பட மூலாதாரம், ANI
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமா வாங்கியோம் தோங்டாக் என்ற பெண் ஒருவர், இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் சீன குடியேற்ற அதிகாரிகளால் பல மணி நேரம் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
தனது பாஸ்போர்ட் செல்லாது என்று தனக்குச் சொல்லப்பட்டதாகவும் அப்பெண் கூறுகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதுபோன்ற சம்பவம் எந்த ஒரு குடிமகனுக்கும் நடக்கக்கூடாது என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, இந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இது சர்வதேச சட்டத்தை மீறுகிறது என்றும் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த அதே நாளில் (நவம்பர் 21) இந்திய அரசு பெய்ஜிங்கிலும் டெல்லியிலும் சீனத் தரப்பிற்கு வலுவான எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக பிபிசிக்கு தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் சந்தேகத்துக்கு இடமின்றி இந்திய நாட்டின் பகுதி என்றும், அங்கு வசிப்பவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கவும், அதில் பயணிக்கவும் முழு உரிமையுடையவர்கள் என்றும் இந்தியா சீனாவிடம் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள் சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான சிகாகோ மற்றும் மாண்ட்ரீயல் ஒப்பந்தங்களை மீறுவதாகவும் இந்தியத் தரப்பு கூறியது.
”இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அருணாசலப் பிரதேசத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை” என சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், India Today Group/Getty Images
அருணாச்சல பிரதேச முதல்வர் என்ன சொன்னார்?
அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, பிரேமா தோங்டாக் குறித்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரேமாவை சீன அதிகாரிகள் நடத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் இருந்தபோதிலும், அவர் அவமதிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டுள்ளார், இது வருத்தமளிக்கிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பகுதி, எப்போதும் அப்படியே இருக்கும்” என்று பெமா காண்டு தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கும்படி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக இந்த விவகாரத்தை கையில் எடுக்கும் என தான் நம்புவதாகவும் அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
பிரேமா தோங்டாக் கூறியது என்ன ?
பிரேமா வாங்கியோம் தோங்டாக், தான் ஒரு இந்திய குடிமகள் என்றும், கடந்த 14 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருவதாகவும் கூறுகிறார்.
“நான் லண்டனில் இருந்து ஜப்பானுக்கு விடுமுறைக்குச் சென்று கொண்டிருந்தேன், டிரான்சிட்டுக்காக ஷாங்காய் செல்ல வேண்டிருந்தது. அப்போது, சீன குடிவரவுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி என்னிடம் வந்து வரிசையில் இருந்து என்னைப் பிரித்தார்” என்று அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர் என்னிடம், ‘அருணாச்சலம் இந்தியாவில் இல்லை, சீனாவில் உள்ளது. உங்கள் விசா செல்லுபடியாகாது. உங்கள் பாஸ்போர்ட் செல்லாது…’ என்று சொன்னார். நான் அவர்களிடம் விசாரித்தபோது, ’அருணாச்சலம் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல’ என்று கூறினார்கள். என்னை கேலி செய்யத் தொடங்கிய அவர்கள், நான் சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்”என விவரித்தார்.
இதற்கு முன்பு இதைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்பதால், இது தனக்கு மிகவும் குழப்பமாக இருந்தது என்கிறார் பிரேமா.
“நான் இதற்கு முன்பு எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஷாங்காய் டிரான்சிட்டை கடந்து சென்றிருக்கிறேன், ஒருபோதும் பிரச்னை ஏற்பட்டதில்லை,” என்று அவர் கூறுகிறார்.
மேலும், “என்னை வரிசையில் நிற்க விடவில்லை. பல அதிகாரிகள் அங்கு வந்தனர். நான் குறைந்தது 10 அதிகாரிகளிடம் பேசினேன். ஒரு அதிகாரி என்னை விமான நிலையத்தின் வேறு பகுதியிற்கு அழைத்துச் சென்றார். அவர் என்னை சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஊழியர்களிடம் அழைத்துச் சென்றார். அவர்கள் மீண்டும் குடியேற்றக் கவுன்டருக்கு அனுப்பினர். அங்கு அவர்கள் தங்களது தாய் மொழியிலேயே பேசிக் கொண்டிருந்தனர்” என்று அந்த சம்பவத்தை விவரிக்கிறார் பிரேமா.
தொடர்ந்து பேசிய அவர், “யாரும் எனக்கு தெளிவான பதில் அளிக்கவில்லை. அன்றைய தினம் சீனாவில் விடுமுறை இருந்ததால், லண்டனிலுள்ள சீன தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல மணி நேரமாக என் குடும்பத்தாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. சாப்பிடக்கூட முடியவில்லை. விமான முனையத்தின் அந்தப்பகுதியை விட்டு வெளியேற கூட என்னை அனுமதிக்கவில்லை. நான் லண்டனில் இருந்து 12 மணி நேரம் பயணம் செய்திருந்தேன். ஓய்வெடுக்க இடம் கூட கொடுக்கவில்லை”என்றும் விளக்கினார்.
மேலும், “எனக்கு சட்டப்பூர்வ உரிமை இருப்பதாகவும், ஒரு வழக்கறிஞருடன் பேச வேண்டும் எனவும் சொன்னேன். பின்னர் ஒரு நண்பரை லேண்ட்லைன் மூலம் தொடர்பு கொண்டேன். அவரிடமிருந்து தகவல் பெற்று, ஷாங்காய் மற்றும் பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகங்களுக்கு அழைத்தேன். ஒரு மணி நேரத்திற்குள் இந்திய அதிகாரிகள் விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் எனக்கு உணவு ஏற்பாடு செய்தனர். எனது சிக்கல்களைக் குறித்து தெரிந்துகொண்டனர். இந்திய அதிகாரிகள் நான் அங்கிருந்து வெளியேற உதவினார்கள்”என்றும் குறிப்பிட்டார்.
ஷாங்காயில் சில மணி நேரம் மட்டுமே இருந்துவிட்டு, அங்கிருந்து ஜப்பானுக்கு செல்ல வேண்டியிருந்தது என அவர் கூறினார்.
“நான் 58 நாடுகளுக்கு இந்திய பாஸ்போர்ட் மூலம் பயணம் செய்திருக்கிறேன். அது செல்லுபடியாகும் ஆவணம். ஆனால் சீனாவில் அது அப்படி இல்லை” என்றார் அவர்.
பட மூலாதாரம், fmprc.gov.cn
சீனா என்ன சொன்னது?
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங்கின் செய்தியாளர் சந்திப்பில், ஒரு செய்தியாளர் இந்த விஷயத்தில் சீனாவின் நிலைப்பாட்டை அறிய விரும்பினார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த செய்தித் தொடர்பாளர், “ஜாங்னான் என்பது சீனப் பிரதேசம். இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ‘அருணாசலப் பிரதேசத்தை’ சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை” என்றார்.
“இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, சீன அதிகாரிகள் முழு செயல்முறையிலும் சட்டம் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி விசாரணை நடத்தியுள்ளனர். எவ்வித அத்துமீறலும் இல்லாமல், சட்டம் நியாயமாகப் பின்பற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட நபரின் சட்ட உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டன. அவர் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காவலில் வைக்கவோ அல்லது துன்புறுத்தவோ இல்லை “என்று மாவோ நிங் குறிப்பிட்டார்.
பிரேமாவின் கூற்றுக்களை நிராகரித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், அவருக்கு ஓய்வு எடுக்க வசதிகளும், உணவும் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

அருணாச்சல பிரதேசம் பற்றி சீனா என்ன சொல்கிறது?
அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா உரிமை கோருகிறது. எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியாவும் சீனாவும் பல சந்திப்புகளை நடத்தியுள்ளன, ஆனால் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது.
இரு நாடுகளும் 3,500 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. எல்லைப் பிரச்னை 1962 ஆம் ஆண்டு மோதலுக்கு வழிவகுத்தது. அதற்கு பின்னரும் எல்லையின் சில பகுதிகளைப் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்ததால், இடையிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான இந்தியாவின் இறையாண்மை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக வரைபடங்களிலும் அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பகுதியாகத்தான் காணப்படுகிறது.
ஆனால் சீனா, திபெத்துடன் சேர்த்து அருணாச்சலப் பிரதேசத்தையும் தன்னுடைய பகுதி எனக் கூறி, அதை தெற்கு திபெத் என்று குறிப்பிடுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் வடக்குப் பகுதியான தவாங்கை, ஆரம்பத்தில் சீனா உரிமை கொண்டாடியது. தவாங் பகுதியில்தான் இந்தியாவின் மிகப்பெரிய புத்த வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது.
பட மூலாதாரம், ARUN SANKAR/AFP via Getty Images
சர்ச்சையின் பின்னணி என்ன?
இந்தியா – சீனா சர்வதேச எல்லையாக மக்மஹோன் கோடு கருதப்படுகிறது. ஆனால் சீனா இந்த எல்லையை அங்கீகரிக்கவில்லை.
திபெத்தின் பெரும்பகுதியை இந்தியா கட்டுப்படுத்துவதாக சீனா கூறுகிறது.
சீனாவின் கூற்றுகளை இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் 90,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா உரிமை கோருகிறது, அதே நேரத்தில் மேற்கில் உள்ள அக்சாய் சின்னின் பெரும்பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக இந்தியாவின் வாதம் உள்ளது.
1950களின் பிற்பகுதியில் திபெத்தை இணைத்துக் கொண்ட பிறகு, அக்சாய் சின் பகுதியின் சுமார் 38,000 சதுர கிலோமீட்டர் பகுதியை சீனா தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.
பின்னர், சீனா அங்கே தேசிய நெடுஞ்சாலை 219-ஐ கட்டி, அதை அதன் கிழக்கு மாகாணமான சின்ஜியாங்குடன் இணைத்தது.
இந்தியா இந்த நடவடிக்கையை சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்று கருதுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு