மதுரை: புதிய பாம்பன் பாலம் திறப்பை ஒட்டி பிரதமர் மோடிக்கு மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை இன்று (ஏப்ரல் 6) மதியம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதையொட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ரயில்வே பாலத்துக்கு பிறகு, தற்போது பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலம் பெருமைக்குரியது.
இலங்கை தமிழர்களுக்கு என பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்திருந்தேன். அவை அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறார். குறிப்பாக தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வைத்துள்ளார், அவர்களின் படகுகளை மீட்டுக் கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து இலங்கை தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கும், இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். அத்தனைக்கும் பாராட்டுக்குரியவர் பிரதமர் மோடி.
கச்சத்தீவு காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தாரைவாக்கப்பட்டது. அப்போது துணை நின்றவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இப்போது அவர்களே கச்சத் தீவை மீட்க வேண்டும் எனப் பேசி வருகின்றனர். பிரதமர், கச்சத்தீவை மீட்டு தந்து, இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்திட ஆவண செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு மதுரை ஆதீனம் வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.