பட மூலாதாரம், Arivozhi Iyakkam, Pudukkottai
இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர். அவர்கள் ஓட்டிய சைக்கிள், அவர்களது வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியது.
சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட ஒரு சாதாரண நிகழ்வு இதனைச் சாதித்தது எப்படி?
பெண்கள் சைக்கிள் ஓட்டுவது ஒரு பெரிய விஷயமா? அப்படி அவர்கள் சைக்கிள் ஓட்டினால், அவர்களது வாழ்வில் ஏதாவது மாறிவிடுமா? 21ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இந்த இரு கேள்விகளையும் யாராவது கேட்டால், பதில் இல்லையென்பதாகவே இருக்கும்.
ஆனால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை, இந்தக் கேள்விகளுக்கு மறக்க முடியாத பதிலைச் சொன்னது.
பட மூலாதாரம், Arivozhi Iyakkam, Pudukkottai’
சேடப்பட்டியிலிருக்கும் ஒரு நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருக்கிறார் ஜெயச்சித்ரா. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தில் 1990களின் துவக்கத்தில் பத்தாம் வகுப்பையும் அதற்குப் பிறகு ஆசிரியர் பயிற்சியையும் முடித்திருந்த ஜெயச்சித்ரா, தன் வாழ்க்கை இப்படி மாறுமென்று எதிர்பார்த்திருக்கவில்லை.
“அப்போது நான் அடிமைப் பெண்ணைப் போல இருந்தேன். வீட்டின் ஜன்னலைக்கூட திறக்க முடியாத சூழலில்தான் என் தந்தை என்னை வைத்திருந்தார். பத்தாம் வகுப்பில் 327 மதிப்பெண்களை எடுத்திருந்தேன். கணக்கில் மட்டும் 99 மதிப்பெண்களை எடுத்திருந்தேன். ஆனால், என் சொந்தக்காரர்கள் என்னை தையல் வகுப்பிற்கோ தட்டச்சு பழகவோ அனுப்பும்படி சொன்னார்கள். ஆனால், என் அம்மாதான் தன் தாலியை விற்று 500 ரூபாய் கட்டி என்னை டீச்சர் பயிற்சிக்கு அனுப்பினார். படித்த பிறகு வேலை கிடைத்துவிட்டது. ஆனாலும், வீடு – வேலை இதைத் தவிர எங்கும் போக முடியாது” என அந்த நாட்களை நினைவுகூர்கிறார் ஜெயச்சித்ரா.
பட மூலாதாரம், Arivozhi Iyakkam, Pudukkottai
அறிவொளி இயக்கம்
அந்த காலகட்டத்தில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் வயது வந்தோருக்கான எழுத்தறிவு இயக்கமான அறிவொளி இயக்கம் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது.
மணமேல்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிகளில் இருந்த இஸ்லாமிய பெண்களிடம் அறிவொளி இயக்கத்தை எடுத்துச் செல்ல பெண்கள் தேவைப்பட்டார்கள்.
ஜெயச்சித்ரா ஆசிரியர் என்பதால் தன்னார்வலராக இணையும்படி அழைப்பு வந்தது. முதலில் மறுத்த அவரது தந்தை, பிறகு பலரது வற்புறுத்தலால் ஒப்புக்கொண்டார்.
ஆனால், அறிவொளி இயக்கத்திற்காக பல கிராமங்களுக்கு அவர் செல்ல வேண்டியிருந்தது. நடந்து செல்வதென்பது இயலாத காரியம். அப்போதுதான், அறிவொளி இயக்கத்தில் இருந்தவர்கள் அவரை சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொள்ளும்படி சொன்னார்கள்.
வீட்டில் சைக்கிள் கேட்க முடியாது. அறிவொளி இயக்கத்தினர் ஏற்பாடு செய்துதந்த சைக்கிளில் ஓட்டப்பழக ஆரம்பித்தார் ஜெயச்சித்ரா.
“அந்த காலகட்டத்தில் பாவாடை – தாவணிதான் அணிந்திருப்பேன். பெண்கள் சைக்கிளும் கிடையாது. ஆகவே ஆண்கள் சைக்கிளில்தான் காலை உள்ளே விட்டு ஓட்டப் பழகினேன். அதற்குப் பிறகு வாழ்க்கையே மாறிவிட்டது. அந்த 18 – 19 வயதில் ஒரு பட்டாம்பூச்சி பறப்பதைப்போல உணர்ந்தேன். எப்போது ஆறு மணியாகும், சைக்கிளில் சென்று ஒவ்வொரு கிராமமாகச் சென்று பெண்களைப் பார்க்கலாம் என ஆவலோடு காத்திருப்பேன். முதலில் நான் சைக்கிள் ஓட்டுவதைக் கேள்விப்பட்டு திட்டிய என் தந்தை, பிறகு என் ஆர்வத்தைப் பார்த்து சொந்தமாக 800 ரூபாய்க்கு ஒரு சைக்கிளை வாங்கிவந்து கொடுத்தார். அந்த நாளை என் வாழ்வில் மறக்கவே மாட்டேன்.” என்கிறார் ஜெயச்சித்ரா.
55 வயதாகும் ஜெயச்சித்ராவுக்கு இப்போதும் அந்த நாளை நினைத்துப்பார்த்தால் அழுகை வருகிறது.
“இந்தியாவுக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். எனக்கு 1992ல்தான் சுதந்திரம் கிடைத்தது. இதற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் ஷீலா ராணி சுங்கத் வங்கிக் கடனுதவியுடன் ‘லூனா விங்ஸ்’ வண்டியை வாங்கித்தர ஏற்பாடு செய்தார். அதற்குப் பிறகு பல இஸ்லாமியப் பெண்களுக்கு சைக்கிளும் லூனாவும் ஓட்டக் கற்றுக்கொடுத்தேன்” என்கிறார் ஜெயச்சித்ரா.
இப்போது பள்ளித் தலைமையாசிரியராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் இருக்கும் ஜெயச்சித்ரா தனது மகள்களில் ஒருவருக்கு அந்தத் தருணத்தில் ஆட்சித் தலைவராக இருந்த ஷீலா ராணியின் பெயரையே சூட்டியிருக்கிறார். சாதியைக் கடந்து காதல் திருமணம் செய்திருக்கிறார்.
“சைக்கிள் ஓட்டியதால்தான் என்னைப் போன்ற பெண்களுக்கு தன்னம்பிக்கை வந்தது. நாம் யாரையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணம் வந்தது” என்கிறார் ஜெயச்சித்ரா.
இப்போது ஜெயச்சித்ரா சைக்கிள் ஓட்டுவதில்லை. மகள் கார் வைத்திருக்கிறார். ஜெயச்சித்ராவும் டூவீலரில் வேலைக்குச் சென்று வருகிறார்.

கல் குவாரியில் தொழிலாளி
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிக் கதைகளில் ஒன்றுதான் இவருடையது. அறிவொளி இயக்கத்தின் ஒரு பகுதியாக சைக்கிள் ஓட்டப் பழகிய ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் மாறியிருக்கிறது. இதற்கு மற்றும் ஒரு உதாரணம் வசந்தா.
புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் லெம்பலக்குடியைச் சேர்ந்தவர் வசந்தா. பட்டியலினத்தைச் சேர்ந்த இவரது வீட்டில் கடுமையான வறுமை. இதனால், அவரைப் படிக்கவைக்கவில்லை. திருமணமானது.
கணவருக்கும் எழுத, படிக்கத் தெரியாது. வசந்தா ஒரு கல் குவாரியில் தொழிலாளியாக வேலை பார்த்துவந்தார். அப்போதுதான் அறிவொளி இயக்கம் வசந்தாவை அணுகியது.
“குடுமியான் மலையில் ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்பவர்களுக்கு சைக்கிள் வாங்கித் தருவோம் என்றார்கள். அந்தத் தருணத்தில் எல்லோருடைய வீட்டிலும் சைக்கிள் இருக்காது. ஆங்காங்கே இரவல் வாங்கிக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். முதலில் கூச்சமாக இருந்தது. இதற்குப் பிறகு புதுக்கோட்டையில் ஒரு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஓட்டிக்காட்டச் சொல்லும்போது ரொம்பவும் பெருமையாக இருந்தது. நமக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கிறதே என்று சந்தோஷப்பட்டேன். ஆட்சித் தலைவர் கையால் சைக்கிளைப் பெற்றேன். அதுவரை நடந்துபோன இடங்களுக்கு எல்லாம் சைக்கிளில் செல்ல ஆரம்பித்தேன்” என்கிறார் வசந்தா.
அறிவொளி இயக்கத்தின் மூலம் கொஞ்சம் எழுத படிக்க கற்றுக்கொண்டவுடன் வசந்தாவுக்கு சிறிது தைரியம் வந்தது. இவரும் மேலும் மூன்று பெண்களும் சேர்ந்து மாவட்ட நிர்வாகத்தை அணுகி, ஒரு குவாரியை குத்தகைக்கு எடுத்தார்கள். கிட்டத்தட்ட ஒன்பது வருடம் இவர்களால் குவாரியை நடத்த முடிந்தது.
இந்த ஒன்பது வருடத்தில் இவர்களது வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. குழந்தைகள் வளர்ந்தார்கள், படித்தார்கள். இவருடைய பேத்தி மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு பயிற்சிபெற்று வருகிறார். ஒரு குவாரித் தொழிலாளராக இருந்த இவருடைய வாழ்வில், இது மிகப் பெரிய மாற்றம்.
இந்த மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்த சைக்கிள் ஓட்டும் பயிற்சியும் அதனைக் கற்றுக்கொடுத்த அறிவொளி இயக்கமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோல ஆயிரக்கணக்கான பெண்களில் வாழ்வை மாற்றியிருக்கிறது.

பின் தங்கிய பகுதி
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டின் பின்தங்கிய, வெப்பம் மிகுந்த மாவட்டங்களில் ஒன்று. மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களையே செய்துவந்தனர். 1991ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் சதவீதம் 62.7 சதவீதமாக இருந்தபோது, இந்த மாவட்டத்தின் எழுத்தறிவு பெற்றோர் சதவீதம் 57.6 சதவீதமாக இருந்தது. பெண்களின் எழுத்தறிவு 44.2 சதவீதம்தான்.
இந்தியாவில் எல்லோருக்கும் எழுத்தறிவு ஏற்படுத்தும் நோக்கத்தில் 1988ல் தேசிய எழுத்தறிவு இயக்கமும் அதற்காக தேசிய எழுத்தறிவு இயக்க ஆணையமும் துவக்கப்பட்டன.
இந்த இயக்கம் தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டது. மாவட்டத்தில் உள்ள 9 முதல் 45 வயதுள்ள 2.9 லட்சம் பேருக்கு ஒரு வருடத்திற்குள் எழுத்தறிவு தர வேண்டும் என்பது இதன் நோக்கம். 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதற்கான அனுமதியை தேசிய எழுத்தறிவு இயக்கம் அளித்தது. ஜூலை 27ஆம் தேதி மிகப் பெரிய பேரணியுடன் இந்த இயக்கம் துவங்கியது.
அந்தத் தருணத்தில் ஷீலா ராணி சுங்கத் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக இருந்தார். அறிவொளி இயக்கத்தில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கும் படிக்க வருவோருக்கும் சைக்கிள் ஓட்டவும் கற்றுக்கொடுப்பதென்பது அவருடைய சிந்தனைதான். அதற்கு உறுதுணையாக இருந்தவர், அறிவொளி இயக்கத்தின் மைய ஒருங்கிணைப்பாளரான என். கண்ணம்மாள்.
“இந்த எழுத்தறிவுத் திட்டம் குறித்து விவாதிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடந்தது. யார் இந்த எழுத்தறிவுத் திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள் என விவாதித்தபோது, பெரும்பாலும் பெண்கள்தான் இதன் பயனாளிகளாக இருப்பார்கள் எனத் தெரியவந்தது. ஆனால், தன்னார்வலர்களாக பெண்களை எடுக்க வேண்டாம், அவர்களால் போக வர முடியாது என அங்கிருந்த அலுவலர்கள் சொன்னார்கள். ஆனால், மாவட்ட ஆட்சியர் அதனை ஏற்கவில்லை.
பெண்களுக்கு பெண்கள்தான் சொல்லித்தர வேண்டும் என்றார். கடைசி வரிசையில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்து, நீங்கள் ஏதாவது சொல்லுங்கள் என்றார். இவர்கள் சொல்வதைப் போல நடந்து போனாலோ, பேருந்தில் சென்றாலோ நேரமாகும். சைக்கிள் ஓட்டத் தெரிந்த பெண்களாக பார்த்து நியமித்தால் அவர்கள் அதில் செல்வார்கள் என்றேன். சைக்கிள் ஓட்ட தெரிந்த பெண்களை நியமிப்போம் என்றேன். அதனை மாவட்ட ஆட்சியர் ஏற்றார்” என அந்தத் தருணத்தை நினைவுகூர்கிறார் என். கண்ணம்மாள்.
ஆனால், சைக்கிள் ஓட்டத் தெரிந்த பெண்கள் ஆர்வம் காட்டுவார்களா என அலுவலர்கள் சந்தேகம் எழுப்பியபோது, நீங்கள் ஆர்வமுள்ள பெண்களுக்கு கற்றுக்கொடுத்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இதையும் நம் திட்டத்தில் சேர்ப்போம் என்று குறிப்பிட்டார் மாவட்ட ஆட்சியர். இந்தத் திட்டம் ஏற்கப்பட்டது. இப்படித்தான் அறிவொளி இயக்கத்தில் வந்து சேர்ந்த பெண்களுக்கு சைக்கிள் ஓட்டவும் கற்றுக்கொடுக்கும் திட்டம் உருவானது என்கிறார் என். கண்ணம்மாள்.

மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலா ராணி சுங்கத் கூறுவது என்ன?
“எழுதப் படிக்க கற்றுக்கொடுப்பது, எண்களைக் கணக்கிட கற்றுக் கொடுப்பது, தினசரி செயல்பாடுகளுக்கு உதவும் கல்வியைக் கொடுப்பது, சமூகரீதியான கவனத்தை அளிப்பது என அறிவொளி இயக்கத்தில் மொத்தம் நான்கு பிரிவுகள் இருந்தன. ஆனால், பெண்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று வருவதற்கான வசதி மிக முக்கியம் எனத் தோன்றியது. நான் கிராமம், கிராமமாகச் செல்லும்போது எனது காரைப் பின் தொடர்ந்து ஆண்களும் இளைஞர்களும் வருவார்கள். ஆனால், பெண்கள் ஓரமாக நின்று பார்ப்பார்களே தவிர, அவர்களால் கூடவே வர முடியாது. காரணம், ஆண்களைப் போல அவர்களுக்கு சைக்கிளோ, டூ வீலரோ ஓட்டத் தெரியாது. ஆகவே, அவர்களுக்கு விரும்பிய இடத்திற்குச் சென்று வருவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது முக்கியம் எனத் தோன்றியது” என்கிறார் அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த ஷீலா ராணி சுங்கத்.
இதற்குப் பிறகு, இயக்கம் வேகமெடுத்தது. பெண்கள் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்க பலவிதங்களிலும் ஊக்கம் அளிக்கப்பட்டது. அதில் ஒன்று, இதற்கென எழுதப்பட்ட பாடல்.
“சைக்கிள் ஓட்டக் கத்துக்கனும் தங்கச்சி, வாழ்க்கைச் சக்கரத்தை சுத்திவிடு தங்கச்சி” என்று துவங்கும் அந்தப் பாடல், அந்தக் காலகட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பட்டி, தொட்டியெங்கும் ஒலித்தது.
“சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்க ஒரு பாடல் எழுதி, இசையமைக்க முடிவுசெய்தோம். நல்வாய்ப்பாக எனக்கு அந்த பாடலை எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. எழுதியது மட்டும்தான் நான். இந்தப் பாடலை தன்னார்வலர்கள் எங்கோ கொண்டுசென்றுவிட்டார்கள்” என்கிறார் இந்தப் பாடலை எழுதிய முத்து பாஸ்கரன். தமிழாசிரியரான இவர், அறிவொளி இயக்கத்தில் தன்னார்வலராக இருந்தார்.
ஆனால், பல மட்டங்களில் சின்னச் சின்னத் தடைகள் இருந்தன. முதலாவதாக, பெண்கள் ஓட்டத்தக்க பார் இல்லாத சைக்கிள்கள் பெரிய எண்ணிக்கையில் இல்லை.

பரிசுத் திட்டம்
“இருந்தபோதும் ஆண்கள் ஓட்டக்கூடிய பார் வைத்த சைக்கிளை எடுத்து பெண்கள் ஓட்டுவார்கள். அப்பா, அண்ணனின் சைக்கிளை எடுத்து குரங்கு பெடல் போட்டு பழகுவார்கள். வீட்டில் எதிர்ப்பு இருந்தால் யாருக்கும் தெரியாமல் கற்றுக்கொண்டார்கள். இதற்கிடையில், எல்லோரும் சைக்கிள் ஓட்ட ஆர்வத்துடன் முன்வர வேண்டுமென்பதற்காக ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது, மூன்று மாதங்களுக்குள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டால் குலுக்கல் முறையில் சைக்கிள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதற்கு நல்ல பலன் இருந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள்” என்கிறார் கண்ணம்மாள்.
இந்தப் பரிசுத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 63,000. விண்ணப்பிக்காதவர்களையும் சேர்த்தால் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த காலகட்டத்தில் சைக்கிள் ஓட்ட பழகியிருப்பார்கள் என்கிறார் என். கண்ணம்மாள்.
மேலும், இந்தியன் வங்கியில் பேசி பெண்களுக்கு குறைந்த மாதத் தவணையில் சைக்கிள் வாங்கிக் கொடுக்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷீலா ராணி சுங்கத்.
இதனால் புதுக்கோட்டையில் சைக்கிள் விற்பனை வெகுவாக அதிகரித்தது. அந்தத் தருணத்தில், மூத்த பத்திரிகையாளர் பி. சாய்நாத் இந்த இயக்கம் குறித்து எழுதிய “லேடீஸ் சைக்கிள்” கட்டுரையில் சைக்கிள் விற்பனை 350 மடங்கு அதிகரித்ததாகச் சொல்கிறார்.
அந்தத் தருணத்தில் புதுக்கோட்டையில் இரண்டு சைக்கிள் கடைகள் இருந்தன. அதில் ஒரு கடை ராம் சைக்கிள் கம்பனி. “மாவட்ட ஆட்சியாளர் சைக்கிளின் விலையைக் குறைத்துக் கொடுக்க வேண்டும் என்று சொன்னதால், அடக்க விலைக்கே கொடுத்தோம். சுமார் 2,500 ரூபாய்க்குக் கொடுத்தோம்” என்கிறார் அந்தக் கடையின் உரிமையாளரான கோபிநாத்.
பட மூலாதாரம், P. Sainath/PARI
மாற்றப்பட்ட பாடல்
மாவட்ட ஆட்சித் தலைவர் தந்த ஊக்கம், தன்னார்வலர்களின் உற்சாகம், கற்றுக்கொள்ள வந்த பெண்களின் ஆர்வம் எல்லாம் சேர, பெரும் எண்ணிக்கையில் பெண்கள் சைக்கிள் கற்றுக்கொண்டார்கள். அந்தத் தருணத்தில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்கப்படுத்துவதற்காக எழுதப்பட்ட பாடலை மாற்ற வேண்டியிருந்தது. பெண்கள் பெருமளவில் சைக்கிள் கற்றுக்கொண்ட பிறகும், “சைக்கிள் ஓட்டக் கத்துக்கனும்” எனப் பாட முடியாது என்பது புரிந்தது.
“மாவட்ட ஆட்சித் தலைவரோடு ஒரு கிராமத்திற்கு போயிருந்தோம். அங்கிருந்த ஒரு வயசான அம்மாவைப் பார்த்து நீங்கள் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டீர்களா என்றார் ஆட்சியர். அதற்கு அந்தப் பெண்மணி, சைக்கிளைக் கொண்டுவரச் சொல்லுங்க, உங்களை உட்கார வைத்து ‘டபுள்ஸ்’ அடிக்கிறேன் என்றார். பிறகு அவர் ஓட்டியும் காண்பித்தார். அப்போது ஆட்சியர் என்னைத் திரும்பிப் பார்த்து, ‘பாட்டை மாற்றுங்கள்’ என்றார். அந்தத் தருணத்திலேயே எனக்கு முதல் வரி உருவாகிவிட்டது. ‘சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்டோம் அண்ணாச்சி, வாழ்க்கைச் சக்கரத்தை சுத்திவிட்டோம் அண்ணாச்சி” என மாற்றினேன்” என அந்தத் தருணத்தை நினைவுகூர்கிறார் முத்து பாஸ்கரன்.
இதற்குப் பிறகு புதுக்கோட்டையில் பெண்கள் பங்கேற்கும் வகையில் மிகப் பெரிய சைக்கிள் ஊர்வலம் ஒன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் சைக்கிளுடன் பங்கேற்ற அந்த ஊர்வலம் புதுக்கோட்டையின் மனநிலையையே மாற்றியது.
பட மூலாதாரம், P. Sainath/PARI
பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதால் என்ன நடந்தது?
“அவர்கள் போக்குவரத்திற்காக ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றானது. தைரியம் வந்தது. நேரம் மிச்சமானது. நாம் இரண்டாம் பட்ச பிரஜை என்ற எண்ணம் போனது. இதை ஓட்ட முடியுமானால் எதை வேண்டுமானால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு வந்தது. தினமும் செய்தாக வேண்டிய வேலைகள், ஆண்கள் விதித்திருந்த தடைகள் எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெறும் வழியை சைக்கிள் ஓட்டுவது காட்டியது” என்கிறார் என். கண்ணம்மாள்.
”விரும்பிய இடத்திற்கு சுதந்திரமாகச் செல்வதுதான் ஆண்களையும் பெண்களையும் வித்தியாசப்படுத்துகிறது; பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டபோது விடுதலை உணர்வையும் பெரும் தன்னம்பிக்கை உணர்வையும் பெற்றார்கள், அதுதான் இந்த இயக்கத்தின் மிக முக்கியமான பலன்” என்கிறார் ஷீலா ராணி சுங்கத்.
இப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவது என்பது பெரிய விஷயமல்ல. அந்தக் காலம் கடந்துவிட்டது. அப்போது சைக்கிள் ஓட்டப் பழகிய பெண்களே இப்போது சைக்கிள் ஓட்டுவதில்லை. பலர் ஸ்கூட்டி போன்ற இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பலர் வீட்டில் கார்கள் இருக்கின்றன.
பாதைகள் இல்லாத கிராமத்தில் இந்த சைக்கிள் பெண்கள் புதிய பாதையை வகுத்தார்கள். பொருளாதார நலன்கள் மட்டுமல்ல, இதனால் அவர்களுக்குக் கிடைத்த சுயமரியாதை உணர்வு எல்லாவற்றையும்விட மிகப் பெரியதாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பெண்கள் ஒவ்வொருவரிடமும் இந்த உணர்வை இப்போதும் பார்க்க முடிகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு