புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என முதல்வர் ரங்கசாமி டெல்லிக்கு சென்று கேட்டால் தருவார்கள் என பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட சி.பி.ராதா கிருஷ்ணன் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம். பாஜகவில் அடிப்படை தொண்டனாக இருப்பவர் கூட மிகப் பெரிய உயரத்தை எட்டலாம் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
பிரதமர் தமிழகத்தின் மீது எவ்வளவு அக்கறையும், அன்பும் காட்டுகிறார் என்பதை இது நமக்கு காட்டுகிறது. ஏற்கெனவே அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு எவ்வளவு பெருமை சேர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தபோது தமிழகத்தில் திமுக அதற்கு தடையை ஏற்படுத்தி வராமல் செய்தார்கள். அதுபோல் இதில் செய்யாமல் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்ளப்போகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வரும்.
தேசத் தலைவர்களை தாழ்த்தி பேசுவது முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கைவந்த கலையாக உள்ளது. எந்தவித அரசியலும் தெரியாமல் வீர சாவர்க்கர் குறித்து தாறுமாறாக பேசி வருகிறார். கண்ணுக்கு தெரிந்த எதிரி பாஜக-என்.ஆர்.காங்கிரஸ், கண்ணுக்கு தெரியாத எதிரிகளும் உள்ளனர் என நாராயணசாமி கூறியுள்ளார். அவர்கள் கட்சியிலேயே எதிரிகள் இருக்கின்றனரா அல்லது கூட்டணி கட்சிக்குள் நம்பிக்கையற்ற தன்மை நிலவுகிறதா என்பது தெரியவில்லை. அவருக்கு அவருடைய கட்சியின் மீதே சந்தேகம் இருக்கிறது.
நாங்கள் திடமான முடிவோடு எல்லா சாதனைகளையும் செய்துவிட்டு தேர்தல் களத்துக்கு செல்கிறோம். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி, முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆட்சியமைக்கும். புதுச்சேரியில் பாஜக-அதிமுக கூட்டணி என்பது உண்டு.
தொகுதி பங்கீடு குறித்து எங்களது தேசிய தலைமை, அதிமுகவுடன் பேசி முடிவு செய்வார்கள். அமைச்சர் ஜான் குமாருக்கு இலாகா ஒதுக்குவது தொடர்பாக முதல்வரிடம் உடனடியாக கலந்தாலோசித்து விரைவில் கிடைக்க ஆவணம் செய்யப்படும்.
புதுச்சேரி மாநில மக்கள் அனைவரின் ஆசையும் மாநில அந்தஸ்து வேண்டும் என்பது தான். அதனை முதல்வர் டெல்லிக்கு சென்று கேட்டால் தருவார்கள்” என்று அவர் கூறினார். அப்போது மாநில செய்தி தொடர்பாளர் அருள் முருகன், ஊடக பிரிவு தலைவர் நாகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிந்தனர்.