0
இங்கிலாந்தின் புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதாவை “எதிர்காலச் சந்ததியைப் பாதுகாக்க” பாராளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று 1,200க்கும் மேற்பட்ட பொது சுகாதாரத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, சட்டத்தின் வரைவு குறித்து ஆய்வு செய்ய மேலவையின் (House of Lords) குழு நிலைக்கான முதல் நாளுக்காகப் பிரபுக்கள் தயாராகி வரும் நிலையில், இந்த நிபுணர்கள் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த மசோதா சட்டமானால், ஜனவரி 1, 2009, அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலையை வாங்குவது சட்டவிரோதமாக்கப்படும். இது தலைமுறையை மாற்றும் நடவடிக்கை என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சட்ட முன்மொழிவு, இ-சிகரெட்டுகளின் பேக்கேஜிங், சந்தைப்படுத்தல் மற்றும் சுவைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களையும் உள்ளடக்கியுள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுச் சுகாதார இயக்குநர்கள் உட்பட 1,200க்கும் மேற்பட்ட சுகாதார நிபுணர்களால் கையெழுத்திடப்பட்ட இந்தக் கடிதம், மசோதாவை அவசரமாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
புகைப்பிடிப்பதை எதிர்ப்பதற்கான நடவடிக்கைக் குழுவின் (Action on Smoking and Health) தலைமை நிர்வாகி, ஹேசில் சீஸ்மேன் கூறுகையில், “ஒவ்வொரு வாரமும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் ஆயுளைக் குறைக்கும் ஒரு கொடிய போதைச் சுழற்சியில் சிக்கித் தவிக்கின்றனர். புகையிலை தனித்துவமான தீங்கு விளைவிக்கும் ஒரு பொருளாகும், இது நீண்டகாலப் பயனர்களில் பாதியினருக்கும் அதிகமானோரைக் கொல்கிறது” என்றார்.
பொதுச் சுகாதார இயக்குநர்கள் சங்கத்தின் (Association of Directors of Public Health) போதைக்கான செய்தித் தொடர்பாளர் பீட்டர் ரோடரிக் கூறுகையில், “இந்தப் புகையிலை மசோதா, இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், எதிர்காலச் சந்ததியினரைக் கொடிய தயாரிப்புக்கு அடிமையாவதிலிருந்து பாதுகாப்பதற்கும், புகைபிடிக்காத 88% மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழும் சுதந்திரத்தை அளிப்பதற்கும் ஒரு வாய்ப்பாகும்” என்றார்.
தற்போது, இங்கிலாந்தில் உள்ள வயது வந்தோரில் 11.9% பேர் புகைபிடிக்கின்றனர். இது சுமார் 6 மில்லியன் மக்களுக்குச் சமம் என்று தெரிவிக்கப்படுகின்றது.