருத்தா விக்ரமசிங்கேவை சந்திக்க பிரேமலால் மாத்தறையில் இருந்து தன்னுடைய மகனுடன் அந்த நகருக்கு பயணம் மேற்கொண்டார்.
காலி நகரில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுருத்தாவை சந்திக்க சென்ற பிரேமலாலுக்கு ஏமாற்றம், அங்கு மருத்துவர் இல்லை. இருப்பினும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவ பணியாளர்கள் அவரது எக்ஸ்ரே மற்றும் மருத்துவ அறிக்கையை உடனடியாக மருத்துவர் அனிருத்தாவுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி விவரித்ததாகவும் மருத்துவ அறிக்கையை பார்த்த மருத்துவர் அனிருத்தா தன்னை அங்கேயே இருக்கும்படி அறிவுறுத்தி, சில மணிநேரத்தில் தன்னை காலி நகர தேசிய மருத்துவமனையில் அனுமதித்தாகவும் பிபிசியிடம் தெரிவித்தார் பிரேமலால்.
காலி நகர தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேமலாலுக்கு மருத்துவர் அனிருத்தா மேற்பார்வையில் காலை 9 மணிக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உடைந்த பிரஷின் முன்பகுதியை அவர்களால் கண்டறிய முடியவில்லை. சில மணித்துளிகள் தனக்கு தொண்டை பகுதியில் ஏற்பட்டிருந்த வலி குறைந்ததையும் தன்னால் இயல்பாக பேச முடிந்ததையும் உணர்ந்த பிரேமலால் சிறிதி நேரத்திலேயே மீண்டும் பழைய அறிகுறிகள் தென்பட்டதையும் அதனால் தொண்டை பகுதியில் மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டதையும் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் அனிருத்தா ஆலோசனைப்படி மீண்டும் பிரேமலாலுக்கு எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைக்கப்பட்டு அந்த முடிவுகளின்படி பிரஷின் உடைந்த பாகம் தொண்டைக்குள்ளேயே இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர், இதனால் அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிரேமலால் நன்றாக சாப்பிட்டு பேசிக் கொண்டிருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
ஜனவரி 25-ஆம் தேதி பிரேமலாலுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
“இந்தச் சம்பவம் நம்மை எப்படிப் பாதிக்கும் என்று தம்மால் துல்லியமாகக் கூற முடியாது என்று மருத்துவர் கூறினார். இலங்கையில் எங்கும் இது போன்ற ஒரு சம்பவம் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளில்கூட இது பதிவாகியிருப்பதாகச் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு செய்தால் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறினார்.” என்று சிகிச்சைக்கு முன்பு மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக பிரேமலால் நினைவு கூர்ந்தார்.
“சரியாக காலை 11.45 மணிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, நான் அறுவை சிகிச்சை அறையிலிருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டேன், இன்றும் உடைந்த பிரஷ்ஷின் பாகத்தை நான் என்னுடன் வைத்துள்ளேன்” என்றார் பிரேமலால்.
‘பாடமாக இருக்கட்டும்’
படக்குறிப்பு, குணமடைந்த பின் பிரேமலால் வீடு திரும்பியுள்ளார்.
ஒரு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரேமலால் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
பிபிசியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்கு எந்த வித அசெளகரியமும் ஏற்படவில்லை என புத்துணர்ச்சியுடன் தெரிவித்தார் பிரேமலால்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் எளிய பணிகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று கூறி பிபிசியுடனான உரையாடலை முடித்தார் பிரேமலால்.
“இலங்கை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனக்கு நடந்தது ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”
“ஒரு சிறிய தவறு பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதை இதுபோன்ற சம்பவம் நமக்கு கற்பிக்கும் பாடமாக இருக்கட்டும்” என்றார் பிரேமலால்.