• Sun. Dec 21st, 2025

24×7 Live News

Apdin News

புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு | யோசனைகள் அனுப்பிவைக்க நீதி அமைச்சர் வேண்டுகோள்

Byadmin

Dec 21, 2025


நீதியமைச்சின் இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் மேலும் கூறியிருப்பதாவது:

இப்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படக்கூடிய வகையில் புதியதொரு சட்டம் கொண்டுவரப்படும் என நாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் வாக்குறுதியளித்தோம்.

அதற்கமைய புதிய சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் 17 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தோம்.

அக்குழுவினர் சுமார் 11 மாதங்களாக அவ்வரைவைத் தயாரித்து என்னிடம் கையளித்தனர். அவ்வரைவு இப்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது நாடளாவிய ரீதியில் மிகுந்த கரிசனைக்குரிய சட்டம் என்பதனால், அதனை நேரடியாக அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்காமல், முதலில் பொதுமக்களிடம் அபிப்பிராயம் கோரவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம்.

எனவே இப்புதிய சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

By admin