• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது நாடகம்: திமுக மீது சீமான் குற்றச்சாட்டு | opposing to the new education policy is a drama Seeman accuses DMK

Byadmin

Feb 23, 2025


மதுரை: புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது திமுகவின் நாடகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சென்னையிலிருந்து பழநி செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்த சீமான், அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியை எதிர்ப்பதில் தமிழக அரசு உறுதியாக இல்லை. தமிழகத்தில் 53 ஆயிரம் அரசுப் பள்ளிகளைத் தவிர, மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி மொழி இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். அதற்கு, இங்கு ஆட்சியில் இருந்த திமுக, அதிமுகதான் காரணம்.

புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்ப்பது என்பது நாடகம். இல்லம் தேடிக் கல்வித் திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கையில் இருந்தது. தமிழக அரசின் கல்வி திட்டக் குழுவில் இருந்த ஜவஹர் நேசன் என்பவர், புதிய கல்விக் கொள்கையை வேறு பெயரில் திமுக அரசு பின்பற்றுகிறது என்று குற்றம்சாட்டி, அந்தக் குழுவிலிருந்து வெளியேறினார்.

புதிய கல்விக் கொள்கையை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள், தற்போது தேர்தல் வரும் நேரத்தில் ‘தமிழ் வாழ்க’ என்பதும், தமிழ் மொழி மீது பற்று இருப்பதுபோல காட்டிக்கொள்ள இந்தியை எதிர்ப்பதும் ஏமாற்று வேலை. இவர்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக இல்லை.

தமிழக முதல்வர் வரியை நிறுத்த ஒரு நொடி போதும் என்கிறார். அந்த நொடி, எந்த நொடி என்று கேட்கிறோம். மத்திய அரசு நிதி தரவில்லை என எத்தனைமுறை புலம்பிக் கொண்டிருப்பீர்கள். என் மாநிலத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தரமுடியாது என்று உங்களால் சொல்ல முடியாமா? தர முடியாது என்று சொன்னால் மத்திய அரசு என்ன செய்யும், ஆட்சியைக் கலைப்பார்களா? மக்களுக்காக மீண்டும் தேர்தலை சந்திக்க முடியாதா?.

மத்திய அரசுக்கு தனியாக எந்த நிதியும் கிடையாது. மாநில அரசுகள் தரும் நிதிதான், மத்திய அரசின் நிதி. இதைச் செய்தால்தான் இதைத் தருவேன் என்பது லஞ்சம்தானே. இந்தப் போக்கு மாற வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.



By admin