பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், பிரியங்கா ஜா
- பதவி, பிபிசி செய்தியாளர்
திப்திமான் பூர்பே ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் பொறியியல் மேலாளராக உள்ளார்.
புனே பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த பங்கஜ் பிஷ்ட், நாசிக்கில் உள்ள ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி மேலாளராக உள்ளார்.
இருவரும் ஒரே மாதிரியான வேலைகளை செய்கின்றனர். இருவரும் பொறியாளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மின்சாரப் பொறியியல் பிரிவில் பணியில் உள்ள இருவரும் வெவ்வேறு படிப்புகள் மூலம் வேலையில் உள்ளனர். ஒருவர் பி.டெக் படித்தார், மற்றவர் பி.இ படித்தார்.
ஒருவர் அறிவியல் துறையில் படித்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அல்லது அதற்கு பின்னர் பொறியியல் படித்திருந்தாலும் இல்லாவிட்டாலும், அதனுடன் தொடர்புடைய இரண்டு படிப்புகளின் பெயர்களை நிச்சயம் கேட்டிருப்போம். அதில் ஒன்று பி.இ மற்றொன்று பி.டெக்.
ஆனால் இந்த இரண்டு வெவ்வேறு படிப்புகளுக்குப் பின்னால் என்ன தர்க்கம் இருக்கிறது? இந்த பட்டங்கள் உண்மையில் ஒன்றா, அல்லது படிப்பு முறை, படிப்பு அணுகுமுறை அல்லது நோக்கத்தில் வித்தியாசம் உள்ளதா?
கரியர் கனெக்ட் தொடரின் இந்த அத்தியாயத்தில், இரண்டு படிப்புகளையும் படித்தவர்கள் மற்றும் கற்பித்தவர்கள் மூலம் இந்த குழப்பத்தை தீர்க்க முயற்சிப்போம்.
இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
பி.இ என்பது இளநிலை பொறியியல் (Bachelor of Engineering) என்பதைக் குறிக்கிறது, பி.டெக் என்பது இளநிலை தொழில்நுட்பம் (Bachelor of Technology) என்பதைக் குறிக்கிறது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் பி.டெக்கில் இருந்து பி.இ. வேறுபட்டது எதிலென்றால், இது நடைமுறை அறிவை விட கோட்பாட்டு அறிவில் அதிக கவனம் செலுத்துகிறது.
ஐஐடி கான்பூரின் பேராசிரியர் ஷலப் புள்ளியியல் மற்றும் தரவு அறிவியலுக்காக நன்கு அறியப்பட்டவர். பி.இ மற்றும் பி.டெக்கை எவ்வாறு கருத வேண்டும் என்பதை விளக்குகிறார்.
“பி.இ என்பது முன்பு பயன்படுத்தப்பட்ட சொல். இது தற்போதும் சில நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், படிப்பிலோ அல்லது சேர்க்கைக்கான தகுதி அளவுகோல்களிலும் எந்த வித்தியாசமும் இல்லை.”
திப்திமான் பூர்பே தற்போது ஊபர் நிறுவனத்தில் பொறியியல் மேலாளராக உள்ளார். அவர் குவாலியரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கௌரவ விரிவுரையாளராகவும் உள்ளார்.
“முன்பு, பி.இ ஒரு அறிவு சார்ந்த படிப்பாக கருதப்பட்டது, உதாரணமாக விஷயங்கள் ஏன் செயல்படுகின்றன என்கிற கோட்பாடு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தியது, அதேசமயம் பி.டெக் மிகவும் நடைமுறை மற்றும் திறன் சார்ந்ததாக கருதப்பட்டது, விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கற்பிக்கிறது,” என்றார்.
பங்கஜ் பிஷ்ட் ஜியோ நிறுவனத்தில் உதவி மேலாளராக உள்ளார். அவர் 2014 இல் தனது பி.இ பட்டப்படிப்பை முடித்தார்.
இந்தியாவில், பி.இ மற்றும் பி,டெக் இரண்டும் சமமாக கருதப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.
“பி.இ பாடத்திட்டம் சற்று பாரம்பரியமானது, பெரும்பாலும் பழைய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படுகிறது. இது அடிப்படைகளில் அதிக கவனம் செலுத்துகிறது. பி,டெக் பாடத்திட்டம் ஆய்வகங்கள், திட்டங்கள் மற்றும் பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறது. பி,டெக் படிப்பு ஐஐடி-கள், என்ஐடி-கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.”
வெவ்வேறு பெயர்கள் ஏன்?
இந்தியாவில் பொறியியல் கல்வியை வழங்கும் அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) மூலம் கண்காணிக்கப்படுகின்றன.
அதன்படி, 2023-24-ல் பட்டயம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களில் பொறியியல் படிப்புகளை வழங்கும் சுமார் 8,264 நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தன. 2024-25-இல் இந்த பட்டியலில் 211 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டன.
2023-24 கல்வியாண்டில் 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். 2025 இந்திய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (IIRF)-ன்படி, ஐஐடி பம்பாய் இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமாக உள்ளது.
தனியார் பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் முதன்மையான பொறியியல் நிறுவனங்களில், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (BITS பிலானி) பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, இது பி.இ பட்டங்களையும் வழங்குகிறது.
இது தவிர, கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், சென்னையின் அண்ணா பல்கலைக்கழகம், ஹைதராபாத்தின் ஓஸ்மானியா பல்கலைக்கழகம், பெங்களூருவின் ஆர்வி கல்லூரி, புனே பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் ஆகியவையும் பொறியியல் மாணவர்களுக்கு பி.இ பட்டம் வழங்கும் கல்வி நிறுவனங்களில் அடங்கும்.
பி,இ மற்றும் பி,டெக் படிப்புகளுக்கு இடையிலான வேறுபாடு பொதுவாக பட்டத்தை வழங்கும் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பல பழைய பல்கலைக்கழகங்கள் பி.இ என்றே அழைக்கின்றன, அதே நேரத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் பி.டெக் என்று அழைக்கின்றன.
ஆனால் பெயரின் அடிப்படையில் அல்லாமல் கல்வியின் தரத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இல்லை. இரண்டும் நான்கு வருட படிப்புகள்தான், இரண்டிலும் சேர்க்கைக்கான தகுதி ஒன்றுதான். .
அதாவது 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்திருக்க வேண்டும்.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ Main மற்றும் ஜேஇஇ Advanced-இல் தேர்ச்சி பெற வேண்டும்.
இரண்டு படிப்புகளின் முக்கிய பாடங்களும் ஒன்றுதான் என்று தீப்திமான் பூர்பே கூறுகிறார். அதாவது, பொறியியலின் ஒரு பிரிவை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்தும் பாடங்கள்.
உதாரணமாக:
- முதல் வருடத்தில் உள்ள பாடங்கள் கணிதம், பொறியியல் இயற்பியல், பொறியியல் வேதியியல், பொறியியல் இயக்கவியல் மற்றும் அடிப்படை மின்னணுவியல். இவை அனைத்து பிரிவு மாணவர்களும் படிக்க வேண்டிய பாடங்கள்.
- பின்னர் இரண்டாம் முதல் நான்காம் வருடம் வரை, சில முக்கிய பிரிவுகளின் பாடங்கள் உள்ளன:
- கணினி அறிவியல்: தரவு கட்டமைப்புகள், வழிமுறைகள், இயக்க முறைமைகள், தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் அதாவது டிபிஎம்எஸ்.
- இயந்திரவியல்: வெப்ப இயக்கவியல், திரவ இயக்கவியல், இயந்திரங்களின் இயக்கவியல்.
- மின் பொறியியல் : மின்சுற்று கோட்பாடு, கட்டுப்பாட்டு அமைப்புகள், மின்சக்தி அமைப்புகள்.
எந்த படிப்பு யாருக்கு பொருந்தும்?
பட மூலாதாரம், Getty Images
திப்திமான் பூர்பேயின் கூற்றுப்படி, பி.இ மற்றும் பி.டெக் இடையேயான வேறுபாடு நிஜ உலகில் மறைந்துவிட்டது. இப்போது, இரண்டு படிப்புகளுக்கும் பிறகு கிடைக்கும் வாய்ப்புகளிலும் கூட எவ்வித வித்தியாசமும் இல்லை.
ஒரு படிப்பு மற்றொன்றை விட பத்தொன்பது அல்லது இருபது மடங்கு சிறந்தது என்று இல்லை. உண்மையில், முதுகலை அல்லது எம்.பி.ஏவுக்கு விண்ணப்பிக்கும் போது கூட, இரண்டு படிப்புகளின் பெயர்களும் ஒன்றாகவே பட்டியலிடப்படுகின்றன. எனவே, இரண்டு படிப்புகளும் ஒரே மதிப்பைக் கொண்டுள்ளன.
ஆனால் மாணவர் சேர்க்கைக்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை அவர் பட்டியலிடுகிறார்.
எந்த மாணவரும் அது வழங்கும் பட்டத்தின் அடிப்படையில் ஒரு படிப்பைத் தேர்வு செய்யக்கூடாது. மாறாக, அதை வழங்கும் பல்கலைக்கழகம் மற்றும் பிரிவின் அடிப்படையில்தான் படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் தேர்வு செய்யும் படிப்பில் நிறுவனத்தின் உள்கட்டமைப்பு என்னவாக இருக்கிறது, என்ன மாதிரியான ஆசிரியர்கள் உள்ளனர், வேலை வாய்ப்புகள் என்னவாக இருக்கின்றன, ஆராய்ச்சி அனுபவம் என்னவாக உள்ளது மற்றும் என்ன மாதிரியான சூழல் உள்ளது என்பதை எப்போதும் மனதில் வைத்திருங்கள்.
பி.இ மற்றும் பி.டெக் இரண்டிலும் ஒரே பிரிவைப் பெறும் வாய்ப்பு யாருக்காவது இருந்தால், அவற்றை ஒரே மாதிரியான படிப்புகளாகக் கருதி, மற்ற எல்லா காரணிகளையும் மனதில் வைத்து முடிவெடுக்கவும்.
எதிர்கால வளர்ச்சியில் வித்தியாசம் உள்ளதா?
பட மூலாதாரம், Getty Images
மென்பொறியாளர், சிவில் பொறியாளர், தரவு ஆய்வாளர் அல்லது மற்ற பிரிவைச் சேர்ந்த பொறியாளர் என்று எதில் காலியிடம் இருந்தாலும், எப்போதும் பி.இ/பி.டெக் பட்டதாரிகள் தேவை என்றே பட்டியலிடப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை. சம்பளம் முற்றிலும் நேர்காணல் எப்படி நடந்தது, அவர்களின் சிக்கலைத் தீர்க்கும் திறன்கள் அல்லது வேலை எந்த நிலைக்கானது என்பதைப் பொறுத்தது. இந்த காரணிகளில் பட்டம் பூஜ்ஜிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பங்கஜ் பிஷ்ட், “இன்றைய போக்கை பி.இ அல்லது பி.டெக் என்பது தீர்மானிக்கவில்லை, ஆனால் உங்கள் பிரிவு தீர்மானிக்கிறது. ஐடி துறை, அதாவது தகவல் தொழில்நுட்பம், சந்தையில் வளர்ந்து வருகிறது என்றால், சேர்க்கையின் போது, இந்த பிரிவு கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும். இயந்திரவியல் வளர்ந்து வருகிறது என்றால், அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். சந்தைக்கு ஏற்ப பிரிவு முக்கியமானது”, என்கிறார்.
எந்த நிறுவனத்திலும் பொதுவாக எந்த பதவிக்கும் பி.இ அல்லது பி.டெக் பட்டதாரியை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அளவுகோல் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
“இதுவரை நான் நான்கு நிறுவனங்கள் மாறியுள்ளேன். நீங்கள் பி.இ அல்லது பி.டெக் ஆக இருந்தாலும், உங்களிடம் தேவையான திறன்கள் இருந்தால், நிறுவனம் உங்களை பணியமர்த்தும். பி.டெக் மாணவர் விண்ணப்பிக்கக் கூடிய ஒரு பதவிக்கு பி.இ மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது என்ற நிலை ஒருபோதும் இருக்காது.”
இதற்கிடையில், எதிர்கால வளர்ச்சியின் அடிப்படையில் வேறு சில காரணிகளை திப்திமான் சுட்டிக்காட்டுகிறார்.
செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில், தொழில்துறை பட்டங்களை விட திறன்களில் அதிக கவனம் செலுத்துவது முக்கியமானது.
இதுவரை உள்ள போக்குகள், நிறுவனங்கள் இப்போது இயந்திர கற்றல், தரவு அறிவியல், நரம்பியல் வலையமைப்புகள் போன்ற சிறப்பு திறன்களுக்கு திரும்புகின்றன என்பதைக் குறிக்கின்றன.
எனவே, ஒருவரிடம் பி.இ பட்டம் இருந்தாலும் சரி பி.டெக் பட்டம் இருந்தாலும் சரி, தொழில் வளர்ச்சி முற்றிலும் அவரின் போர்ட்ஃபோலியோ, குறியீட்டு திறன்கள் மற்றும் கணித புரிதலைப் பொறுத்தே அமைகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு