சென்னை: “உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. பிஹார் மக்களை துன்புறுத்தியதாக பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்ற முயற்சிக்கிறார்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும் போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி. ஆர். பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பிஹார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது பிரதமர் தமிழகத்தில், பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பது தான் இருக்கிறது.
எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதே போல, பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது, ஸ்டாலின் வகிக்கும் முதல்வர் பதவிக்கே அவமானம். தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதல்வர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒடிசா – பிஹார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதல்வர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நேற்று பிஹாரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ திமுக ஆளும் தமிழ்நாட்டில் திமுகவினர் பிஹாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை துன்புறுத்துகின்றனர்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.
