பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை (அக். 24) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகலாம் என தெரிவிக்கப்படுள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அரக்கோணத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும், கோயம்புத்தூரின் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகள், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பட மூலாதாரம், Getty Images
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அடுத்த நான்கு தினங்களுக்கான மீனவர்களுக்கான எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள்
அக். 24: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
அக்.25 முதல் அக். 27 வரை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
அக். 24: மத்திய கிழக்கு வங்கக்கடலின் வடகிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்திலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய-தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
அக். 25, 26: மத்திய மேற்கு வங்கக்கடலின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்திலும் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
அக். 27: மத்தியமேற்கு வங்கக்கடலின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்திலும் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
பட மூலாதாரம், Getty Images
அரபிக்கடல் பகுதிகள்:
அக். 24: மத்திய கிழக்கு அரபிக்கடலின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும் இடையிடையே 65 கிமீ வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள், ஏனைய தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு, மத்திய அரபிக்கடலின் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
அக். 25, 26: கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு – மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
அக். 27: கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த பகுதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 24ம் தேதி மாலைக்குள் கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திரும்பப் பெறப்பட்ட ரெட் அலர்ட்
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக அக்டோபர் 16-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், தமிழ்நாடு முழுவதுமே கடந்த அக். 21, 22 ஆகிய தினங்களில் பரவலாக மழை பெய்தது.
சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருந்தது.
ரெட் அலர்ட் (அதி கனமழை) என்பது 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதை குறிக்கும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் ,பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை முதல் மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சேலம், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டது.
ஆனால் அக்டோபர் 22-ஆம் தேதி காலை இந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. புதன்கிழமை வெளியான தகவலின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு