பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
இந்தப் பயணத்திற்கு முன்னதாக, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார்.
பிப்ரவரி 2022 இல் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் இருந்து, ரஷ்யா மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் மீது மேற்கு நாடுகளின் அழுத்தம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேற்கு நாடுகளின் அழுத்தம் இப்போது தாக்கத்தை ஏற்படுத்துவது போல் தெரிகிறது.
இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி (tariff) விதித்த பிறகு, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது எளிதாக இருக்காது என்று கூறப்பட்டது.
இரு நாடுகளின் வர்த்தக உறவுகளில் எரிசக்திப் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் நிலையிலும் புதினின் இந்திய வருகைக்கு முன்பு ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்ந்து குறைந்து வருவதாக, டெல்லியை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
“இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல்களை ஏற்கெனவே குறைத்துவிட்டன. அதிகாரப்பூர்வ வர்த்தகத் தரவுகள், அக்டோபர் 2025 இல் ரஷ்யாவிடமிருந்து மொத்த இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 27.7 சதவிகிதம் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. அக்டோபர் 2024 இல் 6.7 பில்லியன் டாலர்களாக இருந்தது, இந்த ஆண்டு 4.8 பில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. இந்த இறக்குமதிகளில் பெரும்பாலானவை கச்சா எண்ணெய் என்பதால், இது ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வீழ்ச்சியைக் காட்டுகிறது,” என அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
“ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) போன்ற நிறுவனங்களை இலக்காகக் கொண்ட அமெரிக்கத் தடைகளுக்கு இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் இணங்குகின்றன. இந்த நிறுவனங்கள் ரஷ்யாவின் 57 சதவிகித எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. இந்த நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் மிக வேகமாக குறைந்துள்ளது. இப்போது, தடைப் பட்டியலில் இல்லாத ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து மட்டுமே இறக்குமதி தொடர்கிறது, இது அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதைக் காட்டுகிறது,” என ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
முன்னதாக, ரஷ்யா விஷயத்தில் மேற்கு நாடுகளின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியாது என்று கூறப்பட்டது.
அமெரிக்காவின் அழுத்தம் இருந்தபோதிலும், இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறவுகளில் பெரிய மாற்றம் இருக்காது என்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் துறைப் பேராசிரியர் ராஜன் குமார் கருதுகிறார்.
“இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளில் வர்த்தகம் ஒரு முக்கிய அம்சம் அல்ல. யுக்ரேன் போருக்குப் பிறகு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கத் தொடங்கியிருந்தாலும், இரு நாடுகளின் உறவுகள் பரஸ்பர வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. எண்ணெய் கொள்முதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 67 பில்லியன் டாலர்களை எட்டியிருக்கலாம், ஆனால் அதற்கு முன்பு அது 10 பில்லியன் டாலர்களுக்கும் குறைவாகவே இருந்தது,” என பேராசிரியர் ராஜன் குமார் கூறுகிறார்.
“பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நட்புறவில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியா இப்போது மற்ற நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கத் தொடங்கியிருந்தாலும், தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கும் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை வேறு எந்த நாடும் வழங்காது,” என்கிறார் ராஜன்குமார்.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்த இந்தியா
பட மூலாதாரம், Getty Images
டிசம்பரில் நடக்கவிருக்கும் எண்ணெய் விநியோக புள்ளிவிவரங்களைப் பார்த்தால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் கணிசமாகக் குறைத்துள்ளன என்பது தெரியும்.
ப்ளூம்பெர்க் தகவலின்படி, இந்தியாவின் ஐந்து பெரிய சுத்திகரிப்பு நிறுவனங்கள் டிசம்பர் மாதத்திற்கான எண்ணெய் கொள்முதலுக்கு எந்த ஆர்டரையும் கொடுக்கவில்லை.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய ஏற்றுமதிக்கு 50 சதவிகித வரியை விதித்தார்.
அதன் பிறகும் ரஷ்யாவிடமிருந்து இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் உடனடியாகக் குறையவில்லை.
ஆனால், நவம்பரில் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கத் தடை விதிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் பெரும்பாலான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டன.
எண்ணெய் கொள்முதல் குறித்த நிகழ்நேரத் தரவை வழங்கும் கெப்லர் நிறுவனத்தின்படி, நவம்பர் 1 முதல் 17 வரை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தினமும் 6,72,000 பேரல் எண்ணெயைக் கொள்முதல் செய்தது.
இது அக்டோபர் மாதத்தில் வாங்கப்பட்ட அளவான ஒரு நாளைக்கு 18 லட்சம் பேரல்களை விட மிகக் குறைவு.
இருப்பினும், இரண்டு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான தடையைத் தொடர்ந்து, ரஷ்யாவின் மற்ற இடங்களுக்கான எண்ணெய் ஏற்றுமதி 28 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடந்து வரும் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இதில் முக்கியப் பங்காற்றியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் அமெரிக்கா ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிடமிருந்தும் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உறுதியளித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்க எல்பிஜி சப்ளையர்களிடம் இருந்து எல்பிஜி வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இப்போது இந்தியாவின் எல்பிஜி தேவைகளில் 10 சதவிகிதம் அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
எரிசக்தி பாதுகாப்பு மீது என்ன தாக்கம் இருக்கும்?
பட மூலாதாரம், Getty Images
அக்டோபர் மாதம், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த ஆண்டு இந்தியாவுக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெயில் 36 சதவிகிதத்தை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது.
அமெரிக்காவால் இரண்டு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அஜய் ஸ்ரீவஸ்தவா பிபிசிக்கு அளித்த பேட்டியில், டிரம்ப் இரண்டு நிறுவனங்களைத் தடை செய்திருந்தாலும், மறைமுகமாக இது அனைத்து ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கும் தடை விதிப்பது போன்றது என்றார்.
“அமெரிக்கா இந்தியாவின் ஏற்றுமதிக்கு கூடுதலாக 25 சதவிகித வரி விதித்துள்ளது. இந்தியா ரஷ்ய எண்ணெயைப் பயன்படுத்தி ‘போரைத் தூண்டுகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த அபராதம் ரோஸ்நெஃப்ட் அல்லது லுகோயில் போன்ற தடை செய்யப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் மட்டுமல்ல, சட்டப்பூர்வமான முறையில் வாங்கப்பட்டாலும் கூட, எந்தவொரு ரஷ்ய கச்சா எண்ணெய் மீதும் இது பொருந்தும்.”
“இந்தியாவுக்கு இரண்டு தெளிவான தேர்வுகள் உள்ளன – மலிவான ரஷ்ய எண்ணெயை வாங்கி அமெரிக்காவின் அதிருப்தியை எதிர்கொள்வது, அல்லது மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிடம் இருந்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்குவதைத் தேர்ந்தெடுத்து உள்நாட்டில் விலைகள் உயரும் அபாயத்தை எதிர்கொள்வது,” என்று அஜய் ஸ்ரீவஸ்தவா சொல்கிறார்.
அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ரஷ்யாவுடனான நட்பைப் பாதிக்குமா?
பட மூலாதாரம், Getty Images
ஆயுதங்கள் மற்றும் நவீன ராணுவத் தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் தேவைகளில் 60 முதல் 70 சதவிகிதம் இன்னும் ரஷ்யாவைச் சார்ந்து தான் உள்ளது, என பேராசிரியர் ராஜன் குமார் கூறினார்.
“உலகில் இந்த நேரத்தில் உண்மையான மற்றும் வர்த்தகப் போர்கள் இரண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிலைப்பாடு மிகவும் நிச்சயமற்றதாக இருக்கிறது. எனவே, அமெரிக்காவுடனான தனது உறவைச் சீராக்க இந்தியா முயற்சி செய்கிறது என்றாலும், அது டிரம்பை முழுமையாக நம்ப முடியாது.”
கடந்த ஏழு தசாப்தங்களாக இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறவுகள் வலுவாகவும் நிலையானதாகவும் இருந்து வருகின்றன. இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும், கடந்த 50 ஆண்டுகளாக உலக அரசியலில் இரு நாடுகளின் உறவுகள் நிலையானதாக இருப்பதாகக் கூறியிருந்தார்.
பனிப்போர் காலத்தில் இந்தியா தன்னை ‘அணி சேரா நாடு என்று கருதியது, ஆனால் 1971 உள்நாட்டுப் போரில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தபோது, சோவியத் யூனியனுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்தது.

கடந்த மூன்று தசாப்தங்களில் விண்வெளி, அணுசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ரஷ்யாவுடன் இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது. ஆனால், சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவும் மேம்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா ரஷ்யாவைச் சார்ந்திருப்பது குறைந்துள்ளது.
மார்ச் 31 உடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான வர்த்தகம் சாதனை அளவாக 68.7 பில்லியன் டாலரை எட்டியது. இதில் இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்துள்ளது என்பது தெளிவாகிறது. 68.7 பில்லியன் டாலரில் இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 4.9 பில்லியன் டாலர் மட்டுமே.
இந்தியாவில் ரஷ்யாவின் முதலீடு எண்ணெய் மற்றும் எரிவாயுவைத் தவிர மருந்துகள், வங்கி, ரயில்வே மற்றும் எஃகுத் துறைகளில் உள்ளது. எண்ணெய், எரிவாயு மற்றும் மருந்துத் துறையில் இந்தியாவும் ரஷ்யாவில் முதலீடு செய்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு சர்வதேசச் சந்தையை விட மலிவாக எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் விலை வித்தியாசம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ப்ளூம்பெர்க் செய்தியின்படி, அக்டோபர் 15 வரை, ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு ஒரு பேரல் எண்ணெய் நிலையான விலையைவிட 2 முதல் 2.5 டாலர் வரை குறைவாகக் கிடைத்தது. ஆனால் 2023 இல் இந்த வேறுபாடு ஒரு பேரலுக்கு 23 டாலருக்கும் அதிகமாக இருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு