பட மூலாதாரம், Getty Images
அதிபர் விளாதிமிர் புதினின் இந்திய வருகைக்கு முன்பாக, ரஷ்யா சில பொறுப்புகளை இந்தியாவிடம் முன்வைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் ஏற்பாடு செய்திருந்த இணையவழி பத்திரிகையாளர் சந்திப்பில் அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கலந்து கொண்டார்.
அதே செய்தியாளர் சந்திப்பில், சீனாவுடனான ரஷ்யாவின் உறவு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்றும், இந்தியா தொடர்பாகவும் ரஷ்யா அதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் பெஸ்கோவ் கூறினார்.
அதோடு, ரஷ்யாவின் இந்த அணுகுமுறை, இந்தியா எந்த அளவுக்கு அந்த உறவைத் தொடரத் தயாராக உள்ளது என்பதைச் சார்ந்துள்ளது என்றும் பெஸ்கோவ் தெரிவித்தார்.
“உத்தி சார்ந்து, சீனா எங்களது சிறந்த கூட்டாளி. இந்தியாவை போலவே சீனாவுடனும் எங்களுக்கு மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பு உள்ளது. சீனாவுடனான ஒத்துழைப்பை எங்கள் எல்லைகளுக்கு அப்பால் விரிவுபடுத்த நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று டிமிட்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டார்.
“ஆனால் இந்தியாவுடனும் எங்களுக்கு அதே அணுகுமுறை உள்ளது. இந்தியா எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருக்கிறதோ, அதே அளவுக்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். இந்தியா ஒத்துழைப்பை விரிவாக்கும் அளவுக்கு, முழுமையாக ஆதரிக்கத் தயாராக உள்ளோம்,” என்றார்.
ரஷ்யாவுடனான உறவுகள் தொடர்பாக இந்தியா அழுத்தத்தில் இருப்பதாகவும், இந்த அழுத்தத்திற்கு மத்தியில், இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் பெஸ்கோவ் கூறினார்.
“இந்தியா அழுத்தத்தில் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால், உறவுகளை மேம்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எங்கள் உறவுகள் எந்த மூன்றாம் நாட்டின் தாக்கத்தில் இருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். எங்கள் உறவுகளைப் பாதுகாக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் எங்கள் வர்த்தகத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று பெஸ்கோவ் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவின் உத்தி என்ன?
செவ்வாய்க்கிழமை இந்தியா வருவதற்கு முன்பு, சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளைப் புதிய கட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்புவதாக அதிபர் புதின் கூறினார்.
இந்தியாவுக்கு இந்த வாய்ப்பை வழங்குவதன் மூலம், சீனாவை அதிகமாகச் சார்ந்திருப்பதை சமநிலைப்படுத்த ரஷ்யா முயல்வதாக உலகளாவிய அரசியலில் நிபுணரான வெலினா சக்கரோவா கருதுகிறார்.
“இந்தியாவுடனான உறவை ரஷ்யா அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாக அடையாளம் காட்டியுள்ளது,” என்று வெலினா சக்கரோவா தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
“இதுவொரு முக்கியமான அறிகுறி. இந்தியாவுக்கு, சமமான உத்தி சார்ந்த அந்தஸ்தை வெளிப்படையாக வழங்குவதன் மூலம், சீனாவை சார்ந்திருப்பதை ரஷ்யா சமநிலைப்படுத்த முயல்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது தடைகளுக்கு மத்தியில் தனக்கென ஓர் உத்தி சார்ந்த இடத்தைக் கண்டுபிடிக்க ரஷ்யா எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது,” என்று வெலினாவின் பதிவு கூறுகிறது.
“புதிய பனிப்போரின் எழுச்சியில் இந்தியாவின் மையப் பங்கை ரஷ்யா புரிந்துகொள்கிறது. அமெரிக்க – இந்திய உறவுகள் ஆழமாக இருந்தபோதிலும், இந்தியாவை உத்தி சார்ந்து தங்களுக்கு நெருக்கமாக வைத்திருக்க சீனாவும் ரஷ்யாவும் மேற்கொண்ட முயற்சியையும் இது பிரதிபலிக்கிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியையாவது இந்தியா ஏற்றுக் கொண்டால், யுக்ரேன் போர், பிரிக்ஸ் பிளஸ், ஆற்றல் அமைப்பு, இந்தோ-பசிபிக் சமநிலை போன்ற ஆசியாவின் உலக அரசியல் அமைப்பு மீண்டும் மாறும்.”
அதாவது, இந்தியா தன்னுடனான உறவுகளை சீனாவைப் போலவே அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல விரும்பினால், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்று ரஷ்யா வெளிப்படையாகக் கூறுகிறது.
அமெரிக்காவின் வரிகள் காரணமாக இந்தியா தன்னுடனான வர்த்தக உறவுகளைக் குறைக்கக் கூடாது என்றும் ரஷ்யா விரும்புகிறது. ஆனால் இது இந்தியாவுக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா என்ன விரும்புகிறது?
ஜிண்டால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபேர்ஸின் தலைவரும், ‘ஃப்ரெண்ட்ஸ்: இந்தியாவின் நெருங்கிய உத்தி சார்ந்த கூட்டாளிகள்’ என்ற புத்தகத்தின் ஆசிரியருமான ஸ்ரீராம் சௌலியா, முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை ரஷ்யா இந்தியாவிடம் அளித்தாலும், ரஷ்யாவின் இந்தக் கனவு நிறைவேறாது என்று கூறுகிறார்.
“ரஷ்யா, சீனா இடையிலான கூட்டணி அமெரிக்காவுக்கு எதிரானது. இந்தியா இந்தக் கூட்டணியில் சேர விரும்பவில்லை. சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவை ஒரு போட்டியாளராகக் கருதுகின்றன, ஆனால் இந்தியா அதை விரும்பவில்லை. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு அமெரிக்கா தேவை. இந்தியா ரஷ்யாவுக்காக அமெரிக்காவையோ அல்லது அமெரிக்காவுக்காக ரஷ்யாவையோ கைவிட முடியாது,” என்று ஸ்ரீராம் சௌலியா பிபிசி ஹிந்தியிடம் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ரஷ்யா மற்றும் சீனாவின் உறவு எல்லைகளைக் கடந்து, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், இந்தியாவுக்கு ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய மூன்றும் தேவை. ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவுடனான அதன் உறவு பன்முகத்தன்மை வாய்ந்தது.”
“கடந்த 2024-ஆம் ஆண்டில், அமெரிக்கா, இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 129 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவுக்கு சாதகமாக 45 பில்லியன் டாலர் வர்த்தக உபரி இருந்தது. அப்படியிருக்க, அமெரிக்காவுக்கு எதிரான முகாமில் இந்தியா ஏன் சேர வேண்டும்? இந்தியாவுக்கு இப்போது அமெரிக்க தொழில்நுட்பம் தேவை.” என்றும் விவரித்தார்.
இந்தியா, ரஷ்யா இடையிலான இருதரப்பு வர்த்தகம் தற்போது 63 பில்லியன் டாலர் மதிப்புடையது என்றும், 2030-ஆம் ஆண்டுக்குள் இது 100 பில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பெஸ்கோவ் கூறினார்.
யுக்ரேன் போருக்கு முன்பு 2021-ஆம் ஆண்டில் வெறும் 13 பில்லியன் டாலர்களாக இருந்த ரஷ்யா, இந்தியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2024-25ஆம் ஆண்டில் 68 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி இந்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கிறது.
பட மூலாதாரம், Getty Images
ஒருதலைபட்சமான வர்த்தகம்
இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகம் ஒருதலைப்பட்சமானது.
கடந்த 2024-25ஆம் ஆண்டில், ரஷ்யாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 4.88 பில்லியன் டாலர்களாக இருந்தது, அதே நேரத்தில் இறக்குமதி 63.84 பில்லியன் டாலர்களாக இருந்தது.
ப்ளூம்பெர்க் அறிக்கையில், “அக்டோபர் 15 நிலவரப்படி, இந்தியா ரஷ்ய எண்ணெயை பீப்பாய்க்கு இரண்டு முதல் இரண்டரை டாலர்கள் வரை உலகளவில் நிர்ணயிக்கப்பட்ட கச்சா எண்ணெய் விலையைவிட மலிவான விலையில் பெற்று வந்தது. ஆனால் 2023 வாக்கில், இந்த வித்தியாசம் பீப்பாய்க்கு 23 டாலருக்கும் அதிகமாக இருந்தது.” என்று கூறப்பட்டுள்ளது.
க்ரெடிட் ரேட்டிங் நிறுவனமான ஐசிஆர்ஏ-வின் கூற்றுப்படி, 2025 மார்ச் மாதத்தில் முடிவடைந்த கடந்த நிதியாண்டில், ரஷ்ய கச்சா எண்ணெய் விலைகளில் தள்ளுபடி குறைந்ததால், இந்தியா எண்ணெய் கொள்முதலில் வெறும் 3.8 பில்லியன் டாலர் மட்டுமே சேமித்தது.
மறுபுறம், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா அமெரிக்காவுக்கு 87 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை விற்றது.
புதினின் வருகைக்கு முன்னதாக, ரஷ்யா இந்தியாவிடம் இருந்து என்ன விரும்புகிறது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
- முதலில், ரஷ்யாவுடன் எல்லைகளைக் கடந்த உறவை விரும்புகிறதா அல்லது வரையறுக்கப்பட்டதாக வைத்திருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
- இரண்டாவதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் மூன்றாம் நாட்டின் செல்வாக்கு இருக்கக்கூடாது.
- மூன்றாவதாக, இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகம் 2030ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர்களை எட்ட வேண்டும்.
இந்த மூன்று விஷயங்களும் இந்தியாவுக்கு எளிதானவை அல்ல.
பட மூலாதாரம், Getty Images
புதினின் வருகைக்கு சற்று முன்பு ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறைந்துவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (ஜிடிஆர்ஐ) என்ற சிந்தனைக் குழுவின் தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா, “ரஷ்யாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது.” என்கிறார்.
“இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்துவிட்டன. அதிகாரபூர்வ வர்த்தகத் தரவுகளின்படி, அக்டோபர் 2025-இல் ரஷ்யாவில் இருந்து மொத்த இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 27.7 சதவிகிதம் குறைந்துள்ளது.
இது அக்டோபர் 2024-இல் 6.7 பில்லியன் டாலரில் இருந்து இந்த ஆண்டு 4.8 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்த இறக்குமதிகளில் கச்சா எண்ணெய் பெரும்பகுதியாக இருப்பதால், இது ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான சரிவைக் குறிக்கிறது.” என்று அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
இந்தியா அமெரிக்க எதிர்ப்பு முகாமுக்குள் தான் முழுமையாக இழுக்கப்படுவதை விரும்பவில்லை. சீனா–ரஷ்யா கூட்டணி இந்தக் கோணத்தில் பார்க்கப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
புதின் வருகை வழங்கும் அறிகுறி என்ன?
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் தலைமையில் உலகம் இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டபோது, இந்தியா எந்த முகாமிலும் சேரவில்லை.
இந்தியா அணிசேராக் கொள்கையைத் தேர்ந்தெடுத்து அதைத் தொடர்ந்து பின்பற்றுகிறது. உத்தி சார்ந்த சுயாட்சியில் இந்தியா சமரசம் செய்யாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பலமுறை கூறியுள்ளார்.
இதுபோன்ற சூழலில், புதின் இந்தியாவுக்கு வருகை தருவது அமெரிக்க ஆதிக்கத்திற்குச் சவால் விடும் என்று உத்தி சார் விவகார நிபுணர் பிரம்மா செல்லனி கருதுகிறார்.
“உலகம் போட்டி நிறைந்த குழுக்களாகப் பிளவுபட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், டிசம்பர் 4–5 அன்று புதின் இந்தியாவுக்கு வருகை தருவது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உலக அரசியலில் அதுவொரு சக்தி வாய்ந்த அறிகுறி. இந்த வருகை புதிய கட்டண வழிகள் உள்பட முக்கிய ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கலாம். SWIFT முறையைத் தவிர்ப்பதற்கும் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கும் இது மிகவும் முக்கியமானது,” என்று செல்லனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“பொருளாதாரத் தடைகள் மற்றும் SWIFT அல்லாத நிதிக் கருவிகளை ஆயுதமயமாக்குதல் உள்ளிட்ட மேற்கத்திய கொள்கைகள் ரஷ்யாவை சீனாவின் பிடியில் தள்ளுவதை இந்தியா கவனித்து வருகிறது. இருந்தாலும், யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து புதின் முதன்முறையாக இந்தியாவுக்கு வருகை தருவது, ரஷ்யாவுக்கு சீனாவை தாண்டிய வழிகள் உள்ளன என்பதையும், சீனாவின் ‘இளைய கூட்டாளியாக’ மாற அனுமதிக்காது என்பதையும் நிரூபிக்கிறது.”

மேலும், “இதற்கிடையில், இந்தியா தனது வலுவான செய்தியை அனுப்புகிறது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, இந்தியாவை மதிக்காமல் நடத்தும் நிலையில், டெல்லி ரஷ்யாவை தனிமைப்படுத்தவில்லை, மேற்குலக நாடுகளின் தடைச் சட்டங்களைப் பின்பற்றி தனது மூலோபாய சுயாட்சியைப் பாதிக்கவில்லை. புதினை வரவேற்பதன் மூலம், ‘எங்களுடன் இல்லையெனில் எங்களுக்கு எதிராக இரு’ என்ற மேற்குலகக் கொள்கையை இந்தியா ஏற்கவில்லை. தான் சுயாதீன பாதையைத் தேர்ந்தெடுப்பதையே தெளிவாகக் காட்டுகிறது” என்றும் அவரது பதிவு கூறுகிறது.
யுக்ரேன் மீதான தாக்குதலுக்கு முன்பு, இரு நாடுகளும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டு, தங்கள் கூட்டணிக்கு ‘நோ லிமிட்ஸ்’ (எல்லையில்லை) என்று பெயரிட்டன.
வாஷிங்டன் சிந்தனைக் குழுவான ஸ்டிம்சன் மையத்தினுடைய சீன திட்டத்தின் இயக்குநரான யுன் சன், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையிடம் பேசுகையில், “ரஷ்யாவுடனான ஷி ஜின்பிங்கின் உறவுகளை வலுப்படுத்துவதை யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புடன் நாம் இணைக்க முடியாது. இரு நாடுகளின் உறவு எந்த நேரத்திலும் சூடுபிடித்திருக்கலாம்.” என்று கூறினார்.
“சீனாவும் ரஷ்யாவும் உத்தி சார் பங்காளிகள். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் அணிசேராமை, மோதலின்மை மற்றும் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் தீங்கு விளைவிக்காத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை,” என்று சீன வெளியுறவு அமைச்சகம் ஓர் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு