1
பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளியால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை புதன்கிழமை (நவம்பர் 5) நிலவரப்படி 90-ஐ கடந்து உயர்ந்துள்ளது.
செபு (Cebu) மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்கு மட்டும் பலி எண்ணிக்கை 76-ஆக உயர்ந்துள்ளது. மற்ற மாகாணங்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர், மேலும் 26 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.
இந்த வெள்ள நீர் அதிக நகரமயமாக்கப்பட்ட பகுதிகள் வழியாகப் பாய்ந்து, கார்கள், லொரிகள் மற்றும் மிகப் பெரிய சரக்குப் பெட்டகங்களை கூட அடித்துச் சென்றது.
புயலுக்கு முந்தைய 24 மணி நேரத்தில், செபு சிட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் 183 மில்லிமீட்டர் மழை கொட்டியது. இது அதன் மாதாந்திர சராசரியான 131 மிமீ-ஐ விட அதிகம் ஆகும்.
புயல் நிவாரணப் பணிகளுக்கு உதவச் சென்ற நான்கு இராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்று, வடக்கு மின்டானாவ் தீவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் உட்பட ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
புதன்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, கல்மேகி புயல் மேற்கு நோக்கி, பலவானின் சுற்றுலாத் தலங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தால் புயல்கள் அதிக சக்தி வாய்ந்தவையாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.