சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். அதன்படி மாணவிகள்: 96.70 %, மாணவர்கள்: 93.16 % தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்ளுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணியளவில் வெளியானது.
மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, ‘ஆன்லைன்’ வழியில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை, https://results.digilocker.gov.in மற்றும் www.tnreuslts.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வெழுதியோர் மொத்த எண்ணிக்கை : 7,92,494
மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316
மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178
தேர்ச்சி விவரங்கள்:
தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%)
மாணவியர்- 4,05,472 (96.70 %)
மாணவர்கள் -3,47,670 (93.16 %)
தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049
பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதம்
அரசுப் பள்ளிகள் – 91.94%
அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.71%
தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 98.88%
பள்ளிகள் வகைபாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்
இருபாலர் பள்ளிகள் – 95.30%
பெண்கள் பள்ளிகள் – 96.50%
ஆண்கள் பள்ளிகள் – 90.14%
அரசு பள்ளி மாணாக்கர்களில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்
அரியலூர் – 98.32%
ஈரோடு – 96.88%
திருப்பூர் – 95.64%
கன்னியாகுமரி – 95.06%
கடலூர் – 94.99%
ஜூன் 25-ல் துணை தேர்வு: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.06.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.