பட மூலாதாரம், Getty Images
வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விமானம் புது டெல்லியில் தரையிறங்கியபோது, பிரதமர் நரேந்திர மோதி நேரடியாக விமான நிலையத்திற்குச் சென்று புதினை வரவேற்றார். சிவப்புக் கம்பள வரவேற்புக்குப் பிறகு ரஷ்ய அதிபருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதையடுத்து, அடுத்த நாள் காலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு முறைப்படியான பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதாவது, இந்தியா – ரஷ்யா நட்பு தனித்துவமானது என்ற செய்தியை இந்தியா தெளிவாக உணர்த்தியது.
இது வரலாற்றின் பக்கங்களில் இருந்து வெளிப்பட்டு, காலத்தால் நிரூபிக்கப்பட்ட நட்பு.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 5 ஆண்டுகளுக்கு முன்பு 8 பில்லியன் டாலராக இருந்த வர்த்தகம் இப்போது 68 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகள் இருந்தபோதிலும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தொடர்கிறது. இந்திய ராணுவம் இன்றும் ரஷ்யாவிடமிருந்து பெற்ற ஆயுதங்களை நம்பியே உள்ளது.
இதற்கு முன்பு சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்தபோது இருந்த உலகம் இப்போது கணிசமாக மாறியுள்ளது. அந்தப் பயணத்திற்குப் பிறகுதான் ரஷ்யா யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தியது, அதன் காரணமாக உலக அரங்கில் அது மிகவும் தனிமைப்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராகி உள்ளார். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் பதற்றமான சூழ்நிலையில் உள்ளன, அதே சமயம் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்துள்ளன.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவைத் தனிமைப்படுத்த முயலும் இத்தகைய சூழ்நிலையில், இந்தியா ஏன் அதற்கு மிக பக்கத்தில் நிற்கிறது? இந்தப் பயணம் ஏன் இவ்வளவு முக்கியமானதாகக் கருதப்பட்டது? இந்தப் பயணத்தின் மிகப்பெரிய சாதனை என்ன? அமெரிக்கா இந்தப் பயணத்தை எப்படிப் பார்க்கும்?
பிபிசி ஹிந்தி வாராந்திர நிகழ்ச்சியான ‘தி லென்ஸ்’ஸில், கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் இயக்குநர் முகேஷ் சர்மா, இந்தச் சந்தேகங்கள் குறித்து விவாதித்தார்.
இந்த விவாதத்தில் ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் அனுராதா மித்ரா செனாய் மற்றும் மூத்த பத்திரிகையாளர் வினய் சுக்லா ஆகிய இரு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். வினய் சுக்லா மாஸ்கோவிலிருந்து இந்த விவாதத்தில் பங்கேற்றார்.
இந்தப் பயணம் ஏன் இவ்வளவு முக்கியமானது?
இந்தப் பயணம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த அனுராதா மித்ரா செனாய், “மேற்கத்திய நாடுகள் அவர்களைத் தனிமைப்படுத்த முயன்றாலும், அந்தத் தந்திரம் வெற்றிபெறவில்லை என்பதை ரஷ்யா காட்ட விரும்புகிறது என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால், மேற்கு நாடுகளுக்கு வெளியே உள்ள இந்தியா, சீனா மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள தெற்கு உலக நாடுகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வருவது வரவேற்கப்படுகிறது.
இதற்குக் காரணம், ரஷ்யா நீண்ட காலமாக இந்த நாடுகளுக்கு ஆதரவளித்து வருகிறது, இப்போது இந்த நாடுகள் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கின்றன. இது ரஷ்யாவுக்கு மிக முக்கியமானது,” என தெரிவித்தார்.
“இந்தியாவுக்கும் இது முக்கியமானது. உண்மையில், இந்தியா 10 ஆண்டுகளாக அமெரிக்காவுடன் உத்தி கூட்டாண்மையை (Strategic partnership) வளர்க்க முயன்றது, அதில் நிறைய முதலீடு செய்தது. ஆனால் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து இந்தியாவின் உத்தி அந்தஸ்து குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு காரணம், அவர் இருதரப்பு உறவுகளைச் சம அளவில் வைத்திருக்க விரும்பவில்லை. ஐரோப்பா ஒரு பழைய கூட்டாளியாக இருந்தாலும், அவர் அதனுடன் கூடச் சமமான உறவைப் பேணுவதில்லை, மாறாக அவர்களுக்கு ஆணையிடுகிறார்.” என்றார் அனுராதா மித்ரா செனாய்.
“இந்தியா அவரது இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த நான்கு நாள் மோதலை நிறுத்தியதாக அவர் திரும்பத் திரும்பக் கூறிவந்தார். இதை இந்தியா ஏற்கவில்லை. ‘இந்தக் கூற்று தவறானது’ என்று இந்தியா கூறியது.
இரண்டாவது விஷயம், அவர்(டிரம்ப்) பிரிக்ஸ் அமைப்புக்கு எதிரானவர். ‘அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குங்கள்’ என்ற அவரது முழக்கத்திற்கு பிரிக்ஸ் தடையாக இருப்பதாக அவர் நினைக்கிறார். அதில் இந்தியா, சீனா, துருக்கி, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் தடையாக உள்ளன,” என அனுராதா மித்ரா மேலும் தெரிவித்தார்.
“நிச்சயமாக, அவர் ரஷ்யா மீது இந்தியா மூலம் அழுத்தம் கொடுக்கவும் விரும்புகிறார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார், ஆனால் ரஷ்யாவின் எண்ணெய் இந்தியாவின் தொழில்துறையின் முதுகெலும்பாக உள்ளது. எரிசக்தி இல்லாமல் நீங்கள் எப்படி முன்னேறுவீர்கள்? கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா ரஷ்யாவின் சலுகை விலையிலான எண்ணெயை வாங்கி வருவதையும், அதனுடன் நமது ஜிடிபி வளர்ச்சியைக் காண முடிவதையும் நீங்கள் பார்க்கலாம். அதனால்தான் இந்தியா அவரது அழுத்தத்திற்கு ஆளாக விரும்பவில்லை.”
மிகப்பெரிய சாதனை என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
இந்தப் பயணத்தின் மிகப்பெரிய சாதனை என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த மாஸ்கோவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் வினய் சுக்லா, “ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை. உலகின் இரண்டு பெரிய நாடுகளான இந்தியாவிலும் சீனாவிலும் அவருக்கு வரவேற்பு கிடைக்கிறது. இந்தப் பயணம் பற்றி மட்டுமல்ல. கடந்த ஆண்டு பிரதமர் (மோதி) மாஸ்கோ வந்திருந்தார். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பல கூட்டு ஆணையங்கள் போன்ற நிறுவன மட்டத்திலான உறவுகள் உள்ளன, அவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன, தொடர்ந்து செயல்படும்,” என்று தெரிவித்தார்.
“பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் அல்லது அதுபோன்ற ஏதேனும் ஒரு அறிவிப்பு இருக்கும் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த வேலைகள் அனைத்தும் ரகசியமாகவே நடக்கும். சுகோய் எஸ்யூ-30 எம்.கே.ஐ. ஒப்பந்தம் ஒரு ஞாயிற்றுக்கிழமை, தொழிற்சாலை இருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் செய்யப்பட்டது. அது அந்தக் காலத்தின் மிகப்பெரிய ஒப்பந்தம் என்பதை நான் நினைவில் கொள்கிறேன்.”
ஒரு கட்டத்தில், இந்தியாவை நம்ப முடியவில்லை, அது நாளை அமெரிக்காவின் பக்கம் செல்லலாம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறியதாக வினய் சுக்லா கூறுகிறார்.
“இந்த பயணத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் மூலம், நாங்கள் எங்கள் சுயாட்சியில் உறுதியாக இருக்கிறோம் என்று ரஷ்யாவுக்கு உறுதியளிக்கப்பட்டது. இவ்வாறாக, இது ஒரு குறியீட்டுப் பயணமும் ஆகும். அதிபர் புதின் 6 மணி நேரம் அல்ல, 30 மணி நேரம் இங்கு இருந்துள்ளார். இந்தியா அவருக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறதோ, அதே மரியாதையை அவரும் இந்தியாவுக்குக் கொடுக்கிறார் என்பதைக் காட்டுவதற்காகவே இந்தப் பயணம்.” என்கிறார் வினய் சுக்லா.
பட மூலாதாரம், AFP via Getty Images
அமெரிக்கா என்ன நினைக்கிறது?
அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் பயணத்தை அமெரிக்கா எப்படிப் பார்க்கும்?
“மூன்று நான்கு ஆண்டுகளாக அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் பல முயற்சிகளை எடுத்துள்ளது. அவர்கள் இரண்டு விஷயங்களில் அழுத்தம் கொடுக்கிறார்கள். முதலாவதாக, ‘சீனாவுடனான உங்கள் உறவுகள் சரியாக இல்லை, அதில் நாங்கள் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்’ என்று கூறுகிறார்கள். அதாவது, சீனாவிடம் இருந்து எங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் உள்ளது, எனவே நீங்கள் எங்கள் பினாமியாக மாறுங்கள் என்பதுதான் இதன் பொருள்,” என அனுராதா கூறினார்.
“இந்தியா இதை விரும்பவில்லை. ‘சீனாவுடனான சில மோதல்கள் எங்களுக்கு உள்ளன, ஆனால் அவற்றை நாங்கள் இருவரும் இணைந்து தீர்த்துக்கொள்வோம்’ என்று இந்தியா கூறுகிறது. உண்மையில், யாரும் அதன் (அமெரிக்கா) பினாமியாக மாறி மற்றொரு யுக்ரேனாக மாற விரும்பவில்லை.”
“இரண்டாவது அழுத்தம் ரஷ்யா தொடர்பானது, ‘நீங்கள் அவர்களைக் கைவிட்டு எங்கள் அணியில் சேருங்கள்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவுக்கு உத்தி சுயாட்சி என்றால் என்னவென்றே புரியவில்லை. அது மேலாதிக்க மற்றும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாகும். இது இன்றும் உலகின் மிகப் பெரிய சக்தியாக உள்ளது. அதனால், அதன் பக்கம் வருபவர்களுக்குப் பயன் கிடைக்கும் என்று அது நினைக்கிறது.” என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்தியா தன் பக்கம் வராதபோது, அமெரிக்கா மீண்டும் பாகிஸ்தானை தன் பக்கம் கொண்டு வர நினைத்தது. அது ஏற்கனவே அமெரிக்காவுடன் இருந்தது. ஆனால் இப்போது பாகிஸ்தான் ராணுவம் அமெரிக்காவிற்கு மீண்டும் சாதகமாக உள்ளது. அதன் மூலம், அது இரான், மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் தனது நலன்களை நிறைவேற்ற முடியும். அதனால்தான் அது இப்போது பாகிஸ்தானுடன் நேரடியாகப் பேசுகிறது”
ஆசியாவில் ரஷ்யா கவனம் செலுத்துகிறதா?
பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் போர், ஐரோப்பாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. போர் நிறுத்தம் செய்ய அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது, ஆனால் அதில் வெற்றி காணப்படவில்லை.
இதற்கிடையில், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளன. ரஷ்யா இந்தியாவுடனான உறவுகளை நன்றாகப் பேணி வருகிறது… எதிர்காலம் ஆசியாவில்தான் என்று கூறப்படுவதால், ரஷ்யா ஆசியா அல்லது தெற்கு உலக நாடுகள் மீது தனது கவனத்தைச் செலுத்துகிறதா?
வினய் சுக்லா இதை ஒப்புக்கொள்கிறார், “புதினின் கொள்கை கிழக்கு நோக்கி அல்லது ஆசியாவுக்கு ஆதரவாக இருக்கிறது. சில பேர் அதற்கு எதிரானவர்கள்.” என்கிறார்
“ரஷ்யா இனியும் ஒரு சர்வாதிகார நாடு அல்ல, இப்போது நீங்கள் இணையம் மற்றும் வானொலியில் பல வகையான கருத்துகள் மற்றும் கட்டுரைகளைப் பார்க்கலாம். அவற்றில், ஆசியாவிடம் இருந்து நமக்கு என்ன கிடைக்கும், அவர்களிடம் தொழில்நுட்பம் இல்லை, கலாசார ரீதியாக நாம் ஐரோப்பாவின் ஒரு பகுதி என்றெல்லாம் கூறப்படுகிறது.” என்கிறார் அவர்
“புதின் உலகத் தலைவர்களுடன் தனிப்பட்ட உறவுகளைப் பேணுகிறார். அவர் வளைகுடா நாடுகளுக்கும் சென்று வருகிறார், அங்கிருந்து தலைவர்களும் மாஸ்கோவிற்கு வருகிறார்கள். உதாரணமாக செளதி அரேபியாவில் அணுமின் நிலையம் அமைக்க உதவுவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது” என்று சுக்லா கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
சமநிலையை நிலைக்கச் செய்யும் சவால்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதால் அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்றும், வரிகள் தாங்கக்கூடிய வரம்பில் இருக்க வேண்டும் என்றும் இந்தியா விரும்புகிறது. அமெரிக்காவும் உறவுகளைப் பேணி வருகிறது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் உறவுகளைப் பேணுவது இந்தியாவுக்குச் சவாலாக உள்ளதா?
“ரஷ்யாவிடமிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் வரக்கூடாது என்று அமெரிக்கா முயற்சிக்கிறது. இரண்டாவதாக, பால், சோளம் மற்றும் சோயா போன்ற நமது விவசாயத் துறையை அமெரிக்காவுக்குத் திறந்துவிட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட விவசாயப் பொருட்கள் இந்தியாவுக்குள் பெரிய அளவில் வரும்போது இந்திய விவசாயிகளின் நிலை என்னவாகும்? இதனால்தான் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நின்றுபோயுள்ளன,” என்று அனுராதா மித்ரா கூறுகிறார்,
“ரஷ்யாவுடனான நமது கூட்டாண்மை சிறப்பானதாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும், அதில் ஸ்திரத்தன்மையும் உள்ளது. இருந்தபோதிலும், இதில் பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் சில உறவுகளைப் பேண வேண்டும் என்று விரும்புகிறது”
‘சீனா கைப்பற்றியது’
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வர்த்தகம் ரஷ்யாவிற்கு சாதகமாகச் சாய்ந்துள்ளது. வர்த்தகத்தைச் சமநிலைப்படுத்த ரஷ்யாவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா முயற்சிக்கிறது. அதற்கான வாய்ப்பு உள்ளதா?
“நிச்சயமாக உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நாம் நிறைய வாய்ப்புகளை இழந்தோம், அவற்றைச் சீனர்கள் கைப்பற்றினர். ரஷ்யாவில் நிறையத் தரிசு நிலங்கள் உள்ளன, ஆனால் அங்கு மக்கள் இல்லை, சந்தையும் இல்லை,” என்று வினய் சுக்லா கூறுகிறார்.
“ஒரு காலத்தில், நமக்குத் தேவையான பயிர்களை விளைவிக்கச் சில நிலங்களை எடுக்க இந்தியா விரும்பியது. சீனாவும் தொலைதூர கிழக்கில் அதையே செய்தது.”
“ரஷ்யாவில் பால் பண்ணைத் தொழிலுக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. நீங்கள் பல மணிநேரம் நடந்தால் கூட யாரும் இருக்க மாட்டார்கள், ஆனால் அங்குப் பசுக்கள் எளிதாக மேயலாம், பால், நெய், வெண்ணெய் தயாரிக்கலாம், இந்தியாவுக்கு அனுப்பலாம்,” என்று சுக்லா கூறுகிறார்.
“இது தவிர, ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை மிகவும் மேம்பட்டது. விண்வெளித் தொழில்நுட்பம் அவர்களிடம் அமெரிக்காவுக்கு முன்பே இருந்தது. அவர்கள் இந்தியாவுக்கு உயர் தொழில்நுட்பத்தை வழங்க முன்வந்தனர்.”
சீனா – இந்தியா உறவுகள் மற்றும் ரஷ்யாவின் பங்கு
பட மூலாதாரம், Reuters
“ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் பல மட்டங்களில் மிக நெருங்கிய உறவு உள்ளது. இருதரப்பு உறவுகள் மட்டுமல்ல, ராணுவ சக்தி மற்றும் தொழில்நுட்பத்திலும் கூட இந்த நெருக்கம் உள்ளது. தவிர, சைபீரியாவிலிருந்து சீனாவிற்கு நேரடி எரிவாயுக் குழாய் உள்ளது, இப்போது அவர்கள் இரண்டாவது குழாயை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், ரஷ்யாவின் சந்தை சீனப் பொருட்களால் நிரம்பி வழிகிறது.” என்கிறார் அனுராதா மித்ரா
“சீனாவும் ரஷ்யாவும் இவ்வளவு நெருக்கமாகிவிட்டால் இந்தியா என்ன ஆகும் என்று இந்திய ஆய்வாளர்கள் சில சமயங்களில் நினைக்கிறார்கள். ரஷ்யா சீனா இடையே ஒரு சமநிலைப்படுத்தும் பணியை இந்தியா செய்கிறது என்று ரஷ்யாவும் நம்புகிறது, ஏனெனில் அவர்களுக்கும் சீனாவைப் பற்றிச் சில சந்தேகங்கள் உள்ளன. எவ்வளவு பேச்சுவார்த்தை நடந்தாலும், சீனா ஒரு அழுத்தமான நாடு என்றும் அது தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கும் என்றும் ரஷ்யா நினைக்கிறது.”
“இப்போது இந்தியாவுக்கும் சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் வந்துவிட்டன. இப்போது இது ஒரு சமநிலையற்ற உறவு. இப்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சமமானது, அதை அமெரிக்காவால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே, இது ஒரு புவிசார் அரசியல் சூழலாகும். இதில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சமன்பாட்டால் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்பதை நாம் பார்க்க வேண்டும், ஏனெனில் ரஷ்யா ஒரு மிகவும் சுதந்திரமான நாடு, அதனால் அது சீனாவுக்கு அடிபணியும் நாடாக இருக்க முடியாது. ரஷ்யா உடனான நமது உறவுகள் வளரக்கூடும் என்று நான் நினைக்கிறேன். இதற்குக் கடந்த காலத்திலும் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் பலன் கிடைத்துள்ளது, எதிர்காலத்திலும் கிடைக்கலாம்,” என்கிறார் அனுராதா மித்ரா.
‘உறவுகளுக்கு வேகமளிக்கும் முயற்சி’
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இன்றைய சூழலில் இந்தப் பயணத்தைப் பார்த்தால்… ஏற்கனவே இருந்த உறவைத் தொடர்வதாக, அல்லது இருந்த உறவுக்கு ஒரு புதிய வேகத்தை அளிக்கும் முயற்சியாக இந்தப் பயணத்தைக் கருதலாமா?
“இந்தியா-ரஷ்யா உறவை ‘மீண்டும் அமைக்க’ வேண்டிய அவசியம் இல்லை. பிரதமராக இருந்தாலும், பாதுகாப்பு அமைச்சராக இருந்தாலும், புதின் வந்த பிறகான கடந்த 25 ஆண்டுகளில் இந்த உறவு வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு செயல்முறை. இதில் ஸ்திரத்தன்மை தெரிகிறது, அது மேலும் வளரும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அனுராதா மித்ரா கூறுகிறார்.
“அடுத்த ஓரிரு ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும், அணுசக்தி வரும், தொழிலாளர்கள் செல்வார்கள். ரஷ்யாவுடன் மட்டுமல்ல, யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் வரவுள்ளது. இதேபோல், விசா மற்றும் தொழிலாளர்களை அனுப்புதல் குறித்த பேச்சுவார்த்தையும் முன்னோக்கி செல்லும்,” என்கிறார் அனுராதா மித்ரா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு